வில்லங்க சான்றிதழில் இடம்பெறாத விவரங்கள்


வில்லங்க சான்றிதழில் இடம்பெறாத விவரங்கள்
x
தினத்தந்தி 27 Jan 2017 11:00 PM GMT (Updated: 27 Jan 2017 12:01 PM GMT)

வீடு அல்லது வீட்டுமனை வாங்குகிறபோது விற்பனை செய்பவர்தான் சொத்தின் உண்மையான உரிமையாளர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வீடு அல்லது வீட்டுமனை வாங்குகிறபோது விற்பனை செய்பவர்தான் சொத்தின் உண்மையான உரிமையாளர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக அவரிடம் உள்ள சொத்து பத்திரங்களை சரிபார்க்கலாம். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் கேட்டும் விண்ணப்பிக்கலாம்.

வில்லங்கச் சான்றிதழ் சொத்துரிமை பற்றிய முக்கியமான ஆவணம். இருந்தபோதும் அது முழுமையான ஆவணம் இல்லை. அதிலும் சில விவரங்கள் விடுபட நேரலாம். வில்லங்கச் சான்றிதழில் விடுபட வாய்ப்புள்ள விவரங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

பதிவு செய்யப்படாத கிரய ஒப்பந்தம்

சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கான கிரய ஒப்பந்தம் செய்து, அதை பதிவு செய்யாமல் இருந்திருந்தால் அந்த விவரம் வில்லங்கச் சான்றிதழில் இடம்பெற்றிருக்காது. இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க விற்பனைக்கு முன்பு அக்ரிமெண்ட் எனப்படும் ஒப்பந்தத்தை உடனடியாக பதிவு செய்துவிடுவது நல்லது. பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரத்திற்கே சட்டப்படி முன்னுரிமை வழங்கப்படும்.  

பதிவு செய்யப்படாத அடமானம்

சொத்தின் உரிமையாளர் யாரிடமாவது அடமானம் வைத்து அதை பதிவு செய்யாமல் இருந்தாலும் அந்த விவரம் வில்லங்கச் சான்றிதழில் இருக்காது.  அடமானம் வாங்குபவர்கள் அதற்கு ஈடாக சொத்துப் பத்திரத்தை வாங்கிக்கொள்ளும் வழக்கம் உள்ளது. எனவே சொத்துரிமையை சரிபார்க்கிறபோது சொத்தின் மூலப் பத்திரத்தை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

பவர் ஆப் அட்டர்னி

பவர் ஆப் அட்டர்னி என்று அழைக்கப்படும் அதிகாரப் பத்திரத்தை பதிவு செய்வதற்கான நடைமுறை 2009–ஆம் ஆண்டு நவம்பர்
1– ந்தேதி முதல் நடைமுறையில் உள்ளது. எனவே அந்த தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட அதிகாரப் பத்திரங்களின் விவரங்கள் வில்லங்க சான்றிதழில் இடம்பெற்றிருக்கும். ஆனால் அந்த தேதிக்கு முன்னர் சொத்தின் உரிமையாளர் யாருக்காவது அதிகார பத்திரம் அளித்திருந்தால் அதைப் பற்றிய விவரம் வில்லங்க சான்றில் இருக்காது. பவர் ஆப் அட்டர்னி மூலமாக வருகின்ற பிரச்சினைகளை தவிர்க்க சொத்தின் உரிமையாளரை நேரடியாக சந்தித்து அவரிடம் விளக்கம் பெறவேண்டும். மேலும் அவர் பவர் பத்திரத்தை ரத்து செய்திருக்கிறாரா  என்பதையும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

வில்லங்க சான்றிதழில் மேற்கண்ட விவரங்கள் இடம்பெறுவதில்லை என்பதால்  அந்த வாய்ப்பை பயன்படுத்தி மோசடிகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட விவரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

Next Story
  • chat