இயேசுவின் போதனை: கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்


இயேசுவின் போதனை: கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்
x

“தட்டுங்கள், திறக்கப்படும்” என்பது இறைவனின் விண்ணக வாசலைக் குறிக்கிறது. விண்ணகத்துக்குள் நுழைய வேண்டுமெனில் அன்பின் செயல்களைச் செய்ய வேண்டும்.

இயேசுவின் போதனைகளில் மிகவும் பிரபலமான, சுருக்கமான போதனை இது:

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும் (மத்தேயு 7:7,8)

ஆன்மிக வெளிச்சத்தில் "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்பது, இறைவனிடம் வேண்டுதல் செய்வதைக் குறிக்கிறது. நம்முடைய தேவைகளுக்காக மட்டுமல்லாமல், பிறருடைய தேவைகளுக்காகவும் வேண்டுதல் செய்ய வேண்டும். அதுவும், உலகச் செல்வங்களுக்காக இல்லாமல் இறைவனின் இயல்புகளுக்காகவும், விண்ணகச் செல்வங்களுக்காகவும் வேண்டுதல் செய்ய வேண்டும்.

"தேடுங்கள் கண்டடைவீர்கள்" என்பது இறைவனைத் தேடுவதைக் குறிக்கிறது. விவிலியத்தின் வார்த்தைகளின் வழியாகவும், இறைவாக்கினர்களின் வாழ்க்கை வழியாகவும், ஆன்மிகத் தலைவர்களின் போதனைகள் வழியாகவும் இறைவனைத் தேடவேண்டும். உலகச் செல்வங்களுக்கான தேடலை விட அதிகமாய் நாம் இறைவனை, அவரது குணாதிசயங்களை, அவருக்கு ஏற்புடையவற்றைத் தேடவேண்டும்.

"தட்டுங்கள், திறக்கப்படும்" என்பது இறைவனின் விண்ணக வாசலைக் குறிக்கிறது. விண்ணகத்துக்குள் நுழைய வேண்டுமெனில் அன்பின் செயல்களைச் செய்ய வேண்டும். மனிதநேயம் நிறைந்த வாழ்க்கை வாழவேண்டும். இறைவன் மீது ஆழமான விசுவாசம் கொண்டிருக்க வேண்டும் என்கிறது பைபிள்.

அத்தகைய அன்பின் செயல்களை விளக்கு களாய் ஏந்திச் செல்லும் போது தெய்வமகனாம் இயேசு அமர்ந்திருக்கும் விண்ணகக் கதவு நமக்காய் திறக்கும். நம் இதயக் கதவுகளை இயேசு தட்டும்போது நாம் திறந்தால், நாம் விண்ணகக் கதவுகளைத் தட்டும்போது அவர் திறப்பார்.

இதே போதனை, ஆன்மிகம் தாண்டிய உலக செயல்களிலும் கச்சிதமாகப் பொருந்துவதைக் காணலாம். உதாரணமாக, அலுவலக வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், கேட்பவர்களுக்கே பதில்கள் கிடைக்கின்றன. கேள்விகளைக் கேட்காமல் அறிவையும், திறமையையும் வளர்த்தெடுக்க முடியாது. கேட்காமல் அடுத்தடுத்த பதவிகளையோ, பொறுப்புகளையோ பெற முடியாது.

எனவே கேளுங்கள். மிக சாதாரணமாக நம்ம ஊரில் பேசப்படும் 'அழற பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும்' எனும் பழமொழியும் இதைத் தானே சுட்டுகிறது.

'தட்டுங்கள் திறக்கப்படும்' என்பது, நாம் அலுவலகத்தின் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல நம்முடைய திறமைகளால் வாய்ப்புகளைத் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. அடுத்த நிலைகளுக்குச் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

நமக்கு என்ன தேவை என்பதைக் கேட்பதும், நமக்குச் சரியானது எது என்பதைத் தேடுவதும், நமக்கானக் கதவைத் தட்டுவதும் நம்மை அலுவலக வாழ்க்கையிலும் உயர்த்தும்.

குடும்ப வாழ்க்கையிலும் உங்கள் எதிர்பார்ப்புகளைக் கேளுங்கள், மன வருத்தங்களை நீக்கும் வழிகளைத் தேடுங்கள், மகிழ்வான வாழ்வுக்காய் இதயக் கதவுகளைத் தட்டுங்கள்.


Next Story