கட்டமைப்புகளில் விரிசல் ஏற்படுவதை தடுக்கும் நவீன தொழில்நுட்பம்


கட்டமைப்புகளில் விரிசல் ஏற்படுவதை தடுக்கும் நவீன  தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 21 Jan 2017 6:45 AM IST (Updated: 20 Jan 2017 5:57 PM IST)
t-max-icont-min-icon

தற்போதைய காலகட்டத்தில் வடிவமைக்கப்படும் பெரும்பாலான கட்டுமானங்களில் கான்கிரீட்தான் முக்கியமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ற்போதைய காலகட்டத்தில் வடிவமைக்கப்படும் பெரும்பாலான கட்டுமானங்களில் கான்கிரீட்தான் முக்கியமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. கான்கிரீட் அமைப்புகளில் சிமெண்டு முக்கியமான இடத்தை பெறுகிறது. அத்துடன் மணல், ஜல்லி மற்றும் இரும்பு கம்பிகள் ஆகியவற்றோடு தக்க அளவு தண்ணீரும் சேர்க்கப்பட்டு கான்கிரீட் கட்டுமானங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு அமைக்கப்படும் கட்டிடங்கள் இயற்கை மாற்றங்களால் பாதிக்கப்படாது நீண்ட காலத்துக்கு பயன்தரக்கூடிய வகையில் பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களில் அவ்வப்போது புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

கான்கிரீட் விரிசல்கள்

கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்ட கட்டிடங்கள் சிறிய அளவில் இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றில் வரக்கூடிய பாதிப்புகளில் முக்கியமான இடத்தில் இருப்பவை அவற்றில் ஏற்படும் விரிசல்களாகும். கட்டுமான பொறியியல் வல்லுனர்களது கவனத்தை அதிகமாக ஈர்க்கக்கூடிய பாதிப்பாக இது கருதப்படுகிறது. உலக அளவில் அதற்கான தீர்வுகள் காணப்பட்டு அவை நடைமுறையில் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. ஒரு சில முக்கியமான காரணிகளை தவிரவும் கவனத்துக்கு வராத பல்வேறு காரணங்களாலும், கட்டுமான அமைப்புகளில் விரிசல்கள் ஏற்படுவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பு முறைகள்

பொதுவாக கட்டிட விரிசல்களுக்கான தடுப்பு நடவடிக்கைகள் இரண்டு வகைகளுக்குள் அடங்குவதாக கொள்ளலாம். முதல் வகையானது காலப்போக்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்படக்கூடிய விரிசல்களை சரி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகும். இரண்டாவது கட்டுமான பணிகள் நடைபெறும் சமயத்திலேயே, எதிர்காலத்தில் அவற்றில் விரிசல்கள் வராமல் தடுக்கும் தொழில் நுட்பங்களை கையாள்வது என்ற முறையாகும். இதில் இரண்டாவது முறையானது தற்போது உலக அளவில் கட்டுமான வல்லுனர்களது கவனத்தை ஈர்க்கும் முறையாகவும், அவர்களால் கடைப்பிடிக்கப்படும் தொழில்நுட்பமாகவும் உள்ளது. முக்கியமாக பெரிய அளவிலான கட்டமைப்புகளில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சமாக விரிசல் தடுப்பு முறைகள் இருக்கின்றன. இங்கே நாம் பார்க்க இருப்பது கான்கிரீட் அமைக்கும்போதே அதில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்ப முறையாகும்.  

புதிய முறை

கான்கிரீட் விரிசல்களை தாமாகவே சரி செய்துகொள்ளும் ‘செல்ப் ஹீலிங் கான்கிரீட்’ போன்ற ஒரு சில தொழில்நுட்பங்கள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய முறைக்கு ‘எஸ்.ஏ.பி’ அதாவது ‘சூப்பர் அப்சார்பன்ட் பாலிமர்ஸ்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. அதற்கு ‘ஸ்லஷ் பவுடர்’ என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. இந்த ‘பாலிமர்’ வகையை சேர்ந்த பவுடரானது கான்கிரீட்டில் இருக்கும் தண்ணீர் சுற்றுப்புற வெப்பத்தால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. அதாவது இந்த பவுடரானது தண்ணீரை தமக்குள்ளே உறிஞ்சிக்கொள்வதன் வாயிலாக அதன் இயல்பான அளவை விடவும் பல நூறு மடங்கு பெரியதாக மாறக்கூடியது. அதுமட்டுமில்லாமல் அந்த ஈரப்பதமானது சுலபமாக உலர்ந்து விடாமல் தனக்குள்ளேயே தக்க வைத்து கொள்ளும் தன்மையும் கொண்டது.

‘கான்கிரீட் கியூரிங்’

இந்த முறையை பயன்படுத்துவதன் காரணமாக ‘கான்கிரீட் கியூரிங்’ என்று சொல்லப்படும் நீராற்றல் முறைக்கு தொடர்ச்சியாக தண்ணீர் விட்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. வழக்கமான முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட்டானது தொடர்ச்சியாக தண்ணீரால் ஈரப்பதமாக மூன்று வாரங்கள் பராமரிக்கப்பட்ட பிறகே பயன்பாட்டுக்கு வரும். அத்தகைய கான்கிரீட் அமைப்புகளில் நாளடைவில் அதற்குள் இருக்கும் ஈரப்பதமானது உலர்ந்து விடக்கூடிய தன்மை உடையது. அதனால் கான்கிரீட்டுக்குள் உண்டாகும் சுருக்கம் காரணமாக விரிசல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.   

பாதுகாப்பு

எஸ்.ஏ.பி எனப்படும் ‘சூப்பர் அப்சார்பன்ட் பாலிமர்’ பயன்படுத்தி அமைக்கப்படும் கான்கிரீட் அமைப்புகளில் உட்புறமாக அவை ஈரப்பதத்தை அதிக அளவில் உறிஞ்சுகின்றன. அதன் காரணமாக தமது இயல்பான அளவை பல மடங்கு பெரியதாக ஆகிவிடும். கட்டமைப்புகளில் ஏதாவது விரிசல்கள் ஏற்படும் சமயத்தில் அவை மிகவும் கச்சிதமாக விரிசல்களுக்குள் பரவுகின்றன. அதனால் விரிசல்களுக்கான வாய்ப்புகள் தொடக்கத்திலேயே தவிர்க்கப்படுகின்றன.

Next Story