வளையும் தன்மை கொண்ட புதுமையான கான்கிரீட் கற்கள்


வளையும்  தன்மை  கொண்ட  புதுமையான  கான்கிரீட்  கற்கள்
x
தினத்தந்தி 25 Feb 2017 4:45 AM IST (Updated: 24 Feb 2017 3:36 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான அமைப்புகள் எதுவாக இருந்தாலும், அவற்றின் உறுதி மற்றும் தோற்றம் ஆகியவை, அவற்றின் கான்கிரீட் பயன்பாடு எப்படிப்பட்டது என்பதை பொறுத்துத்தான் அமைகிறது.

ட்டுமான அமைப்புகள் எதுவாக இருந்தாலும், அவற்றின் உறுதி மற்றும் தோற்றம் ஆகியவை, அவற்றின் கான்கிரீட் பயன்பாடு எப்படிப்பட்டது என்பதை பொறுத்துத்தான் அமைகிறது. கான்கிரீட் என்பது வளையும் தன்மை இல்லாத உறுதியான ஒரு கூட்டுப்பொருளாக உள்ளது. அந்த உறுதிதான் அதன் சிறப்பு என்றாலும், வளையும் தன்மைகளற்ற அதன் கட்டுறுதியானது காலப்போக்கில் பல குறைபாடுகளை இயற்கையாக ஏற்படுத்திவிடுகிறது. உறுதியாகவும் அதே சமயம் சற்றே நெகிழும் தன்மையுள்ளதாகவும் இருக்கும் கான்கிரீட்டின் புது வடிவத்தை ஆய்வுகள் மூலமாக வெளிநாட்டு கட்டுமானத்துறை வல்லுனர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வளையும் கான்கிரீட்

பொதுவாக கான்கிரீட் என்பது வலிமையான கட்டமைப்பாக காலத்துக்கும் நிற்கக்கூடியது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கண்டறியப்பட்ட புது முறையானது, வளையும் தன்மை கொண்ட ஈ.சி.சி என்ற கான்கிரீட் வகையாகும். தொழில்நுட்ப ரீதியாக ‘பென்டபிள் கான்கிரீட்’ என்றும் ‘என்ஜினியர்டு சிமெண்டிஸியஸ் காம்போசைட்’ என்றும் அந்த முறை குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட் கற்கள் 30 முதல் 40 டிகிரி வரையில் வளையக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கும். முன்னதாக பயன்பாட்டில் இருக்கும் ‘பைபர் ரீ–இன்போர்ஸ்டு கான்கிரீட்’ என்ற தொழில்நுட்பத்திலிருந்து இந்த முறையானது, சற்றே வேறுபட்ட ‘மைக்ரோ–மெக்கானிக்ஸ்’ என்ற முறையில் தயார் செய்யப்படுகிறது. நுண்ணிய அளவு கொண்ட ‘பாலிமர்’ வகை மூலக்கூறுகள் இவற்றில் அடங்கியுள்ள காரணத்தால், இத்தகைய கான்கிரீட் அமைப்புகள் குறிப்பிட்ட அளவு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக உள்ளன.

மைக்ரோ மற்றும் மாக்ரோ

இப்போது பரவலான உபயோகத்தில் உள்ள ‘போர்ட்லாண்ட்’ சிமெண்டு பயன்படுத்தி தயாரிக்கப்படும் கான்கிரீட்டுடன், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ‘பைபர்’ சேர்க்கப்பட்டு ஈ.சி.சி எனப்படும் வளையும் கான்கிரீட் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. வளையும் தன்மை கொண்ட கான்கிரீட் என்பது கட்டுமானத்துறைக்கு அதிசயமான ஒன்றாகும். காரணம், சுவரை வளைவாக கட்டுவது என்பதுதான் நடைமுறையாகும். ஆனால், கட்டப்பட்ட சுவரை வேண்டிய அளவுக்கு வளைத்துக்கொள்ள இயலும் என்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ‘நானோ, மைக்ரோ, மாக்ரோ’ என்ற முறைகளில் இவ்வகை கான்கிரீட் வடிவம் செயல்பட்டு வளையக்கூடிய சுவர் அமைப்பை சாத்தியமாக்குகிறது.

குறைந்த எடை

மேற்கண்ட தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படும் மற்ற வகை கற்களை விடவும் எடை குறைவாக உள்ளதாகும். மேலும், கான்கிரீட்டுடன் பைபர் மற்றும் பாலிமர் (பாலி வினைல் ஆல்ஹகால்) வகை மூலக்கூறுகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் நெகிழும் தன்மை இயல்பாக அமைகிறது.

விரிசல்கள் வராது

பைபர் மற்றும் பாலிமர் பொருட்கள் பயன்படுத்துவதால் தண்ணீர் உட்புகுதல் மற்றும் நீர் கசிவு போன்ற குறைகள் இவற்றில் வருவதில்லை. அதனால், மழைக்காலங்களில் இதன் பயன்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். வீட்டின் தரைமட்ட அமைப்பு மற்றும் முக்கிய சுவர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும்போது விரிசல்கள் சுலபமாக தடுக்கப்படுகின்றன.

வகைகள்

லைட் வெயிட் ஈ.சி.சி கான்கிரீட், செல்ப் கம்பாக்டிங் கான்கிரீட், ஸ்பிரேயபிள் ஈ.சி.சி மற்றும் எக்ஸ்ட்ருடபிள் ஈ.சி.சி ஆகிய பயன்பாட்டு வழிகளில் மேற்கண்ட வளையும் கான்கிரீட் உபயோகப்படுத்தப்படுகிறது. விண்ணை முட்டும் கட்டமைப்புகளில் இவ்வகை கான்கிரீட் பயன்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக நன்மை அளிக்கக்கூடியது என்று அறியப்பட்டுள்ளது. மேலும் விரிசல்கள் உள்ள கட்டமைப்புகளில் இந்த புதுவகை கான்கிரீட்டை ‘ஸ்பிரே’ செய்தும் விரிசல்களை அடைக்கலாம் என்பதும், அதில் உள்ள எளிய தொழில்நுட்பமாகும்.

Next Story