மின்சார செலவை கட்டுப்படுத்தும் வீட்டு கூரைகள்


மின்சார செலவை கட்டுப்படுத்தும் வீட்டு கூரைகள்
x
தினத்தந்தி 14 April 2017 11:30 PM GMT (Updated: 14 April 2017 12:46 PM GMT)

நமது பகுதிகளில் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம்.

 சூரிய வெப்பம், காற்று ஆகிய இயற்கை சக்திகள் வருடத்தின் பல மாதங்கள் நம்மீது தாக்கம் செலுத்தும் பூகோள அமைப்பு கொண்டதாக நமது பகுதி உள்ளது. இயற்கை சக்திகளில் ஒன்றாக இருக்கும் சூரிய சக்தியை அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்தும் பல்வேறு வழிகள் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றன. பொதுவாக வீடுகளின் மேற்கூரைகளின் குறிப்பிட்ட சில பகுதிகளில் சூரிய வெப்பம் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் 'சோலார் பேனல்கள்' அமைக்கப்படும் முறை பரவலான பயன்பாட்டில் உள்ளது.   

'சோலார் பேனல்கள்'

சூரிய தகடுகள் எனப்படும் 'சோலார் பேனல்களை' கட்டி முடித்த வீடுகளின் மேல்தளம் அல்லது கூரை பகுதிகளில் பதித்து பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டின் ஒட்டு மொத்த கூரைப்பகுதியையே சோலார் பேனல்கள் கொண்டு அமைக்கும் புதிய முறை அறிமுகமாகி நடைமுறையில் உள்ளது. பழைய முறையைவிட அதிகமான பரப்பில் அமைக்கப்படும் காரணத்தால், வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை சுலபமாக அதன் மூலம் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது.

புதிய முறை

'பில்டிங் இன்டெக்ரேட்டடு போட்டோ வோல்டைக்ஸ்' (பி.ஐ.பி.வி) என்ற மெல்லிய பிலிம் போன்ற சூரிய சக்தி தகடுகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த தகடுகளை கட்டிடத்தின் கூரைமீது நேரடியாக பொருத்தப்படும் வகையில் சூரிய சக்தி செல்களை கொண்ட 'டைல்களாக' அல்லது 'போட்டோ வோல்டைக்ஸ் ஷீட்களாக' தயாரிக்கப்பட்டு கிடைக்கின்றன. அதனால், இவற்றை முழுமையாக மேற்கூரை மீது அமைத்து பொருத்திக்கொள்ள முடியும்.

வெப்ப தாக்கம்

அந்த தகடுகளில் அமைக்கப்பட்டுள்ள மூன்று அடுக்குகளில் சூரிய சக்தி சேமிக்கப்படுவதால் வீட்டின் வெப்பநிலை குறைகிறது. அதன் மூன்றாவது அடுக்கில் வெப்ப ஈர்ப்பை தடுக்கும் பிரத்யேகமான 'வினைல் கோட்டிங்' தரப்பட்டுள்ளது. அதனால் வெப்பம் மின்சார கூரைகளின் வாயிலாக வீட்டிற்குள் நுழையாது. அதனால் கோடை கால வெப்பம் வீடுகளுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. அதனால் வீடுகளுக்குள் மிதமான குளுமை ஏற்படவும் மின்சார கூரைகள் உதவுவதாக சொல்லலாம்.

செலவு குறைவு

இந்த சூரிய சக்தித் தகடுகளை அமைக்க பழைய முறையை விடவும் குறைந்த செலவு ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், சூரிய ஒளி குறைவாக இருந்தாலும் இவை திறமையாக செயல்படும் என்று நிபுணர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, வெவ்வேறு வகையான அலை நீளங்கள் கொண்ட சூரிய ஒளியை கிரகித்து மின்சாரமாக மாற்றும் திறம் கொண்டதாகவும் உள்ளது. 

முன்னுரிமை

வீட்டு கடன், வீட்டு மேம்பாட்டு கடன் ஆகியவற்றை பெறுபவர்களிடம் வீட்டு கூரை சூரிய ஒளி மின்சார உற்பத்தி அமைப்பை பொருத்த ஊக்கப்படுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நிதி சேவைகள் துறை அறிவுறுத்தி இருக்கிறது. வீடுகளில் மின்கட்டமைப்பு இணைப்புடன் கூடிய சூரிய ஒளி மின்உற்பத்தி அமைப்புகள் அல்லது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி அமைப்புகள் பொருத்துபவர்களுக்கு முன்னுரிமை பிரிவில் கடன் வழங்குமாறு பட்டியலிடப்பட்ட அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கியும் வலியுறுத்தி உள்ளது.

 மானியம்

சூரிய மின் உற்பத்தி பலகைகள் சராசரியாக 25 ஆண்டுகள் பயன்படுத்த தக்கவை. சூரிய மின் பலகையானது முதல் 10 ஆண்டுகளுக்கு 90 சதவீதமும், 25 ஆண்டுகளுக்கு 80 சதவீதமும் மின் உற்பத்தி செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் 30 சதவீத மானியம் மற்றும் தமிழக அரசின் 20 சதவிகித மானியம், ஆக மொத்தம் 50 சதவிகிதம் மானியம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சூரிய தகடுகளுக்கு 5 ஆண்டுகள் உத்தரவாதமும் உள்ளது.

Next Story