கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு வழி வகுக்கும் அம்சங்கள்


கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு வழி  வகுக்கும் அம்சங்கள்
x
தினத்தந்தி 15 April 2017 5:15 AM IST (Updated: 14 April 2017 6:08 PM IST)
t-max-icont-min-icon

2016-ம் ஆண்டுக்கான சர்வதேச ரியல் எஸ்டேட் ஆய்வில் சென்னை போன்ற பெரு நகரங்கள் தரவரிசையில் முன்னேறியிருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

மேலும், கட்டுமானத்துறையில் நேரடி அன்னிய முதலீடுகள் சாத்தியம் என்ற நிலையில், பில்டர்களுக்கு பொருளாதார ரீதியில் நல்ல வாய்ப்பாக அது மாறும். அதாவது, பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான சூழல்கள் ஏற்பட்டிருப்பதால் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்டும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்திருப்பது
கவனிக்கத்தக்கது.

வீடுகளின் தேவை

வரும் காலங்களில் நகர்ப்பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு ஒன்றரை கோடி வீடுகள் தேவை என்ற நிலை இருக்கிறது. மேலும், அத்தகைய வீடுகள் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கான தேவையாகவும் பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த மலிவு விலை குடியிருப்புகளுக்கான உள்கட்டமைப்பு தகுதியை, அரசு தற்போதைய பட்ஜெட் மூலமாக வழங்கியுள்ளது. அதனால், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட மக்களுக்கு பயன் கிடைக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும்.

வட்டி விகிதம் குறைவு

பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு பிறகு, தற்போது வங்கிகள் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்திருப்பது மற்றும் அரசு மானியம் போன்ற காரணங்களால் கட்டுமான துறையில் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. பில்டர்களும் பல்வேறு திட்டங்களை தொடங்கவும் வாய்ப்புகள் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கால அவகாசம் குறிப்பாக, மலிவு விலை குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளால்  வாடிக்கையாளர் மற்றும் கட்டுனர் ஆகிய இருவருக்கும் நன்மைகளை எதிர்பார்க்கலாம். அதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு  தரமுள்ள மலிவு விலை வீடுகள் கிடைப்பது சாத்தியம். கட்டுமான காலத்தை மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகத் திருத்தம் செய்திருப்பது பில்டர்களுக்கு வசதியாக இருக்கும்.

கட்டமைப்பு வகைகள்

சென்னையில் மலிவு விலை குடியிருப்பு
பிரிவுகள் ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி, மேற்கு பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், கொளத்தூர் மற்றும் தெற்கு பகுதிகளான கூடுவாஞ்சேரி,
செம்பரம்பாக்கம் போன்ற பகுதிகளில் அமையவிருக்கிறது. இந்த பகுதிகளில் வாடகை வருவாய், 4 சதவிகித அளவுக்கு கடந்த சில
ஆண்டுகளில் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கபெருமாள் கோயில், ஒரகடம்,  படப்பை, ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 450 சதுர அடியிலிருந்து 815 சதுரஅடி வரையிலான மத்திய தர மக்களுக்கான குடியிருப்புகள் அமைய இருக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகளில் 51 சதவீதம் நடுத்தர பிரிவு வீடுகளாகவும், 24 சதவீதம் மலிவு விலை வீடுகளாகவும், 21 சதவீதம் ஆடம்பர பிரிவு வீடுகளாகவும்  இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story