சீரற்ற தரைத்தளத்தை சமன் செய்யும் இயந்திரம்


சீரற்ற  தரைத்தளத்தை  சமன்  செய்யும்  இயந்திரம்
x
தினத்தந்தி 10 March 2017 10:00 PM GMT (Updated: 10 March 2017 11:12 AM GMT)

வீடுகள் கட்டமைப்பில் பல்வேறு நிலைகளில், விதவிதமான வேலைகள் செய்ய வேண்டியதாக இருக்கும். பழைய காலங்களில் மனிதர்களால் பல நாட்கள் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தும் இப்போது இயந்திரங்கள் மூலம் சில மணிகளில் செய்து முடிக்கப்படுகின்றன.

வீடுகள் கட்டமைப்பில் பல்வேறு நிலைகளில், விதவிதமான வேலைகள் செய்ய வேண்டியதாக இருக்கும். பழைய காலங்களில் மனிதர்களால் பல நாட்கள் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தும் இப்போது இயந்திரங்கள் மூலம் சில மணிகளில் செய்து முடிக்கப்படுகின்றன.

பல்வேறு கருவிகள்

சாதாரண காரை பூசும் கரண்டி முதல் சுவர் அமைக்கும் ‘ரோபோ’ வரையில் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் நிறைய இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அவ்வப்போது பல்வேறு புதிய கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு சந்தையில் அறிமுகமாகி வருகின்றன.

பாதை அமைப்பு

வீடுகளின் கட்டுமான பணிகள் முடிவடையும் தருணத்தில் தோட்டம் அமைப்பது, அதில் நடைபாதைகளை செப்பனிடுவது, முக்கிய சாலையிலிருந்து வீட்டுக்கு வரக்கூடிய சாலை அமைப்பை சரிப்படுத்துவது அல்லது அவற்றில் ‘பேவர் பிளாக்ஸ்’ பதிப்பது போன்ற வேலைகள் செய்யவேண்டியதாக இருக்கும்.

தட்டு பலகைகள்

மேற்கண்ட எல்லாவித பணிகளையும் செய்வதற்கு முன்னர், தரைப்பரப்பை சமன்படுத்தி, உறுதி செய்யப்படுவது அவசியம். தரையின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் இளகிய தன்மையானது, பல முறைகள் அழுத்தப்படுவதன் வாயிலாக உறுதியாக மாற்றப்படுகிறது. அந்த பணிக்காக ‘தட்டு பலகைகள்’ பயன்படுத்தப்பட்டு, இரண்டு அல்லது மூன்று ஆட்களால் பல மணி நேரம் தரையின் மேற்பரப்பு தட்டித்தட்டி வலுவாக்கப்படும். அதற்கு முன்னர் சிறிது தண்ணீர் தெளிக்கப்பட்டு, தரையில் உள்ள பெரிய கற்கள் அகற்றப்படும்.

‘வைப்ரேட்டிங் பிளேட் கம்பாக்டர்’

நடைபாதைகள் உள்ளிட்ட கட்டமைப்பின் தரைத்தள பணிகளை சுலபமாக செய்து முடிக்க ‘வைப்ரேடிங் பிளேட் கம்பாக்டர்’ என்ற சிறிய இயந்திரம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. கைகளால் சுலபமாக இயக்கும்படி எளிய தொழில்நுட்பத்துடன் பல்வேறு வகைகள் மற்றும் அளவுகளில் இவ்வகை ‘வைப்ரேட்டிங் பிளேட் கம்பாக்டர்கள்’ தயாரிக்கப்படுகின்றன. தரைத்தளம் எவ்விதத்தில் இருந்தாலும் இக்கருவியை பயன்படுத்தி வேலையை செய்து முடிக்கலாம்.

2000 அதிர்வுகள்

தரையில் நின்றபடி முன்னோக்கி நகர்த்தியவாறு தரையை வலுவாக்க ஏதுவாக ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை அகலத்தில், அதிரக்கூடிய ‘பிளேட்கள்’ கீழ்ப்புறம் பொருத்தப்பட்டிருக்கும். அந்த ‘பிளேட்கள்’ ஒரு நிமிடத்துக்கு 2000 தடவைகள் அதிர்வடைந்து, தரையில் மோதுவதன் வாயிலாக ஒன்றரை அடி ஆழம் வரையில் உள்ள மண் கெட்டிப்படுத்தப்படுகிறது.

எரிபொருள்

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் மின்சாரம் ஆகியவற்றால்
இயங்கும்படி கச்சிதமாக அமைக்கப்பட்ட ‘மோட்டார்’ மூலம் இக்கருவி இயங்கும். மண் பரப்பில் புழங்குவதால் தூசிகள் அடைத்துக்கொள்ளாமலிருக்க தக்க மேலுறை கொண்டு ‘மோட்டார்’ மூடப்பட்டிருக்கும்.

பணிகள் சுலபமாகும்

இதன் எடையானது ஒருவரால் எளிதாக நகர்த்தி பணி புரிவதற்கேற்ப 85 கிலோ முதல் 175 கிலோ வரையில் இருக்கும். ‘ரேம்ப்’ அமைப்புகள் உள்ளிட்ட நடைபாதைகளை இந்த ‘வைப்ரேட்டிங் பிளேட் கம்பாக்டர்’ கொண்டு செப்பனிட்டு சுலபமாக பணிகளை செய்து முடிக்கலாம்.

Next Story