‘ஸ்மார்ட் போன்’ மூலம் செயல்படும் ‘ஸ்வீட் ஹோம்’


‘ஸ்மார்ட்  போன்’  மூலம்  செயல்படும்  ‘ஸ்வீட்  ஹோம்’
x
தினத்தந்தி 1 April 2017 3:30 AM IST (Updated: 31 March 2017 6:01 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமானத்துறையில் மாற்றங்கள் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக இருந்து வருகிறது.

ட்டுமானத்துறையில் மாற்றங்கள் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக இருந்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் அவற்றை கட்டிட அமைப்புகளிலும் பயன்படுத்தும் புதிய தொழில் நுட்பமானது அறிமுகமாகி கொண்டே வருகிறது. அத்தகைய நுட்பங்களை பயன்படுத்தி வீடுகள் உள்ளிட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை உருவாக்குவதில் கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

‘ஸ்மார்ட் தொழில் நுட்பம்’

‘ஆட்டோமே‌ஷன்’ எனும் தொழில்நுட்பத்தின் உதவியால் வீடுகளை தானியங்கி அமைப்பாக மாற்றுவதன் வாயிலாக பல முக்கியமான வேலைகளை நாம் மற்றொரு இடத்திலிருந்தும் செய்ய இயலும் என்பது இந்த தொழில்நுட்பத்தில் முக்கியமான அம்சமாகும். இந்த நுட்பத்தை தங்களது புதிய வீட்டு திட்டங்களில் பயன்படுத்துவதன் வாயிலாக, நுகர்வோரை கவர கட்டுமான நிறுவனங்கள் விரும்புகின்றன. இத்தகைய ‘ஸ்மார்ட்’ தொழில்நுட்பம் காரணமாக வீடுகள் ஸ்மார்ட்டாக மாறுகின்றன என்பதால் அவற்றை ‘ஸ்வீட் ஹோம்’ என்று குறிப்பிடுவது கச்சிதமாக இருக்கும்.

அன்றாட வேலைகள்

பல நேரங்களில் வெளியில் போகும்போது, அறையில் உள்ள மின் விசிறியின் ‘ஸ்விட்ச்’ அணைக்கப்பட்டுள்ளதா..? ‘ஏ.சியை’ நிறுத்தி விட்டோமா..? அல்லது கதவை சரியாக பூட்டி விட்டோமா..? என்று பலருக்கும் சந்தேகமாக இருக்கும். அத்தகைய சந்தேகங்களால் நமது அன்றாட வேலைகள் பாதிக்கப்படாமல் இருக்க மேற்கண்ட தொழில்நுட்பம் உதவுகிறது. அதாவது, நமது கையில் இருக்கும் ‘ஸ்மார்ட் போன்’ உதவியுடன் பல்வேறு கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடிவதோடு, அவை இயங்குவது பற்றியும் தெரிந்து கொள்ளமுடியும்.

இணைய வசதி அவசியம்

மேற்கண்ட வசதிகளை செய்வதற்கு வீட்டின் மொத்த விலையிலிருந்து 30 முதல் 35 சதவிகிதம் வரையில் செலவு ஆகலாம் என்று வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் மேற்கண்ட செலவுகளை அவசியமான ஒன்றாகத்தான் கருத வேண்டும் என்றும் கட்டுமான வல்லுனர்கள் சொல்வதும் கவனிக்கவேண்டிய ஒன்றாகும். ஒரு முக்கியமான சிக்கல் என்னவென்றால், நமது ‘ஸ்மார்ட் போனில்’ எல்லா நேரங்களிலும் இணைய தொடர்பு இருந்தாக வேண்டும். அப்போதுதான் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு வசதிகளை பயன்படுத்த முடியும்.

பெரு நகரங்கள்

‘ஸ்மார்ட்’ வசதிகள் கொண்ட கட்டமைப்புகள் தற்போது சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. வீட்டில் நாம் இல்லாத சமயங்களில் உறவினர்கள் வந்துவிட்டாலும் கவலை ஏதுமில்லை. கண்காணிப்பு கேமரா உதவியுடன், வந்திருப்பது யார்..? என்று அறிந்து விட்டு பணி புரியும் இடத்திலிருந்தே வீட்டின் கதவுகளை திறந்து உறவினரை வீட்டுக்குள் அனுமதிக்கலாம். விருந்தினர் அறையின் குளிர் சாதன வசதியையும் இயக்கலாம்.  

தேவைகள் பெருகும்

வெயில் காலங்களில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு செல்லும்போது முன்னதாகவே ஏ.சியை இயக்கும் ‘ஸ்விட்சை’ இயக்குவதன் மூலமாக, வீட்டுக்குள் நுழையும்போதே அறை குளுகுளுவென மாறியிருக்கும். இத்தகைய அட்டகாசமான தொழில்நுட்பங்கள் கொண்ட வீடுகளை பல்வேறு தரப்பினரும் விரும்புவதால் இத்தகைய வசதிகள் கொண்ட வீடுகளுக்கான தேவைகள் அதிகமாகி வருகிறது.

Next Story