பழைய வீடு வாங்கவும் வங்கி கடன் கிடைக்கும்


பழைய  வீடு  வாங்கவும்  வங்கி  கடன்  கிடைக்கும்
x
தினத்தந்தி 24 Feb 2017 9:30 PM GMT (Updated: 24 Feb 2017 10:41 AM GMT)

தற்போது நிலவும் பொருளாதார சூழலில் வீடு மற்றும் வீட்டுமனை வாங்குவதற்கான வங்கி கடன் வட்டி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டுள்ளன.

ற்போது நிலவும் பொருளாதார சூழலில் வீடு மற்றும் வீட்டுமனை வாங்குவதற்கான வங்கி கடன் வட்டி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதை வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக கருதுகிறார்கள். சற்று குறைந்த விலையில் நகருக்குள் வீடு வாங்க வேண்டும் என திட்டமிடுபவர்கள் பழைய வீடுகள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

வங்கி தவணைக்காலம்

பழைய வீடு வாங்குவதற்கு வங்கிகளும், வீட்டு வசதி நிறுவனங்களும் அவர்களது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கடன் வழங்குகின்றன. பொதுவாக ‘பிளாட்கள்’ ஆயுள் சுமார் 70 முதல் 75 வருடங்களாக கணக்கிடப்படுகிறது. நல்ல நிலையில் உள்ள ‘பிளாட்கள்’ கட்டி முடிக்கப்பட்டு 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் இருக்கும் பட்சத்தில் வங்கிக்கடன் பெற வாய்ப்பு உண்டு. அவ்வாறு பெற்ற கடனை அதிகபட்சமாக 20 ஆண்டுகள் அல்லது கடன் பெற்றவருடைய பணி ஓய்வுக்கு முன்னர் திரும்ப செலுத்தும் விதமாக தவணைக்காலம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், வங்கியில் கடன் பெற்று, வீடு வாங்குபவர்களில் சுமார் 15 சதவிகிதம் பேர் பழைய ‘பிளாட்’ அல்லது பழைய வீடு வாங்குபவர்களாக இருக்கிறார்கள் என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மறு விற்பணை

நகர்ப்புறங்களில் பழைய வீடுகள் மறு விற்பனை செய்யப்படும்போது, எதிர்கால நலன் கருதி முதலீட்டு அடிப்படையிலும் ஒரு சிலர் பழைய வீடு வாங்குவது வழக்கம். பழைய வீடு வாங்கும்போது மின்சாரம், குடிநீர் இணைப்பு போன்ற வசதிகளுக்காக கூடுதல் செலவுகள் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது என்று நிதி ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.

கடன் விதிமுறைகள்

பழைய வீட்டுக்கு கடன் வழங்குவதில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் சம்பந்தப்பட வங்கியை பொறுத்து மாறுபடும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பழைய வீடு அல்லது பழைய அடுக்குமாடி குடியிருப்பு வாங்க, கடன் தரும்போது கட்டிடத்தின் வயது 15 வருடங்களுக்கு உட்பட்டதாக இருந்தால், வீட்டின் மொத்த மதிப்பில் சுமார் 75 சதவிகித அளவு கடனாக கிடைக்க வாய்ப்பு உண்டு. கட்டமைப்பின் வயது 20 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பட்சத்தில் 40 சதவிகித தொகை வரையிலும் கடனாக கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

மதிப்பீடு

பழைய வீட்டுக் கடன் வழங்குவதற்கு முன்னர் வங்கி சார்பில் வீடு மதிப்பீடு செய்யப்படும். மதிப்பீட்டாளர் ஒருவர் ஆய்வு செய்து வீடு கட்டி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன.? வீடு வலுவாக உள்ளதா..இல்லையா..? தாங்கு திறன் எவ்வளவு..? என்று பல அம்சங்களில் வீட்டை மதிப்பிடுவார். அவரது மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், வங்கிகள் பழைய வீட்டுக்கு கடன் வழங்குவது பற்றி முடிவு செய்யும்.

வட்டி விகிதம்

வழக்கமான வீட்டுக் கடன் போல பழைய வீட்டு கடனுக்கும் நிலையான (பிக்ஸ்டு வட்டி விகிதம்) மற்றும் மாறுபடும் (புளோட்டிங் வட்டி விகிதம்) வட்டி விகிதத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் தருகின்றன. நிலையான வட்டி விகித தவணை முறையில் குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்டும், ‘புளோட்டிங்’ வட்டி விகித தவணையில் கால வரையறை இல்லாமலும் தவணை செலுத்துவது பொதுவான நடைமுறையாக உள்ளது.

வரி சலுகைகள்

வீடு அல்லது அடுக்கு மாடியை தமது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும்போது திரும்ப செலுத்தும் முதலுக்கும், வட்டிக்கும் வரிச்சலுகை உண்டு. வீட்டை வாடகைக்கு விடும்பட்சத்தில் திருப்பி செலுத்தும் அசலுக்கு வரி சலுகை இல்லை. ஆனால், வட்டிக்கு வரி சலுகை உண்டு. மேலும், வாடகையை வருமானமாக காட்டுவதும் அவசியம்.

அடுக்கு மாடி

பழைய அடுக்குமாடி குடியிருப்பில் யூ.டி.எஸ். தவிர வீட்டின் மொத்த மதிப்புக்கு ஏற்ப குறிப்பிட்ட முத்திரைத்தாள் மற்றும் சொத்துப் பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தவேண்டும். பத்திர செலவுக்கு ஆகும் பணத்தையும் வங்கிகள் உள்ளிட்ட வீட்டு வசதி நிறுவனங்கள் கடனாக அளிக்கின்றன. அந்த கட்டணத்துக்கும் 80–சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.

‘மார்ஜின்’ தொகை

20 வருடங்களுக்குள் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ‘மார்ஜின்’ தொகை 25 சதவிகிதமாகவும், அதற்கும் அதிகமாக இருந்தால் 40 சதவிகிதம் ‘மார்ஜின்’ தொகையும் செலுத்தவேண்டியதாக இருக்கும் என்பது பொதுவான விதிமுறையாகும். மேலும், கடன் தொகைக்கு ஏற்பவும், வங்கிக்கு ஏற்பவும் ‘மார்ஜின்’ தொகை மாறுபடும். 30 ஆண்டுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை.

Next Story