கட்டுமான துறைக்கு நம்பிக்கை தரும் புதிய அணுகுமுறை


கட்டுமான துறைக்கு நம்பிக்கை தரும் புதிய அணுகுமுறை
x
தினத்தந்தி 22 April 2017 12:17 PM IST (Updated: 22 April 2017 12:16 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமானத்துறைக்கு, புதிய நம்பிக்கையாக சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மது நாட்டின் மொத்த உற்பத்தியில், ரியல் எஸ்டேட் துறை முக்கியமான இடத்தில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கடந்த பல மாதங்களாக பல்வேறு ஏற்றங்களையும், மாற்றங்களையும் சந்தித்து வரும் கட்டுமானத்துறைக்கு, புதிய நம்பிக்கையாக சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவால்கள்

சமீப காலங்களில், சென்னையை பொறுத்தவரை பெருமழை, புயல், கட்டுமான பொருட்களின் விலையேற்றம், உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, முறையான அங்கீகாரம் பெறாத வீட்டுமனை விற்பனை தடை மற்றும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மாற்றம் என்ற பல்வேறு காரணங்கள் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரும் சவால்களாக இருந்தன. அந்த காரணங்களால் கட்டுமானத்துறையின் வர்த்தக நிலவரமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்து விட்டது. நடுத்தர மக்களால், நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற திட்டங்கள் ஒத்தி வைக்கப்படும் சூழல் நிலவி வந்தது.

புதிய நம்பிக்கை


முன்னரே கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் விற்பனை மட்டும் சிறிய அளவில் ஆங்காங்கே இருந்து வந்த நிலையில், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் குறைந்த வட்டியில் சுலபமான வீட்டு கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. கூடுதலாக, ஜி.எஸ்.டி வரி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளதோடு, குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெற்ற நிலையில், விரைவில் அமலாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த திட்டம் ரியல் எஸ்டேட் துறைக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீண்ட கால நன்மை

கட்டி முடித்து பணி நிறைவு சான்றிதழ் பெற்ற கட்டுமான திட்டங்களை விடவும், இனிமேல் மேற்கொள்ளப்பட இருக்கும் கட்டுமான பணிகள்தான் ஜி.எஸ்.டி வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். மேலும், சிமெண்டு, மணல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பொருட்களின் விலை, இந்த வரி விதிப்பு மூலமாக கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வேறு சில பொருட்களின் விலை உயர வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டாலும், நீண்ட கால நன்மை என்ற அடிப்படையில் கட்டுமான தொழில் வல்லுனர்கள் இதை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே வரி விதிப்பு

மேலும், இந்திய அளவில் ஒரே வரி விதிப்பு என்ற முறையின் காரணமாக வாட் வரி, விற்பனை வரி, மத்திய விற்பனை வரி, நுழைவு வரி, உற்பத்தி வரி ஆகியவை ரத்து செய்யப்படுவது ரியல் எஸ்டேட் துறைக்கு பலனளிக்கக்கூடிய அம்சமாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது. ஏற்கெனவே, இயற்கையாக கிடைக்கும் மணல் தட்டுப்பாடாக இருக்கும் நிலையில், உற்பத்தி செய்யப்படும் சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலையானது இந்த வரி விதிப்பின் மூலம் குறைவது கட்டுமான துறைக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது.

சீரான வளர்ச்சி சாத்தியம்

மேலும், தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்டுமானத் துறைக்கு வெவ்வேறு விதமான வரி விதிப்புகள் இருக்கின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே சமச்சீரான வரி விதிப்பு என்ற முறை காரணமாக ரியல் எஸ்டேட் துறையில், சீரான வளர்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதை பல்வேறு கட்டுமானத்துறை சார்பான சங்கங்களும் குறிப்பிட்டுள்ளன. 

Next Story