வீடு வாங்குபவர்கள் தங்களது உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும்


வீடு வாங்குபவர்கள் தங்களது உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 21 Jan 2017 7:30 AM IST (Updated: 20 Jan 2017 7:20 PM IST)
t-max-icont-min-icon

‘இந்தியாவில் தொழில்திறனும் உயர்கல்விப் படிப்பும் கொண்ட பணியாளர்கள் அதிகளவில் இருப்பது தமிழகத்தில்தான்.

‘இந்தியாவில் தொழில்திறனும் உயர்கல்விப் படிப்பும் கொண்ட பணியாளர்கள் அதிகளவில் இருப்பது தமிழகத்தில்தான். இப்படியொரு சூழல் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. இது சென்னையில் இயற்கையாகவே அமைந்திருக்கிறது’ என்கிறார் அக்‌ஷயா ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான டி.சிட்டிபாபு. அவருடனான பேட்டி..

ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது?

இந்தியாவில் 55 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதனோடு இணைந்த தொழில்களில் பணிபுரிகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக  அதிகப்படியான வேலை வாய்ப்பை அளிப்பது கட்டுமானத் தொழில்துறைதான். மேலும் அலுமினியம், இரும்பு முதலிய துறைகளுக்கும் கட்டுமானத்துறைக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இந்தவகையில் தொழில்திறன் கொண்ட தொழிலாளர்கள்,  சாதாரண தொழிலாளர்கள் என்று இரண்டு வகையினருக்கும் மிகப்பெரிய தொழில்வாய்ப்பை கொடுக்கிற துறையாக கட்டுமானத்துறை விளங்கிவருகிறது.

இந்தியாவில் மக்கள்தொகை அதிகமாகிக் கொண்டிருந்தாலும் இங்கிருக்கும் நிலத்தின் அளவு மிகவும் குறைவானதுதான். எனவே எப்போதுமே முதலீட்டுக்கு மிகவும் ஏற்ற துறையாக ரியல் எஸ்டேட் துறை இருந்து வருகிறது.

குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை, மற்ற இந்திய நகரங்களைக் காட்டிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மாநகர எல்லைக்குள்ளேயே விமான நிலையம் அமைந்திருக்கிறது. தொழில்துறை வளர்ச்சியானது எந்தவொரு குறிப்பிட்ட துறையை மட்டும் சார்ந்திருக்கவில்லை. வாகனங்கள், டெக்ஸ்டைல், தோல்பொருட்கள் என்று உற்பத்தித்துறையின் அனைத்து பிரிவுகளும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வளர்ச்சிக்கான வாய்ப்புகள் நிறைய இருந்தபோதும் தற்போது நிலவும் மந்தநிலைக்கு காரணம் என்ன?

2008ஆம் ஆண்டில் சென்னை மாநகரத்தில் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டது. புதிய தொழில்வாய்ப்புகள் நிறைய உருவானதுதான் அதற்கு முக்கியமான காரணம். அதன்பிறகு அந்த வளர்ச்சி நிலையைத் தொடர முடியவில்லை.

இப்போது சென்னையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளும், பொது போக்குவரத்து வசதிகளும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் அமைந்துள்ளன. அதேநேரத்தில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய மூன்று அம்சங்களும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. சென்னையில் சிறந்த கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் நிறைய இருக்கின்றன. அதைப்போல புதிய தொழில்வாய்ப்புகளும் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டும். அப்போது மந்த நிலை சீராகிவிடும்.

தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள சென்னை மாநகரத்திற்கான இரண்டு பெருந்திட்டங்களும் நல்ல பயனை அளித்திருக்கின்றன. அடுத்ததாக மூன்றாவது பெருந்திட்டத்தைப் பற்றியும் விரைவில் முடிவு எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள குடியிருப்புத் திட்டங்கள் பற்றிய அறிக்கையைப் பற்றி தங்களது கருத்து என்ன?

மின்சாரப் பயன்பாட்டையும் தண்ணீர் பயன்பாட்டையும் பாதியாக குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் மிகவும் வரவேற்கத் தக்கது.  

வீடு கட்டும்போதே இயற்கையான வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்குமாறு கட்டினால் மின்சாரப் பயன்பாட்டை  நிச்சயமாக குறைக்க முடியும். வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவதோடு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்வகையில் குழாய் இணைப்புகளை  அமைக்க வேண்டும். இதற்கான செலவுகள் வழக்கமான கட்டுமானச் செலவுகளைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆனால் நீண்ட கால நோக்கத்தில் பார்த்தால், அது லாபகரமானது.

ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது எப்படி?

வீடு வாங்குபவர்கள்  சட்டரீதியாக எந்தச் சிக்கலும் இல்லாமல் குடியிருக்க வேண்டியது அவசியம். கட்டுமானத் திட்டத்திற்காக நிலம் வாங்கப்பட்டதில் இருந்து, விற்பனைக்குப் பிறகு வாங்கியவரின் பெயரில் வில்லங்கச்சான்று வாங்கும்வரைக்குமான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் வீடு வாங்கியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் வீட்டின்மீதான அவரது உரிமை முழுமையானதாக இருக்கும்.  

பட்டா, சிட்டா, வீடு கட்டுவதற்கு பெற்ற அனுமதிகள், திட்ட வரைபடங்கள் என்று அனைத்து ஆவணங்களின் நகல்களையும் கட்டுமான நிறுவனங்கள் வீடு வாங்குபவர்களிடம் அளிக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் ரியல் எஸ்டேட் துறை வெளிப்படைத்தன்மை கொண்டதாக விளங்கும்.

வீடு வாங்குபவர்கள் தங்களது உரிமைகளை எப்படி தெரிந்து கொள்வது?

வீடு வாங்குபவர்களுக்கு அவர்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகளைப் பற்றி விளக்கிச் சொல்ல வேண்டியது கட்டுமான நிறுவனங்களின் முக்கிய கடமை ஆகும்.

மொட்டைமாடி உரிமையானது வீடுகளை வாங்குபவர்களிடமே இருக்க வேண்டும். இல்லையென்றால் வீடு இருக்கும் பகுதியில் நிலத்தின் விலை ஏறும்போது கட்டுமான நிறுவனம் வீட்டு உரிமையாளரின் அனுமதி இல்லாமலே மொட்டை மாடியில் புதிதாக வீடுகளைக் கட்டுவதற்கு முயற்சிக்கலாம்.

வீட்டின் கார்பெட் ஏரியா எவ்வளவு, யு.டி.எஸ் எனப்படும் பிரிக்கப்படாத பகுதியின் பரப்பளவு எவ்வளவு ஆகிய விவரங்கள் வரைபடங்களோடு கொடுக்கப்பட வேண்டும். பரப்பளவு எந்த முறையில் கணக்கிடப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

வீடு விற்பனை செய்யப்படும்போது கட்டுமான நிறுவனங்கள் அந்தக் கட்டிடத்தின் தர உறுதிச் சான்றிதழ் ஒன்றையும் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் அதைச் சரிசெய்து கொடுக்க வேண்டிய கடமை கட்டுமான நிறுவனத்திற்கு உண்டு.

வீடு வாங்குபவர்களிடம் அவர்களது உரிமைகள் என்னென்ன என்று கட்டுமான நிறுவனமே ஒரு கையேட்டினைத் தயாரித்து வழங்கலாம். 

Next Story