மதுரை ஐகோர்ட்டு தந்த நம்பிக்கையூட்டும் தீர்ப்பு!


மதுரை ஐகோர்ட்டு தந்த நம்பிக்கையூட்டும் தீர்ப்பு!
x
தினத்தந்தி 1 July 2020 3:15 AM IST (Updated: 30 Jun 2020 11:51 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை- மகன் இருவரும் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நேரத்தில் இறந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி என்றஒரு ஆங்கில பழமொழி உண்டு. அதுபோல, தமிழ்நாட்டு மக்கள் நேற்று, மதுரை ஐகோர்ட்டு கிளை சாத்தான்குளம் சம்பவத்தில் என்ன நடவடிக்கைக்கு உத்தரவிடப்போகிறது? என்று உற்று நோக்கிக்கொண்டிருந்தார்கள். நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் அளித்த அதிரடி தீர்ப்பு மக்கள் மனதில் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை- மகன் இருவரும் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நேரத்தில் இறந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் தாங்களாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலை 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேதபரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோவில் பதிவுசெய்ய வேண்டும். பின்னர், அதை ஒரு சீலிட்ட கவரில் வைத்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால், 24-ந்தேதி நடந்த பிரேதபரிசோதனை அறிக்கையை 26-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் ‘தினத்தந்தி’யில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, பிரேதபரிசோதனை அறிக்கை அன்றே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்தநிலையில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ஊடரங்கு நேரத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்துவைத்திருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரிடம் போலீசார், கடையை மூடச்சொன்ன நேரத்தில், முடியாது என்று தகராறு செய்ததாகவும், போலீசாரை ஆபாசமாக திட்டி கடைக்கு முன்னால் உட்கார்ந்து போக மறுத்து, அவர்களே தரையில் உருண்டு, புரண்டு காயம் ஏற்படுத்திக்கொண்டதாகவும், இந்த சம்பவம் இரவு 9.15 மணிக்கு நடந்ததாகவும் குறிப்பிட்டுள் ளனர்.

ஆனால், நேற்று முன்தினம் தந்தி டி.வி உள்பட பல ஊடகங்களில் காட்டப்பட்ட வீடியோ காட்சிகளில், போலீசார் அங்கு வந்த நேரம் இரவு 7.40 மணி. கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஜெயராஜ், ரோட்டுக்கு அந்தப்பக்கம் நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, ரோட்டைத்தாண்டி நடந்துசென்று ஏறியதும், அந்த வாகனம் புறப்பட்டுச்சென்ற சற்றுநேரத்தில் வெளியே வந்த பென்னிக்ஸ், தன் நண்பரின் மோட்டார் சைக்கிளில் பின்புறம் ஏறிச்சென்றதும் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிப்படி, அவர்கள் இருவரும் ஒன்றாக அங்கு இல்லை. அங்கு எந்த தகராறும் நடக்கவில்லை. இருவரும் தனித்தனியாக சென்றிருக்கிறார்கள்.

இந்தநிலையில், நேற்று ஐகோர்ட்டில் இதுபற்றி விசாரித்த நீதிபதிகள் அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் ஏராளமான, மிக மோசமான காயங்கள் இருந்தது பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை பிரேதபரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. பிரேதபரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. மாஜிஸ்திரேட்டு விசாரணையை அனுமதிக்காத காவல்துறை, சி.பி.ஐ. விசாரணையை முறையாக நடக்க எப்படி அனுமதிக்கும்? பல அனுமதிகளை பெற்று சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் முன், சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.சி.பி.ஐ. விசாரிக்கும் வரை நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும், ஒரு நொடி கூட தாமதிக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், தலைமைக் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலத்தில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய அடித்தது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நீதி என்றைக்கும் மறையாது. அது எப்படியாவது தலையெடுத்து நிலைநாட்டும் என்ற நம்பிக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பின் மூலம் மக்களுக்குஓர் அசைக்க முடியாத எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story