பஞ்சாப் அரசியல் ஆட்டம் பலிக்குமா?


பஞ்சாப் அரசியல் ஆட்டம் பலிக்குமா?
x
தினத்தந்தி 21 Sep 2021 7:46 PM GMT (Updated: 21 Sep 2021 7:46 PM GMT)

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும், டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும், டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இப்போதே பா.ஜ.க. தன் முயற்சிகளை தொடங்கிவிட்டது. ஒட்டுமொத்த மந்திரி சபையையே காலிசெய்துவிட்டு, புதுமுக மந்திரி சபையை அமைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. ஏற்கனவே, விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது ஒரு சாதகமான நிலையாக கருதப்பட்டாலும், பா.ஜ.க. ஒரு புறமும், சிரோமணி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றொரு புறமும் காங்கிரசை எதிர்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், காங்கிரசில் முதல்-மந்திரியாக இருந்த கேப்டன் அமரிந்தர்சிங்குக்கும், பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டிருந்த சூழ்நிலையில், எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மையானவர்கள் அமரிந்தர்சிங்குக்கு எதிர்ப்பாக இருந்தனர். இதற்கிடையே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. நிலைமை தன் கையை மீறிப்போவதை புரிந்துகொண்ட கேப்டன் அமரிந்தர்சிங், அதற்கு முன்பாகவே தன் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சி மேலிடத்தையும் கடுமையாக சாடினார். “கடந்த 2 மாதங்களாக 3 முறை நான் காங்கிரஸ் தலைமையால் அவமானப்படுத்தப்பட்டேன். ஏற்கனவே 2 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு வரவழைத்தார்கள். இப்போது 3-வது முறையாக அழைத்து கூட்டம் போட்டிருக்கிறார்கள் என்று பகிரங்கமாக தெரிவித்தார். மேலும், “எல்லா விஷயங்களிலும் காங்கிரஸ் தலைமை கையாண்டது, என்னை அவமானப்படுத்துவதாகவே இருந்தது என்று கூறினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத்சிங் சித்து 2017-ம் ஆண்டுதான் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் பாட்டியாலா மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் அமரிந்தர்சிங். 1963 முதல் 1966-ம் ஆண்டு வரை இந்திய ராணுவத்தில் அதிகாரியாகவும் இருந்துள்ளார். புதிய முதல்-மந்திரியாக ஒரு இந்துவை நியமிக்கப்போகிறார்களா?, ஜாட் சீக்கியரை நியமிக்கப்போகிறார்களா? என்ற எதிர்பார்ப்புக்கு இடையே, யாரும் எதிர்பார்க்காத வகையில், முதல் முறையாக தலித் சமுதாயத்தை சேர்ந்த சரண்ஜித்சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், அமரிந்தர்சிங் மந்திரி சபையில் தொழில்நுட்ப கல்வி துறை மந்திரியாக இருந்தவர். ஏற்கனவே, 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், அதற்கு முன்பு நகர சபை தலைவராகவும் பணியாற்றிய அனுபவமுள்ள சரண்ஜித்சிங் சன்னி, அமரிந்தர்சிங்கின் எதிர்ப்பாளராகவே இருந்தார். பஞ்சாப் மக்கள்தொகையில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 32 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதுவரை இந்த மாநிலத்தில் 15 முதல்-மந்திரிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால், தலித் சமுதாயத்தை சேர்ந்த யாருமே முதல்-மந்திரி பொறுப்பில் இருந்ததில்லை.

நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்-மந்திரியாக்குவோம் என்று பா.ஜ.க.வும், துணை முதல்-மந்திரியாக்குவோம் என்று சிரோமணி அகாலிதளம், ஆம்ஆத்மி கட்சிகளும் அறிவித்து இருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான், முதல்-மந்திரி பொறுப்பையே தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்குகிறோம் என்று காங்கிரஸ் கட்சி நியமித்துவிட்டது. ஜாட் சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த சுகிந்தர் ராண்டவா, இந்து மதத்தை சேர்ந்த ஓ.பி.சோனி ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்று இருக்கிறார்கள்.

பல கூட்டல், கழித்தல்களை காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மாநிலத்தில் போட்டிருக்கிறது. அரசியல் விளையாட்டில் காங்கிரசின் ஆட்டம் எடுபடுமா? என்பது போகப்போகத்தான் தெரியும். உத்தரகாண்ட், கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் பா.ஜ.க. முதல்-மந்திரிகளை எந்தவித எதிர்ப்பும் இல்லாதவகையில் மாற்றியமைத்திருக்கிறது. அதே முயற்சியில் இப்போது காங்கிரசும் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க. தன் முயற்சியில் அடைந்த வெற்றியை காங்கிரஸ் பெறுமா? என்பது கேப்டன் அமரிந்தர்சிங் எடுக்கப்போகும் நிலைப்பாட்டில்தான் இருக்கிறது.

Next Story