விவசாயிகளின் ஒற்றுமை


விவசாயிகளின் ஒற்றுமை
x
தினத்தந்தி 14 March 2018 9:30 PM GMT (Updated: 14 March 2018 6:27 PM GMT)

‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே’ என்று பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. காலம் காலமாக நமது முன்னோடிகள் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே’ என்று பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. காலம் காலமாக நமது முன்னோடிகள் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், ஒற்றுமையாக எந்தக்காரியத்தையும் கையில் எடுத்தால் நிச்சயமாக வெற்றி காணமுடியும் என்பதை மராட்டிய மாநில விவசாயிகள் நிரூபித்து விட்டார்கள். வனப்பகுதிகளில் காலம் காலமாக விவசாயம் செய்துவரும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு, வன உரிமைகள் சட்டத்தின்கீழ் அந்த நிலங்களை சொந்தமாக்க வேண்டும். கடன் ரத்து, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கைக்கேற்ப, விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உற்பத்தி செலவிலிருந்து 1½ மடங்காக நிர்ணயிக்க வேண்டும். நதிநீர் இணைப்பு  திட்டதை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டிய மாநிலத்தின் நாசிக் நகரிலிருந்து மும்பைக்கு ஏறத்தாழ 40 ஆயிரம் விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். ஏறக்குறைய 200 கி.மீட்டர் தூரத்தையும் ஏராளமான பெண்களும், ஆண்களும் தலையில் சிவப்பு குல்லாய் அல்லது துண்டு அணிந்து எங்கு பார்த்தாலும் செந்நிறபடை வந்தது போல அலைபோல் திரண்டு வந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய பிரிவான அகில இந்திய கிசான் சபா என்று அழைக்கப்படும் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த பேரணிக்கு, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன. விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானதுதானே என்ற வகையில், வழிநெடுக பொதுமக்கள் அவர்களை வரவேற்றதோடு மட்டுமல்லாமல், குடிதண்ணீர், உணவு, மருத்துவ உதவி போன்றவற்றையும் வழங்கினர். பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்று பொழுது விடியும் முன்பே விவசாயிகள் மும்பை நகருக்குள் ஊர்வலமாக வந்து ஆசாத் மைதானத்தில் கூடியிருந்தனர். விவசாயிகளின் ஒற்றுமையைக் கண்ட மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்தை நடத்தி, உடனடியாக இரு கோரிக்கைகளை நிறைவேற்றினார்.

வனப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக பயிரிடும் விவசாயிகளுக்கு அந்த நிலத்தை அவர்களுக்கே பட்டா போட்டுக் கொடுக்கும் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. இதுபோல, விவசாயிகளின் கடன் ரத்துதிட்டத்தின்படி 2009–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டுவரை வாங்கிய கடன்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டு வந்தது. இதை 2001–ம் ஆண்டு முதல் கடன் வாங்கியவர்கள் கடனை ரத்து செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு 1½ மடங்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக நிர்ணயிப்பது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே மத்திய அரசாங்கம் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டிருப்பதால் இந்த கோரிக்கை குறித்தும் மற்ற கோரிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து முடிவுகளை அறிவிக்க அரசு பிரதிநிதி, விவசாய சங்க பிரதிநிதி கொண்ட ஒரு குழு அமைப்பதாகவும் அரசு உறுதி அளித்துள்ளது. மராட்டிய மாநில விவசாயிகளின் ஒற்றுமை அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வழிவகுத்துள்ளது. தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் இதையே ஒரு பாடமாகக் கொண்டு மத்திய அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஓரணியில் நிற்கவேண்டும். குறிப்பாக, இதேபோல ஒற்றுமையாக இருந்தால், காவிரி மேலாண்மை வாரியம் என்ன! வேறு எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற செய்யலாம் என்று மராட்டிய விவசாயிகள் செய்து காட்டி விட்டனர்.

Next Story