கான்கிரீட் பாதுகாப்பில் துணை நிற்கும் தொழில்நுட்பங்கள்


கான்கிரீட் பாதுகாப்பில் துணை நிற்கும் தொழில்நுட்பங்கள்
x
தினத்தந்தி 22 April 2017 6:27 AM GMT (Updated: 22 April 2017 6:26 AM GMT)

இன்றைய சூழ்நிலையில் 25 வருடங்களுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தனி வீடுகளாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் நமது பகுதியில் நிறைய இருக்கின்றன.

ட்டுமான துறையினருக்கு பெரும் சிக்கலாக இருக்கும் விஷயங்களில் ‘வால் கிராக்’ எனப்படும் சுவர் விரிசலும் ஒன்று. அன்று முதல் இன்று வரை விரிசல்களை சரி செய்ய பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பொதுவாக, கான்கிரீட் பூச்சு மற்றும் செங்கல் கட்டுமானம் போன்ற சிமெண்டு கலந்து செய்யப்படும் எந்த வேலையும் செய்து முடித்த மறுநாள் முதல் ‘வாட்டர் கியூரிங்’ எனப்படும் தண்ணீர் விடப்படுவது வழக்கம்.

வேதியியல் மாற்றம்

அதன் மூலம், சிமெண்டில் ‘ஹைட்ரேஷன்’ எனப்படும் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து, மணல் மற்றும் ஜல்லியுடன் ஒன்றிணைந்து, வலுவாக மாறி விரிசல்களை தடுக்கிறது. கான்கிரீட்டுக்கு 14 நாட்களும், மற்ற வேலைகளுக்கு 7 நாட்களும் ‘வாட்டர் கியூரிங்’ செய்வது வழக்கம். உத்திரம் எனப்படும் பீம், தூண் எனப்படும் காலம் போன்றவற்றின் மீது கோணிச்சாக்குகள் சுற்றப்பட்டு, அதன்மீது தண்ணீர் விடுவது வழக்கம்.

பழைய கட்டமைப்புகள்

மேற்கண்ட வழிகளை கடைப்பிடிக்கும் நிலையிலும், பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு கூடுதலான பராமரிப்பு செலவுகளை உண்டாக்கிவிடுகின்றன. இன்றைய சூழ்நிலையில் 25 வருடங்களுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தனி வீடுகளாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் நமது பகுதியில் நிறைய இருக்கின்றன. அவற்றின் கட்டுமான வலிமை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது அவசியமாகும். அதாவது, பழைய கட்டமைப்புகளில் விரிசல்கள் ஏற்படுவதை முன்னரே கண்டுபிடிக்கும் முறையையும், புதியதாக அமைக்கப்படும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்படாமல் தடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும் இங்கே பார்க்க இருக்கிறோம்.

1.‘மோடல் சிக்னேச்சர்’

பழைய கட்டிடங்களின் வலிமை பற்றியும், விரிசல்கள் வருவதற்கான சாத்தியங்கள் பற்றியும் அறிந்து கொள்ள ‘மோடல் சிக்நேச்சர் டேட்டாபேஸ்’ என்ற முறையானது உதவி செய்கிறது. இன்றைய தேதியில் பல்வேறு மேலை நாடுகளில் பழைய பாலங்கள் உள்ளிட்ட கட்டிடங்களின் வலிமையை அறிய இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

எளிய தொழில்நுட்பம்

மிக எளிமையாகவும், குறைவான செலவும் கொண்டது இந்த தொழில்நுட்பம். சோதனை செய்யப்பட வேண்டிய கட்டிடத்தின் சில பகுதிகளில் ‘அக்ஸலெரோ மீட்டர்’ பொருத்தி வைத்து, கட்டிடத்தின் வேவ்வேறு இடங்களில் 3 மாதத்திற்கு ஒரு முறை ‘ஸ்மார்ட்’ சுத்தியல் கொண்டு கொண்டு தட்ட வேண்டும். அவ்வாறு கட்டமைப்பு தட்டப்படும்போது, அதன் உட்புறத்தில் எழக்கூடிய அதிர்வுகள், ‘மோடல் சிக்நேச்சர்களாக’ பதிவு செய்து கொள்ளவேண்டும். அதன் சகல தகவல்களையும் ஒரு டேட்டாபேஸ் வடிவத்தில் அமைத்து, ‘மோடல் ஸிக்நேச்சர்’ மாறுபாடுகளை கணக்கிட்டு வந்தால், கட்டிடத்தின் எப்பகுதியில் வலிமை குறைவாக உள்ளது என்பதையும், விரிசல்கள் வரக்கூடிய இடங்களையும் கச்சிதமாக காட்டிவிடும்.

2.‘பெனிட்ரான் அட்மிக்ஸர்’

கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்படாமல் தடுக்க கட்டுமான பணிகளின்போதே மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பமாக இது இருக்கிறது. கான்கிரீட் பணிகளின்போதே ‘பெனிட்ரான் அட்மிக்ஸர்’ என்ற பொருளை கலந்து கட்டுமான வேலைகளை செய்து முடிக்கலாம். மேலைநாடுகளில், பலவிதங்களிலும் இதன் செயல்திறனை சோதனை செய்து பார்த்து அங்கீகரித்துள்ளார்கள்.

தண்ணீர் புகாது

இந்த அட்மிக்ஸரானது கான்கிரீட்டுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கும் தன்மை கொண்டது. அதனால், ஈரப்பதம் காரணமாக ஏற்படும் பல குறைபாடுகள் ஏற்படுவதில்லை. விரிசல்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் ‘அட்மிக்ஸர்’ கலவையின் படிகங்கள் தாமாக வளர்ந்து பெருகி, விரிசல்களை அடைத்து கொள்கின்றன. கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் கான்கிரீட் தயாரிக்கப்படும்போது சிமெண்டு உள்ளிட்ட இதர பொருட்களுடன் சேர்த்து பொருட்களின் மொத்த எடையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ‘பெனிட்ரான் அட்மிக்ஸரை’ கலந்து பயன்படுத்தலாம். மேலும், பழைய கான்கிரீட்டில் ஏற்பட்ட விரிசல்களையும் ‘பெனிட்ரான் அட்மிக்ஸரை’ பயன்படுத்தி சரி செய்ய இயலும். மேலும், கடற்கரை பகுதிகளில் உள்ள கட்டுமானங்களில் ஏற்படும் விரிசல்களை சரி செய்வதற்கும் இந்த முறை பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story