ஒட்டு மொத்த மனை அமைப்பை காட்டும் வரைபடம்


ஒட்டு மொத்த மனை அமைப்பை  காட்டும் வரைபடம்
x
தினத்தந்தி 14 April 2017 10:45 PM GMT (Updated: 14 April 2017 12:29 PM GMT)

மனை அமைப்பு வரைபடம் என்பது ஒட்டு மொத்த கட்டமைப்புகளும் அமையக்கூடிய 'சைட்' எனப்படும் மனையின் சகல அம்சங்களையும் குறிப்பிட்டுக் காட்டும் வரைபடம் ஆகும்.

மேலும், அதில் மனைக்கு உட்புறம் செல்வதற்கான சாலைகள் பற்றியும், கட்டமைப்புகள் தவிர்த்த இதர பகுதிகளின் அமைப்பு பற்றியும் அதில் கச்சிதமாக காட்டப்படும்.

நான்கு திசைகள்

மனைக்குள் நுழைவதற்கான பிரதான வாசல், மனையின் எல்லைக்குள் ஏற்கனவே உள்ள கட்டிடங்கள், இனிமேல் கட்டப்பட உள்ள கட்டிடங்கள், மதில்சுவர், மரங்கள், அணுகுச்சாலைகள் போன்ற பல்வேறு அம்சங்களும் வரைபடத்தில் இருக்கும். மனையின் நான்கு முக்கிய திசைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தெளிவான பார்வை

வரைபடத்தின் முக்கிய நோக்கமானது கட்டிடங்கள், எல்லைகள், சாலைகள், அணுகுச்சாலைகள் ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று எவ்விதமாக தொடர்பு கொண்டுள்ளன என்பது பற்றியும், கட்டமைப்புகள் எந்த திசைகளை நோக்கியபடி வடிவமைக்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

பிற அம்சங்கள்

ஒரு மனையில் அமைக்கப்பட உள்ள கட்டுமான திட்டத்திற்கு எவ்விதமான வடிவமைப்புக்களை செய்வது என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னர், மனை அமைப்பு வரைபடம் வரைந்து, அதற்கேற்ப மற்ற விஷயங்களையும் முடிவு செய்து கொள்வது வழக்கம். மேலும், கட்டமைப்புகள் சாலையில் இருந்து எவ்வளவு தொலைவில் அமையவேண்டும், மனையின் எல்லைகள் மற்றும் கட்டிடங்களுக்கும் இடையில் உள்ள மிகக்குறைந்த தூரம் போன்ற சட்டரீதியான விதிமுறைகள் போன்றவை கவனத்தில் கொள்ளப்படும். கூடுதலாக, சூரிய வெப்பம் உள்ளிட்ட மற்ற இயற்கை சக்திகளின் பாதிப்புகள் போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு கட்டிட அமைப்புகள் முடிவு செய்யப்படுவதும் முறை.

Next Story