மின்சாதனங்கள் பயன்பாடும்.. சிக்கனமும்..


மின்சாதனங்கள்  பயன்பாடும்..  சிக்கனமும்..
x
தினத்தந்தி 21 Jan 2017 7:15 AM IST (Updated: 20 Jan 2017 6:45 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. அனைவரது வாழ்விலும் மின்சாரம் தவிர்க்க இயலாத சக்தியாக மாறியிருக்கிறது. சாதாரண குடிசையாக இருந்தாலும், பங்களா வீடாக இருந்தாலும் அல்லது வணிகம் சம்பந்தமான இடமாக இருந்தாலும் மின்சாரத்தின் பங்கு நிச்சயம் உள்ளது. பயன்படுத்துவதை தவிர்க்க இயலாது என்ற சூழலில் அதன் உபயோகத்தில் சிக்கனத்தை கடைப்பிடிப்பது பற்றி நாம் யோசிக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும். மின் சாதனங்களை வாங்கும்போதும் அவற்றை பயன்படுத்தும்போதும் நாம் பல வி‌ஷயங்களை கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ‘ஹோம் அப்ளையன்சஸ்’ என்று சொல்லப்படும் வீட்டு உபயோக பொருட்களில் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்தும் முறைகள் பற்றி இங்கே காணலாம்.

‘எனர்ஜி எபிஸியன்சி சர்டிபிகேட்’

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி, பிரிட்ஜ், டி.வி, வாட்டர் ஹீட்டர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து விதமான மின் சாதனங்களுக்கும் அவற்றின் உபயோகம், மின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ‘எனர்ஜி எபிஸியன்சி சர்ட்டிபிகேட்’ தரப்படுகிறது. பொதுவாக ஒரு சாதனத்தின் விலை, அளவு, வடிவமைப்பு, சிறப்பம்சங்கள் மற்றும் நிறம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட ஒரு ‘ஸ்டிக்கர்’ பல பொருட்கள் மீது ஒட்டப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். ‘எனர்ஜி எபிஸியன்சி சர்டிபிகேட்’ என்பது அதுதான். அத்தகைய ‘சர்டிபிகேட்’ அடிப்படையில் ஒரு மின் சாதனம் வாங்கப்படும்போது மின் சிக்கனம் உள்ளிட்ட பல நன்மைகளை நாம் பெற இயலும்.

மின்சார பயன்பாட்டு அளவு

அனைத்து மின் சாதனங்களிலும் அதன் மின்சார பயன்பாடு மற்றும் அளவு ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். முக்கியமாக அதை கவனித்த பிறகுதான் சம்பந்தப்பட்ட பொருளை வாங்கவேண்டும். அதாவது ‘வாட்’ அளவுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையானது ஒரு மணி நேரத்தில் அவற்றால் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவாகும். வாங்கும்போது அதையும் கவனத்தில் கொள்வதும் அவசியமாகும்.

புது வீட்டு ‘ஒயரிங்’

புது வீட்டுக்கான கட்டுமான பணிகள் முடிந்த பிறகு ‘ஒயரிங்’ வேலைகள் செய்யப்படும். வீட்டு வேலைகளில் செலவு பற்றி கவலைப்படாமல் இருப்பவர்கள் ‘ஒயரிங்’ வேலை ஆரம்பிக்கும்போது மட்டும் சிக்கனம் பற்றி பலரும் பேசுவதாக கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். அதன் காரணமாக விலை குறைவான ‘ஒயர்’ எனப்படும் ‘கேபிள்’ வகைகளை பயன்படுத்தும் முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். பிற்காலங்களில் அதன் பாதிப்புகள் எப்படி இருக்கக்கூடும் என்பது பற்றி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சற்று விலை கூடுதலாக இருப்பினும் நல்ல தரமான ‘கேபிள்களை’ மட்டுமே பயன்படுத்த வேண்டும்  என்றும் கட்டுமான வல்லுனர்களும், மின்சார பொறியாளர்களும் வலியுறுத்துவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மின் சாதன பழுது

பொதுவாக மின்சார சாதனங்கள் முற்றிலும் பழுததாக ஆகும் வரை அதை உபயோகப்படுத்துவது பலருக்கும் வழக்கமாக இருக்கிறது என்று ‘எலெக்ட்ரீஷியன்கள்’ பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள். ஒரு சாதனம் பழுதாக ஆவதற்கு முன்னர் அதன் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. அவ்வாறு ஆரம்பத்தில் கவனிக்காமல் முற்றிலும் இயங்குவதற்கான வாய்ப்பு இல்லாது போகும்போதுதான்
 சம்பந்தப்பட்ட சாதனத்தை பழுது பார்க்கவே ஆரம்பிக்கின்றனர். அதனால் செலவுதான் அதிகமாகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  

பொதுவான குறிப்புகள்

குடும்பத்துடன் எங்காவது ஓரிரு நாட்கள் வெளியில் செல்லும்போது ‘மெயின் ஸ்விட்ச் ஆப்’ செய்து விட்டு செல்வதுதான் சிறந்தது. அடுக்கு மாடிகளில் குடியேறுபவர்கள் மூன்றாவது அல்லது நான்காவது தளங்களை தேர்வு செய்தால் இயற்கையான காற்றும், வெளிச்சமும் சுலபமாக கிடைக்க வாய்ப்பு இருக்கும். ‘ஏ.சி’ பயன்பாட்டில் இருக்கும் அறைகளில் மின்சார விளக்குகளை கூடிய வரையில் தவிர்ப்பது அவசியம். ஏனென்றால் மின் விளக்குகள் அறையின் வெப்பத்தை அதிகப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருப்பதால் ‘ஏ.சி.யின்’ இயக்கமானது வழக்கத்தைவிட அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

Next Story