இயற்கை வெளிச்சம் பரவ உதவும் ஜன்னல் அமைப்புகள்


இயற்கை வெளிச்சம் பரவ உதவும் ஜன்னல் அமைப்புகள்
x
தினத்தந்தி 14 April 2017 10:15 PM GMT (Updated: 14 April 2017 12:18 PM GMT)

மக்கள் தொகை அதிகரிப்பு, தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக இடம் பெயர்தல் உள்ளிட்ட

 பல்வேறு காரணங்களால் நகரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கான தேவைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதன் காரணமாக வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவைகளும் பெருகி வருகின்றன. இத்தகைய சூழலில் ஏற்படும் இடப்பற்றாக்குறை காரணமாக வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதிகளை கச்சிதமாக அமைப்பது இயலாததாகி விடுகிறது.

இடம் பற்றாக்குறை

நகர்ப்புறங்களில் அமைக்கப்படும் குடியிருப்பு பகுதிகளில் போதுமான காலியிடம் விடப்படுவது சிக்கலான ஒன்றாக இருக்கிறது. இடம் பற்றாக்குறை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் நிலத்திற்கான மதிப்பு காரணமாகவும் கட்டமைப்புகளுக்கு இடையே காலியிடம் விடப்படுவதில்லை. அதன் காரணமாக வீட்டின் முன் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஜன்னல் போன்ற காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்திற்கான அமைப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. இது போன்ற தருணங்களில் கட்டிடங்களுக்குள் வெளிச்சம் வருவதற்காக கூரையின் மீது அமைக்கப்படும் பிரத்யேகமான ஜன்னல் அமைப்புகள் பற்றி காணலாம்.    

'பிக்ஸ்டு ஸ்கை லைட்'

சரிவான கூரை கொண்ட கட்டிடங்களின் மேற்புறமாக வெளிச்சம் மட்டும் வரும்படியாக இந்த அமைப்பு இருக்கும். பெரும்பாலும் கண்ணாடிகள் கொண்டு பொருத்தப்படும் இவை நான்கு புறமும் வலுவான 'பீடிங்' கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். அலுமினியம், பைபர் மற்றும் இரும்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட 'பிரேம்கள்' மூலம், திறக்க இயலாத வகையில் அமைக்கப்படும்.

'வெண்டிலேட்டடு ஸ்கை லைட்'

சமையலறை உள்ளிட்ட தண்ணீர் புழங்கும் பகுதிகளுக்கு இவ்வகை அமைப்பு சரியான தேர்வாக இருக்கும். காற்று மற்றும் வெளிச்சம் ஆகியவை வருவதற்கேற்ற வகையில் இவை கட்டமைக்கப்படுகின்றன. நாமாக திறந்து மூடும் வகையில் அல்லது ரிமோட் மூலம் இயக்கப்படும் வகையிலும் அமைத்துக்கொள்ளலாம். காற்று மற்றும் வெளிச்சம் காரணமாக மேற்கண்ட இடங்களில் சுகாதாரமான சூழல் நிலவுவதற்கு இவ்வகை அமைப்புகள் உதவியாக இருக்கின்றன.

'டியூபுலர் ஸ்கை லைட்'

மேலை நாடுகளில் இவ்வகை வெளிச்ச அமைப்புகள் உபயோகத்தில் இருக்கின்றன. நமது நாட்டிலும் இவை தற்போது சில இடங்களில் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பெயருக்கு ஏற்றவாறு அரைவட்ட வடிவ கண்ணாடி அல்லது 'பாலிகார்பனேட்' போன்ற பொருட்களால் இவை தயாரிக்கப்படுகின்றன. கூரையின் மீது தண்ணீர் நுழையாதவாறு பொருத்தப்பட்டு அறையின் 'சீலிங்' பகுதியில் வட்ட வடிவத்தில் 'டூம் ஸ்டைல் லைட்' போன்ற தோற்றத்தில் காணப்படும். இடைப்பட்ட பகுதியில் வெளிச்ச பிரதிபலிப்புக்காக 'சில்வர் பேப்பர்' மூலம் தயாரிக்கப்பட்ட 'பிளெக்ஸிபிள் ஹோஸ்' பொருத்தப்பட்டிருக்கும். 

'கஸ்டம் ஸ்கை லைட்'

இவ்வகை வெளிச்ச அமைப்புகள் கூரையின்மேல் பல்வேறு வடிவங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு பொருத்தப்படுகின்றன. 'ஸ்கை லைட்' வகைகளில் இதுவே பெரிதானது. கட்டிடத்தின் மத்திய பகுதியில் 'பைபர்' அல்லது 'பாலி கார்பனேட்' ஷீட்கள் கொண்டு வேண்டிய வடிவத்தில், மழைநீர் உட்புகாதவாறு தக்க 'பீடிங்' கொண்டு கச்சிதமாக அமைக்கப்படும்.

'பிரமிடு ஸ்கை லைட்'

குட்டி பசங்கள் படிக்கும் அறைகள், வரவேற்பறைகள் மற்றும் பூஜை அறைகள் ஆகியவற்றில் இவ்வகை வெளிச்ச அமைப்புகளை அமைப்பதன் வாயிலாக வெளிச்சம் மட்டுமல்லாமல் இயற்கை சக்திகளும் வீடுகளுக்குள் நுழைவதாக பலரும் நம்புகிறார்கள். 'பாலிகார்பனேட்' உள்ளிட்ட பொருட்களால் மழைநீர் உட்புகாதவாறு வலுவான அமைப்பாகவும், அகலம் மற்றும் உயரம் ஆகியவை தக்க அளவுகளில் இருப்பது போன்றும் மேற்கூரையில் இவை பொருத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்டவை தவிரவும் வெவ்வேறு வகையான 'ஸ்கை லைட்' அமைப்புகளும் தற்போது  நடைமுறையில் இருப்பதும்  கவனிக்கத்தக்கது. 

Next Story