பாரம்பரிய கட்டிட பாதுகாப்பில் பெருநகர வளர்ச்சி குழுமம்


பாரம்பரிய கட்டிட பாதுகாப்பில் பெருநகர வளர்ச்சி குழுமம்
x
தினத்தந்தி 21 Jan 2017 1:00 AM GMT (Updated: 20 Jan 2017 12:33 PM GMT)

பழமையான கட்டிடங்கள் நிறைய உள்ள சென்னை பெருநகரத்தில் அவற்றின் பாரம்பரியத்தை கவனத்தில் கொண்டு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ழமையான கட்டிடங்கள் நிறைய உள்ள சென்னை பெருநகரத்தில் அவற்றின் பாரம்பரியத்தை கவனத்தில் கொண்டு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்கள் அல்லது இடங்களை பட்டியலிடும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள, பாரம்பரியத்தை பாதுகாக்கும் குழுவால் கீழ்கண்ட வழிமுறைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அவை கட்டிடவியல் அமைப்புகள், பழைய பண்பாடு மற்றும் வரலாற்று சம்பவங்களோடு பெற்ற தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டியவையாக இனம் காணப்படும்.  

முறையான அனுமதி

பாரம்பரியம் மிக்க கட்டிடமாக அல்லது இடமாக இனம் காணப்பட்ட பகுதிகளில், ஒருவர் கூடுதலாக கட்டிட அமைப்புகளை ஏற்படுத்துவது, மாற்றியமைப்பது, செப்பனிடுவது அல்லது கட்டிட அமைப்பை முழுமையாக அல்லது ஏதேனும் ஒரு பகுதியை இடித்து கட்டுமான பணிகளை செய்ய விரும்பினால் முறையாக அனுமதி பெற வேண்டும். அத்தகைய பழமை கட்டிடங்களில் ஏதாவது கட்டுமான பணிகள் செய்ய விரும்பும்போது அதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் மூலம் எழுத்துப்பூர்வமான முன் அனுமதியை பெறுவது அவசியமாகும். கீழ்க்கண்ட தன்மைகள் அல்லது கட்டுமான அமைப்புகள் கொண்டவை பழமையான பாதுகாக்கப்பட்ட கட்டிடம் அல்லது இடமாக அடையாளம் காணப்படும்.  

வரலாற்று அடிப்படை

• சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் வயது மற்றும் கட்டமைக்கப்பட்ட காலம் ஆகிய தன்மைகளுக்கு ஏற்ப அமைந்த வரலாற்று முக்கியத்துவங்கள்.

• பழைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த கட்டிடம் அல்லது இடம் மேலும், அப்பகுதியில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளின் தனித்தன்மை, சமுதாயம், பொருளாதாரம், அரசியல் அல்லது பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடிய அமைப்புகள்.

• குறிப்பிட்ட ஒரு பகுதியில், மண்டலம் அல்லது தேசிய அளவில் குறிப்பிடும்படியான வரலாற்று நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட கட்டிடம் அல்லது அந்த நிகழ்வுகளுடன் நேரடியாக தொடர்பு பெற்ற இடங்கள்.

• மேற்கண்ட வகையில் அமைந்த கட்டிடங்கள் அல்லது இடங்களோடு தொடர்புடையவர்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் மற்றும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகிய தொடர்புகளை பெற்ற பழைய கட்டிடங்கள் மற்றும் இடங்கள்.

கட்டிடக்கலை அடிப்படை

• வடிவமைப்பு ரீதியாக நேர்த்தி பெற்றதாகவும், கலை நயம் மிகுந்த வடிவமைப்புகள் கொண்டதாகவும், அவற்றின் கட்டமைப்பில் வெளிப்படும் கட்டுமான கலை நயம், தொழில் நுட்ப பயன்பாடுகள், கட்டமைப்பின் வண்ணங்கள் உள்ளிட்ட கட்டிட கலையின் மற்ற நுட்பங்கள் போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட கட்டிடங்கள்.     

• கட்டிட கலையின் தனிப்பட்ட சிறப்பியல்புகள், அவை கட்டமைக்கப்பப்பட்ட காலம் மற்றும் மற்ற கட்டிடக்கலை அம்சங்களோடு ஒப்பிடும்போது தனித்தன்மையான இயல்புகளுடன் விளங்கும் கட்டிடங்கள்.  

• உள்ளூர் அளவில், மண்டல அளவில் அல்லது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற கட்டிடங்களை கட்டியவர் மற்றும் வடிவமைத்த கட்டிடக்கலை வல்லுனர்கள், பொறியாளர்கள் அல்லது பிற வகை  வடிவமைப்பாளர்களால் கட்டப்பட்ட கட்டுமான அமைப்புகள்.

பண்பாட்டு அடிப்படை

• சமூக அளவில் தனித்தன்மை வாய்ந்த, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய அல்லது ஒரு குறிப்பிட்ட அடையாள சின்னமாக விளங்கும் கட்டிடங்கள் அல்லது அத்தகைய இடங்கள்.

Next Story