இதுதான் மோடியின் துணிச்சல்!


இதுதான் மோடியின் துணிச்சல்!
x
தினத்தந்தி 19 Sep 2021 7:49 PM GMT (Updated: 19 Sep 2021 7:49 PM GMT)

பிரதமர் நரேந்திரமோடியின் அரசியல் பயணம் குஜராத்தில் தொடங்கி, டெல்லி வரை சென்றடைந்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடியின் அரசியல் பயணம் குஜராத்தில் தொடங்கி, டெல்லி வரை சென்றடைந்துள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 71-வது பிறந்தநாளை கொண்டாடிய மோடியின் அரசியல் பயணத்தில், அவர் அடைந்த வெற்றிகளுக்கு காரணம் பல இருந்தாலும், துணிச்சல் எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. இது முடியுமா? என்று எல்லோரும் நினைத்தால், “அது முடியும், நிச்சயமாக முடியும், உறுதியாக செய்து முடிப்பேன்” என்ற வகையில், நினைத்ததை நடத்தியே முடிப்பவராக செயல்படுகிறார். எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க.வை வளர்ப்பதற்காக முயற்சிகள் எடுத்துவரும் நரேந்திரமோடியும், அமித்ஷாவும் தமிழ்நாட்டின் மீதும் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பதை கருத்தில்கொண்டு, அதை வளர்ப்பதற்காக 44 வயதான முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை மத்திய இணை மந்திரியாக்கி, 37 வயதான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைவராக நியமித்துள்ளார். இளமையையும், துடிப்பையும் களத்தில் இறக்கியுள்ளார். மத்திய மந்திரியாக வேண்டுமென்றால், மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ உறுப்பினராக இருக்கவேண்டும். தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட எல்.முருகனுக்கு வாய்ப்பில்லை என்றாலும், மிகத் துணிச்சலாக மத்திய இணை மந்திரியாக்கி, இப்போது மத்தியபிரதேச மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக இறக்கியுள்ளார்.

இதேபோல, குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையில் இருந்த 22 பேர் கொண்ட அமைச்சரவையையும் ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அமைத்துள்ளார். இதில், முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் உள்பட 22 பேர் புதுமுகங்கள். இதுவரையில் அமைச்சராக இருந்த அனுபவம் இல்லாதவர்கள். மேலும் 3 பேர் பல வருடங்களுக்கு முன்பு பா.ஜ.க. அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையையே பதவியிலிருந்து நீக்கியது இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். என்றாலும், இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மோடிக்கு புதிதல்ல. 2005-ம் ஆண்டு அவர் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தது. அப்போது ஏற்கனவே பதவியில் இருந்தவர்களுக்கு இடமில்லை, எல்லாமே புதுமுகம்தான் என்று புதிய வேட்பாளர்களை போட்டியிடச் செய்தார். அதில் வெற்றியும் கண்டார். அந்த அனுபவம்தான், அந்த வெற்றிதான் இப்போது ஒட்டுமொத்த அமைச்சரவையையும் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, முதல்-மந்திரி உள்பட புது முகங்களை பதவியேற்க வைத்துள்ளது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.

புதிய அமைச்சரவையில் எல்லா சாதிகளுக்கும், குஜராத்தில் எல்லா பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. குஜராத் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மோடிதான். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி கோலோச்சிக் கொண்டிருந்த குஜராத் மாநிலத்தில், பா.ஜ.க.வை அசைக்க முடியாத சக்தியாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றவர்களில் நரேந்திரமோடிக்கு முக்கிய பங்குண்டு. 1995, 1996-ம் ஆண்டுகளிலும், தொடர்ந்து 1998-ம் ஆண்டு மார்ச் 4-ந்தேதி முதல் இன்று வரையிலும் குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க.வே ஆளுங்கட்சியாக இருந்துவருகிறது. 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி முதல் 2014-ம் ஆண்டு மே 22-ந்தேதி வரை முதல்-மந்திரியாக இருந்த நரேந்திரமோடி, குஜராத் மாநிலத்திலேயே அதிக ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த பெருமையை, புகழை பெற்றுள்ளார்.

அடுத்த ஆண்டு குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இவ்வளவு நாள் தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ.க.வை மாற்றிப்பார்த்தால் என்ன? என்ற உணர்வோ, பா.ஜ.க. மீது சோர்வோ மக்களுக்கு ஏற்படக்கூடாது என்ற வகையில், ஒட்டுமொத்த அமைச்சரவையையே காலி செய்துவிட்டு புது முகங்களை களத்தில் இறக்கி, மக்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கையையும், பா.ஜ.க.வை மீண்டும் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்த இந்த முயற்சியில் மோடி இறங்கியிருக்கிறார்.

Next Story