கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும் அம்சங்கள்


கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும் அம்சங்கள்
x
தினத்தந்தி 31 March 2017 11:00 PM GMT (Updated: 31 March 2017 1:20 PM GMT)

2017–18–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு கட்டுமானத்துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது.

2017–18–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு கட்டுமானத்துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. அதன் காரணமாக பல்வேறு முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ரியல் எஸ்டேட் வல்லுனர்களும் இனிமேல் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். பில்டர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் ஆகிய இரண்டு தரப்பிலும் பல நன்மைகளை தரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அந்த சலுகைகள் பற்றி இங்கே காணலாம்.

*அரசின் நிதிநிலை அறிக்கையில், முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டத்தின்கீழ் மலிவு விலை வீடுகளுக்கான மானியம் மற்றும் வீடுகளுக்கான பரப்பளவு கணக்கீடுகளை உயர்த்தி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*கட்டுனர்கள் தங்களது ‘புராஜெக்டுகளின்’ கட்டுமான பணிகளை முடித்து ஒரு வருடம் கழித்து அவற்றிற்கான வாடகை வரியை செலுத்தினால் போதுமானது என்று நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான வி‌ஷயம் ஆகும். இதற்கு முன்பு பணி நிறைவு சான்றிதழ் பெற்ற முதல் மாதத்திலிருந்து வாடகைக்கான வரியை கணக்கிட்டு செலுத்தவேண்டியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

*நிலம் மற்றும் கட்டமைப்புகளுக்கான மூலதன லாப வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூலதன லாபம் என்பது ஒரு வீடு அல்லது மனை, குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து விற்கப்படும்போது கிடைக்கும் லாபம் ஆகும். அந்த லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும். அவ்வாறு அசையா சொத்துகளிலிருந்து லாபம் பெறுவதற்கான அதிகபட்ச கால அளவு முன்பு 3 ஆண்டுகளாக இருந்தது, தற்போது 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 1981–ம் ஆண்டின் குறியீட்டு எண் மதிப்பீட்டுக்கு பதிலாக, 2001–ம் ஆண்டை அடிப்படையாக கொண்ட விலை குறியீட்டு எண் கணக்கில் கொள்ளப்படும். இதனால் மூலதன லாப வரியின் அளவு குறைந்து, சொத்து விற்பனை அதிகமாகும்.

*சென்ற ஆண்டுகளில், பெருநகரங்களில் குறைவான பட்ஜெட் வீடுகளுக்கான கட்டிட பரப்பளவு 30 சதுர மீட்டராகவும், மற்ற நகரங்களில் 60 சதுர மீட்டராகவும் இருந்தது. அந்த அளவுகள் ‘பில்ட்–அப் ஏரியாவாக’ கணக்கிடப்பட்டு வந்த நிலையில், அவை ‘கார்ப்பெட் ஏரியா’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வீடுகளின் இட வசதி இன்னும் அதிகரிக்கும்.

*குறைவான பட்ஜெட் வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டிய கால அளவானது முன்னர் 3 ஆண்டுகளாக இருந்து வந்தது. அதுவும் தற்போது திருத்தப்பட்டு 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. வீடு கட்டுபவர்களுக்கு அது நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

*கட்டுமானத்துறை இப்போது ‘நான்–பிரையாரிட்டி செக்டார்’ என்ற நிலையிலிருந்து ‘டாப்–பிரையாரிட்டி செக்டார்’ ஆக மாற்றப்பட்டுள்ளதால் தொழில் துறை அந்தஸ்து கிடைத்துள்ளது. அதன் வாயிலாக கட்டுனர்கள் தங்கள் கட்டுமான பணிகளுக்கான வங்கி கடன்களை அதிக சிரமமில்லாமல் பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

Next Story