வெற்றிகரமான வாழ்க்கை வேண்டுமா?


வெற்றிகரமான வாழ்க்கை வேண்டுமா?
x

உண்மையான இறை விசுவாசிகளின் எதிர்பார்ப்பு மறுமையில் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும், இறையருளால் சொர்க்கத்தை பரிசாகப்பெற வேண்டும் என்பது தான்.

ஆனால் மனித வாழ்க்கை எப்படி இருக்கிறது?

ஆசைகள், எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக பலரது வாழ்க்கை காணப்படுகிறது. இன்ப, துன்பங்கள் மாறிமாறி வருவதாக இன்றைய வாழ்க்கை அமைந்துள்ளது. யாராக இருந்தாலும் சரி, அவர் பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், அதிகாரத்தில் இருந்தாலும், அடங்கி நடப்பவராக இருந்தாலும், ஏற்ற இறக்கம் நிறைந்ததாக, இன்ப துன்பங்கள் நிறைந்ததாக, ஏமாற்றம் மகிழ்ச்சி நிறைந்ததாக வாழ்க்கைச்சக்கரம் சுழலுகிறது.

இத்தனை சோதனைகளுக்கும் மத்தியில் இறை நேசர்கள், இறைவனின் நல்லடியார்கள், இறைவனின் திருப்பொருத்தத்தை நாடுபவர்கள் தங்கள் வாழ்க்கையை அல்லாஹ் காட்டிய வழியிலும், திருக்குர்ஆன் கூறியபடியும், நபிகளார் வாழ்ந்து காட்டிய முறையிலும் அமைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் எண்ணம், கனவு, லட்சியம் எல்லாம் இறைவனின் அருளைப் பெற்று சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதாக மட்டுமே இருக்கும்.

ஆனால், மாறுபட்ட எண்ணம் கொண்டவர்கள் வாழ்க்கையோ 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்ற ரீதியில் காணப்படுகிறது. அவர்களின் நோக்கம் எல்லாம் இந்த உலக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், இந்த உலக வாழ்க்கையில் உள்ள இன்பங்களை எப்படியாவது அனுபவித்து முடித்துவிட வேண்டும் என்பதாக மட்டுமே உள்ளது.

இவர்கள் இரு தரப்பில் இறைவழியில் நடந்தவர் தான் வெற்றியான வாழ்க்கையை வாழ்ந்தவராக இருப்பார். மறுமையில் அவருக்கு சொர்க்கம் பரிசாக கிடைக்கும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வின் மூலம் அறியலாம், வாருங்கள்.

ஒரு நாள் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு வானவர்கள் சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர், 'முஹம்மது (ஸல்) அவர்களின் செயல்களுக்கு ஒரு நல்ல உதாரணம் இருக்கிறது. அதை சொல்லலாம் என்றால் அவர் தூங்கிக் கொண்டு இருக்கிறாரோ ?' என்று கூறினார்.

உடன் வந்தவர், 'அவரின் கண்கள் தான் தூங்கிக் கொண்டு இருக்கும். ஆனால் அவரது உள்ளம் விழிப்புடன் தான் இருக்கும். எனவே நீங்கள் சொல்ல வந்ததை சொல்லுங்கள். அவர் புரிந்து கொள்வார்' என்று கூறினார்.

இதையடுத்து முதலில் பேசியவர் இவ்வாறு கூறினார்:

ஒருவர் அழகான வீடு ஒன்றை கட்டினார். உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து விழா நடத்தி விருந்து கொடுக்க விரும்பினார். இதற்காக 'அழைப்பாளர்' ஒருவரை நியமித்தார். அவர் மூலம் தனது உற்றார், உறவினர்கள், நண்பர்களை அழைத்துவர ஏற்பாடு செய்தார். இந்த அழைப்பை ஏற்று பலரும் அவரது வீட்டிற்கு வந்தனர். வீட்டின் அழகான வடிவமைப்பை பார்த்து மகிழ்ந்தனர். அங்கு நடந்த விருந்து உபசரிப்பிலும் கலந்து கொண்டு அறுசுவை உணவை உண்டார்கள். ஆனால் இந்த அழைப்பை ஏற்காதவர்கள் அந்த வீட்டிற்கு வரமுடியாமல் போனதோடு மட்டுமின்றி, அறுசுவை உணவையும் ருசிக்கும் வாய்ப்பை தவற விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனே மற்றொரு வானவர், 'இந்த நிகழ்வின் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்பதை விளக்கமாக கூறுங்கள். அப்போது தான் அனைவரும் அதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்' என்றார்.

இதற்கு பதில் அளித்து அந்த வானவர் இவ்வாறு விளக்கமாக கூறினார்:

'வீடு' என்பது 'சுவர்க்கம்'. அந்த வீட்டை அமைத்தவன் இறைவன். அந்த வீட்டில் நடக்கும் விருந்து உபசரிப்பு என்பது சொர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள். அந்த விருந்து உபசரிப்புக்கு வருமாறு கூறும் 'அழைப்பாளர்' என்பவர் இதோ இந்த முகம்மது (ஸல்) நபிகள் தான். இவரின் அழைப்பை மதித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், இறைவன் அமைத்த சுவனத்தில் நுழைந்து, அங்குள்ள வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வார். அழைப்பை ஏற்காதவர் சுவனத்தில் நுழைய மாட்டார், அதன் இன்பங்களையும் பெறமாட்டார்.

இவ்வாறு விளக்கம் அளித்துவிட்டு அந்த வானவர்கள் மறைந்து விட்டனர்.

(ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளதாக புகாரி நூலில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது) நபிகளார் அனுப்பப்பட்டதன் நோக்கம் குறித்து இறைவன் குறிப்பிடும் போது, 'நபியே உம்மை அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளேன்' (திருக்குர்ஆன் 21:107) என்று கூறி இருக்கிறார்.

உலக மக்கள் அனைவருக்கும் அருளாகவே நபிகளார் அனுப்பப்பட்டார்கள். அதனால் தான் அருள் நிறைந்ததாக இந்த உலகம் மாறியது. ஆனால் மறுமையின் வாழ்வு தான் அழியாத வாழ்வு. அந்த வாழ்வும் மகிழ்ச்சி நிறைந்ததாக, அருள் நிறைந்ததாக அமைய வேண்டும். இதற்கு பெருமானார் சொல், செயல் அனைத்தையும் ஏற்று நடந்தால் தான் ஈடேற்றம் பெற முடியும்.

இதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு, சொர்க்கம் நுழைந்து சுகம் பெறக்கூடியவர்களாக வல்ல இறைவன் அல்லாஹ் நம் வாழ்க்கையை ஆக்குவானாக, ஆமீன்.

வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, சென்னை .


Next Story