இன்று நடக்கும் கூட்டத்தில் நல்ல முடிவு எட்டட்டும்!


இன்று நடக்கும் கூட்டத்தில் நல்ல முடிவு எட்டட்டும்!
x
தினத்தந்தி 7 Jan 2022 7:52 PM GMT (Updated: 7 Jan 2022 7:52 PM GMT)

வழக்கமாக மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முடிந்துவிடும். ஆனால் இந்த கல்வியாண்டில் இதுவரை மருத்துவக்கல்லூரி மாணவர்சேர்க்கை ஆரம்பிக்கப்படாமல், அவர்களின் படிப்பு காலம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வழக்கமாக மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முடிந்துவிடும். ஆனால் இந்த கல்வியாண்டில் இதுவரை மருத்துவக்கல்லூரி மாணவர்சேர்க்கை ஆரம்பிக்கப்படாமல், அவர்களின் படிப்பு காலம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பொது பட்டியலில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டதிலிருந்து தொடரப்பட்ட வழக்கு நேற்று வரை நிலுவையிலிருந்ததால், இந்த மாணவர்சேர்க்கையை நடத்த முடியவில்லை. அதனையும் சேர்த்து, நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர்சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இருந்த மத்தியஅரசாங்கம், ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குஅளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் நிறைவேற்றாமல் இருக்கிறதே என்ற மனக்குறை தமிழகமக்களிடம் இருக்கிறது.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதிலிருந்தே தமிழ்நாட்டில் எங்களுக்கு ‘நீட்’ தேர்வு வேண்டாம்... வேண்டாம்... என்ற பெரும் கோரிக்கை எழுந்துவருகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு அடிப்படையில் 2017-18-ம் கல்வியாண்டு முதல் மாணவர்சேர்க்கை நடக்கிறது. இதன் காரணமாக அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள், முதல்தலைமுறை மாணவர்கள், தமிழ்வழிக்கல்வியில் படித்த மாணவர்களின்சேர்க்கை வெகுவாக குறைந்து, விரல்விட்டு எண்ணும் அளவில்தான் இருக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி எல்லோருமே நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கையில் உறுதிப்பட நின்றார்கள். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு, இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு தன் பரிந்துரையை கடந்த ஜூலை 14-ந்தேதி அரசுக்கு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு, நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்குஅளிக்கவேண்டும், 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக்கல்லூரி மாணவர்சேர்க்கை நடைபெறவேண்டும் என்று 19.9.2021 அன்று ஒரு மசோதாவை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல்செய்து, அந்த மசோதாவும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உடனடியாக கவர்னரின் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டது.

கடந்த செப்டம்பர் 18-ந்தேதி பதவியேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் இந்த மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. நவம்பர் 27-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்து, நீட் தேர்வு மசோதாவை உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த காரணத்துக்காகவே அவர் கவர்னரை சந்தித்தார் என்று தமிழக அரசு வெளியிட்ட படத்தின் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் கவர்னர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட படத்தின் குறிப்பில், கவர்னர், முதல்-அமைச்சர் சந்திப்பில் தொடர்மழையில் அரசு எடுத்த நடவடிக்கைகள், கொரோனா தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது, எல்லோருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், நீட் தேர்வு மசோதா எந்த நிலையில் இருக்கிறது? என்று பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பிய மனுவுக்கு, ‘அது பரிசீலனையில் இருக்கிறது’ என்று பதில் வந்திருக்கிறது. நேற்றுமுன்தினம் சட்டசபையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு போன்ற பொதுநுழைவுத்தேர்வு வேண்டாம் என்பதை சமூகநீதி இயக்கத்தின் அடுத்தகட்டப்போராட்டம் என்று கருதி, நம் கொள்கையிலிருந்து எள்முனை அளவும் பின்வாங்காமல், முன்னேறிச்செல்வோம் என்று உறுதிகூறி, இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும், ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கும், சட்டமன்றத்திலிருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தை இன்று (சனிக்கிழமை) கூட்ட முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு மிக மிக வரவேற்கத்தக்கது.

நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழகத்திலுள்ள அனைத்து மக்களின், அனைத்து கட்சிகளின் ஒருமித்தகுரல் என்ற வகையில், இதுகுறித்த மேல்நடவடிக்கையை எல்லோரும் ஒரு மனதாக எடுத்தால், அது இந்த கோரிக்கைகளுக்கு மேலும் வலுவூட்டுவதாக இருக்கும். இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவு, ஒரு புது முயற்சியின் தொடக்கத்துக்கு வித்திடுவதாக அமையவேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story