கட்டுமான பணிகளுக்கான பொதுவான டிப்ஸ்


கட்டுமான பணிகளுக்கான பொதுவான  டிப்ஸ்
x
தினத்தந்தி 14 April 2017 11:00 PM GMT (Updated: 14 April 2017 12:31 PM GMT)

தற்போதைய சூழலில் கட்டுமான பணிகள் நடக்கும்போது பலவிதமான தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

 பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களும் எச்சரிக்கையாக செயல்படவேண்டிய நிலையில்தான் கட்டுமான பணிகள் உள்ளன. அத்தகைய பணிகள் எளிமையாக இருந்தாலும் கவனமாக செய்யப்பட வேண்டியது அவசியம். அவற்றில் சில முக்கியமான குறிப்புகளை இங்கே காணலாம். 

வெளிப்புற சாலை மட்டத்தை கணக்கிட்டு கட்டிடத்தின் பேஸ்மெண்ட் உயரத்தை வழக்கத்தைவிட சற்று உயரமாக அமைப்பது நல்லது. காரணம் எதிர்காலங்களில் ரோடு மட்டம் அதிகப்படுத்தப்படும்போது வீட்டு தரைமட்டம் சாலையைவிட பள்ளமாக அமைவது தடுக்கப்படும்.

அஸ்திவாரம் சற்றே அதிக உயரத்தில் அமைக்கப்படும்போது இரண்டுக்கும் மேற்பட்ட கன்சாலிடேஷன் செய்த பிறகே பில்லிங் மெட்டீரியல் இட்டு நிரப்பவேண்டும்.

கட்டுமான பணிகளில் மட்டம் சரி செய்யும்போது வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்போது டியூபில் நீர் குமிழிகள் இல்லாது கவனித்துக்கொள்ளவேண்டும்.

அஸ்திவாரம், பெல்ட் கான்கிரீட், லிண்டல், மேல் தளம் அமைத்தல் ஆகிய அனைத்து நிலைகளிலும் வாட்டர் லெவல் பார்த்து அமைப்பது நல்லது.
பொதுவாக கட்டுமான பணிகளில் செங்கற்களை நீரில் நன்றாக நனைத்த பிறகே பயன்படுத்தவேண்டும்.

செங்கல் சுவர் அமைப்பின் ஒவ்வொரு பினிஷிங் நிலைகளிலும் அதாவது பேஸ், லிண்டல், ரூப் ஆகிய நிலைகளில் குத்துக்கல் வரிசை கட்டமைப்பாக இருப்பது சிறப்பானது.

ஒரு நாளில் 5 அடிக்கு மேலாக செங்கல் சுவர்கள் அமைப்பது சரியான முறையல்ல. காரணம் அந்த அளவிற்கு மேலாக கட்டப்படும்போது கட்டுமானத்தின் தரம் குறைந்து விடும்.

காலம், பீம் ஆகியவற்றுடன் செங்கல் சுவர் இணைக்கப்படும்போது தக்க துளை ஏற்படுத்தி, கம்பிவலை மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை பயன்படுத்தி இணைக்கப்பட வேண்டும்.

சுவரில் பூசுவதற்கான காரை தயார் செய்யும்போது மணலில் உள்ள தூசி துரும்புகள் பிளாஸ்டிக் பேப்பர்கள் மற்றும் கூழாங்கற்கள் ஆகியவற்றை நீக்கி விட்டே பயன்படுத்த வேண்டும்.

சீலிங் பூச்சு செய்யும்போது அதை சற்றே வெட்டு இரும்பு கொண்டு சிறிய அளவில் கொத்திவிட்ட பிறகே வேலையை தொடங்க வேண்டும்.
சுவர்களுக்கு பூச்சு வேலைகள் செய்யும்போது ஒரே நாளில் இரண்டு கோட்டிங்குகள் பூசுவது கூடாது.

முக்கியமாக பிளம்பிங் பாயிண்ட், எலக்ட்ரிகல் பாயிண்ட் ஆகிய வேலைகள் முடிந்த பிறகே சுவர் பூச்சு வேலைகளை செய்யவேண்டும்.
மெயின் டோர் பொருத்தப்படும்போது அதன் அளவிற்கேற்ப
6 கிளாம்புகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

சமையலறை ஷெல்ப் அமைக்கும்போது அதன் கீழ்ப்புறமாக கேஸ் சிலிண்டர் வைப்பதற்கேற்ற அளவு இடம் இருப்பதை உறுதி செய்து
கொள்ளவேண்டும். மேலும் எதிர்காலங்களில் தரை மட்டம் உயர்த்து சமயங்களில் பாதிப்பு வராதவாறு சற்று கூடுதலான இட வசதி இருப்பதுபோல் அமைப்பது நல்லது.

Next Story