ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சகஸ்ரநாமம்


ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சகஸ்ரநாமம்
x

ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றியும் ஸ்படிக மாலை என்ற அற்புதமான ஒரு பண்பை பற்றியும் காண்போம்.

ஒரு முறை 1950-களில், வானொலி நிருபர் ஒருவர், காஞ்சி பெரியவரான சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை பேட்டி எடுத்தார். அப்போது அதனை டேப்ரிக்கார்டரில் பதிவு செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காஞ்சி பெரியவர், அந்த நிருபரிடம் "மிகவும் பழமையான முதன் முதலில் தோன்றிய வாய்ஸ் ரிகார்டர் எது என்று தெரியுமா?" என்று கேட்டார். நிருபருக்கு பதில் தெரியவில்லை. இப்போது காஞ்சி பெரியவர் மற்றொரு கேள்வியைக் கேட்டார், "விஷ்ணு சகஸ்ரநாமம் நமக்கு எப்படிக் கிடைத்தது?". அதற்கு அந்த நிருபர், "குருசேத்திரப் போரில் அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மரால், விஷ்ணுவின் 1000 திருநாமங்களும் நமக்கு கிடைத்தது" என்றார். காஞ்சி பெரியர் மீண்டும் ஒரு கேள்வியை முன் வைத்தார். "நீங்கள் சொன்னது சரிதான். ஆனால் குருச்சேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?" என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு நிருபரிடம் பதில் இல்லை. அதற்கான பதிலை, காஞ்சி பெரியவரே சொல்லத் தொடங்கினார்.

பீஷ்மர், ஸ்ரீகிருஷ்ணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சகஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, பஞ்ச பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்த பின்புதான் அனைவரும் விழிப்படைந்தனர். முதலில் யுதிஷ்டிரர் பேசினார், "பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும், அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். அதனால் தற்போது நாம் அந்த அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்" என்றார். அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர். பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரிடம், "ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா?" என்று கேட்டார்.

ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், "என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சாரியர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்" என்றார். அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், "ஹே.. வாசுதேவா, நீ அனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைக்கூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும். அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேண்டும். அது தங்களால் மட்டுமே முடியும்" என்று வேண்டினர். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர், "இதனைச் செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்" என்றார்.

எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கிருஷ்ணன் தொடர்ந்தார், "சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்" என்றார். அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். அதை புரிந்து கொண்ட கிருஷ்ணர் மேலும் கூறினார், "உங்கள் அனைவரில், சகாதேவன் மட்டுமே 'சுத்த ஸ்படிக' மாலை அணிந்திருக்கிறான். அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக் கொள்ளும் குணம் ஸ்படிகத்திற்கு உண்டு. 'ஸ்வதம்பரராகவும்' 'ஸ்படிகமாகவும்' இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும். அதன்படி சகாதேவன், சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ஸ்படிகம் உள்வாங்கியுள்ள சகஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்வார்" என்றார்.

இதையடுத்து சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். சகாதேவன், சிவபெருமானை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் தொடங்கினான். இப்படித்தான் நமக்கு விஷ்ணுவின் சகஸ்ரநாமம் கிடைத்தது. எனவே ஸ்படிகம் தான் இந்த உலகின் முதல் வாய்ஸ் ரிக்கார்டர் என்று முடித்தார், காஞ்சி பெரியவர்.


Next Story