மனை தேர்வில் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரிய வழிமுறை


மனை  தேர்வில்  கடைப்பிடிக்கப்பட்ட  பாரம்பரிய  வழிமுறை
x
தினத்தந்தி 24 Feb 2017 11:00 PM GMT (Updated: 24 Feb 2017 10:09 AM GMT)

இன்றைய சூழ்நிலையில் ஏற்பட்ட கட்டுமான தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியானது, கால, தேச, வர்த்தமான அடிப்படையில் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.

ன்றைய சூழ்நிலையில் ஏற்பட்ட கட்டுமான தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியானது, கால, தேச, வர்த்தமான அடிப்படையில் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. வீட்டுமனைகள் இயற்கையாக எவ்வித அமைப்பில் இருந்தாலும், அவற்றில் கட்டிடங்களை எளிதாக அமைக்க வாஸ்து சாஸ்திரமும் துணை நிற்கிறது. அதற்கேற்ப, வாஸ்துவின் விதிமுறைகள் தற்போது சுலபமாக ஆக்கப்பட்டு, கட்டுமானங்களை அமைப்பது காலத்தின் அவசியமாக மாறியிருக்கிறது.  

தகுந்த ஆய்வுகள்

பழைய காலங்களில் குடியிருப்புகளை அமைப்பதற்கு முன்னர், பூமியின் அமைப்பு மற்றும் அதில் உள்ள தோ‌ஷங்கள் பற்றி தக்க வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்த பின்னரே கட்டுமான பணிகளை தொடங்கி செய்யும் முறை இருந்து வந்துள்ளது. அதற்காக பல்வேறு வழிமுறைகள் அக்காலத்திய வாஸ்து வல்லுனர்களால் கையாளப்பட்டிருக்கின்றன.  

மலர் சோதனை

அத்தகைய பழைய முறைகளில், வீடு கட்டுவதற்கு முன்னர் செய்யப்படும் ‘புஷ்ப சோதனை’ என்ற மலர் சோதனை முறையும் ஒன்றாகும். அந்த சோதனையை செய்வதன் மூலம் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளை அறிந்துகொள்ளலாம் என்று நம்பப்பட்டது. சம்பந்தப்பட்ட மனை அதன் உரிமையாளர்களுக்கு நல்ல பலன்களை தரக்கூடியதா..? என்று கண்டறியக்கூடிய தன்மை கொண்டதாகவும் அந்த முறை பார்க்கப்பட்டது.

செய்யும் முறை

ஒரு நல்ல நாளில், காலை நேரத்தில், கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்ட மனையின் நடுப்பகுதியில் ஒரு முழம் ஆழம், நீளம் மற்றும் அகலம் கொண்ட குழியை எடுக்கவேண்டும். அது நிரம்பும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி விட்டு, ஒரு மலரை வலது கையினால் எடுத்து அந்த தண்ணீரின் நடுவில் விடவேண்டும். அந்த பூவானது வலச்சுற்றாக அதாவது கடிகார சுற்றாக, சுழன்றால் நல்வாழ்வும், பொருளாதார வளமும், மங்கள வாழ்வும் அமையும். அதற்கு மாறாக, பூவானது இடது புறமாக சுற்றும் பட்சத்தில் மேற்கண்ட நற்பலன்கள் முழுமையாக கிடைக்காது என்று நம்பப்பட்டது.

மலர் நிற்கும் பகுதி

மேலும், நீரில் விடப்பட்ட மலரானது சுற்றி வந்த பிறகு குழியின் எந்த ஓரத்தில் நிற்கிறது என்பதற்கு ஏற்ப தனித்தனியான பலன்களையும் மேற்கண்ட மலர் சோதனை முறையானது விவரிக்கிறது. அவற்றை இங்கே காணலாம்.

• மலரானது குழியின் ஈசானிய மூலையான வடகிழக்கு பகுதியில் சுற்றி வந்து நின்றால் தீர்க்க ஆயுள், புத்திர சம்பத்து, செல்வ வளம் ஆகியவற்றோடு, மனை உரிமையாளர் தானம் தர்மங்கள் செய்து புகழோடு வாழ்வார்.

• சுற்றி வந்த மலரானது இந்திர திசை எனப்படும் கிழக்கு திசையில் நின்றால், தனதானிய விருத்தி, சந்தான பாக்கியம், அமைதியான வாழ்வு ஆகியவை கிடைத்து, ஆசார அனுஷ்டானங்களோடு வாழ்வார்கள்.

• மலரானது, ஆக்கினேய திசையான தென்கிழக்கில் நின்றால் பெண்கள் உடல் நல பாதிப்பு, கடன்கள், வி‌ஷ ஜந்துக்கள் பயம் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

• சுழலும் மலரானது, எம திக்கான, தென் திசையில் நின்றால் சுப பலன்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

• தென்மேற்கு பகுதியான கன்னி மூலையில் மலர் நின்றால், செல்வ வளமும், நல்லோர் தொடர்பும் ஏற்பட்டு மகிழ்ச்சியான வாழ்வை பெறுவார்கள்.

• வருணன் ஆதிக்கம் பெற்ற மேற்கு திசையில், மலரானது சுற்றி வந்து நின்றால், செய்யும் காரியங்களில் வெற்றி ஏற்பட்டு, செல்வம் பெருகும் வாய்ப்புகள் உண்டு.

• வாயு மூலை எனப்படும் வடமேற்கு பகுதியில், சுற்றிய மலர் நின்றால் பல்வேறு சிரமங்களால் பொருள் விரயம் ஆவதற்கான சூழல் ஏற்படும்.

• சுழலும் மலர் குபேர திசையான வடக்கு திசையில் நின்றால் தானிய விருத்தி, சமூக அந்தஸ்து ஏற்பட்டு, தர்ம சிந்தனையுடன் செயல்பட்டு புகழ் பெறுவார்கள்.

Next Story