இலவசங்கள் இல்லாத பட்ஜெட்


இலவசங்கள் இல்லாத பட்ஜெட்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-14T21:45:57+05:30)

எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்று 3–வது ஆண்டு இன்று நிறைவடைகிறது.

டப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்று 3–வது ஆண்டு இன்று நிறைவடைகிறது. அடுத்த சிலமாதங் களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்,  9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு முழுமையாக பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது, இடைக்கால பட்ஜெட்தான். அந்தவகையில் அ.தி.மு.க. அரசு சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட்டை நேற்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் 10–வது பட்ஜெட் இது. எனவே, இது தேர்தலை மையமாக வைத்து வெளியிடும் பட்ஜெட்டாக இருக்கும், நிறைய இலவசங்கள், மானியங்கள் அறிவிக்கப்படும், மக்களை கவரும் பல திட்டங்கள் வரும் என்றெல்லாம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் எதுவும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இல்லை. தமிழ்நாட்டின் நிதிநிலை அதற்கு இடம் கொடுக்காது என்பதை வரவு–செலவு கணக்கை பார்த்தால் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தேர்தல் நேரங்களில் மக்களிடம் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் வாரி வாரி வழங்கும் அறிவிப்புகளை வெளியிடுவதும், பின்னர் அதைத்தொடர்ந்து நிறைவேற்ற நிதி இல்லாமல் தள்ளாடும் நிலையில், கடனுக்குமேல் கடனாக வாங்கிக் கொண்டே போவதும் மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. அந்தவகையில், மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில்கொண்டு, பல வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள மொத்தக்கடன் 2020–21–ம் ஆண்டில் ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாகவும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் இது 21.83 சதவீதமாகவும் இருக்கும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 2019–2020–ம் ஆண்டு தமிழக அரசின் மொத்தக்கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கடுமையான நிதி பற்றாக்குறை இருந்தாலும், புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மூலதன திட்டங் களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் பல அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளதை வரவேற்கத்தான் செய்யவேண்டும். ஒரு வகையில் பார்த்தால் இலவசங்கள், மானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வளர்ச்சித்திட்டங்கள், வேளாண் திட்டங்கள், நீர்ப்பாசன திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள துணிச்சலான பட்ஜெட். ஆனால், பட்ஜெட்டில் இல்லை என்றாலும், தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரிலும், குளிர்கால கூட்டத்தொடரிலும் 110–வது விதியின் கீழ் முதல்–அமைச்சர் தேர்தலை இலக்காக வைத்து பல அறிவிப்புகளை வெளியிடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகளுக்கு ரூ.1,100 கோடி பயிர்க்கடன் கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்குவது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். 

அத்திக்கடவு–அவினாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு, காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் முதல்கட்ட இணைப்பு கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு உள்பட பல நீர்ப்பாசன திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது, நிச்சயமாக எதிர்காலத்தில் விவசாய வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும். இதுபோல, பல்வேறு உள்கட்ட மைப்பு வசதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. படித்த வேலையில்லா இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர் களாக மாறும் வகையிலான திட்டங்களுக்கான திட்ட முதலீடு வரம்பு, மானிய வரம்பு, மூலதன மானியம் உயர்த்தப்பட் டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு விபத்து காப்பீட்டுத் திட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. நிர்பயா நிதி மூலம் அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப் படும் என்ற அறிவிப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங் களுக்காக ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங் களுக்கு ஒப்புதல் வழங்கியதுபோல, தண்ணீர் பற்றாக்குறை உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க வேண்டும். மொத்தத்தில், எதிர்பார்த்த இலவசங்கள் இல்லை என்றாலும், எதிர்பாராத பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Next Story