மனம் கவரும் வீடுகளுக்கு கண் கவரும் அலங்காரம்


மனம் கவரும்  வீடுகளுக்கு கண்  கவரும்  அலங்காரம்
x
தினத்தந்தி 28 April 2017 9:15 PM GMT (Updated: 28 April 2017 1:54 PM GMT)

சிறிய அளவு ‘பட்ஜெட்’ கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே அனைவரும் விரும்புவார்கள்

சிறிய அளவு ‘பட்ஜெட்’ கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே அனைவரும் விரும்புவார்கள். பொதுவாக, எல்லா அறைகளுக்கும் உள் அலங்காரம் தேவை என்ற நிலையில், ஒரு சில அறைகளை நமக்கு பிடித்தமான வகையில் அழகுபடுத்த முடியும்.

ஒரே தோற்றம்

சமையல் அறை, ‘வார்ட்ரோப்ஸ்’ என்ற அலமாரிகள், பூஜை அறை, டி.வியை வைப்பதற்கான ‘கேபினட்டுகள்’, குட்டி பசங்களின் ஸ்கூல் புராஜக்ட் மற்றும் பரிசு கோப்பைகள் வைக்கும் கண்ணாடி பொருத்திய அலமாரிகள், பல்வேறு ‘லேமினே‌ஷன்கள்’ ஆகியவற்றை ஒரே மாதிரியாக அமைத்தால், வித்தியாசமான அழகாக இருக்கும். சமையல் அறையில் ‘வாட்டர் புரூப்’ கொண்ட பொருட்களையும் பயன்படுத்தலாம்.

அலமாரிகள் அவசியம்

சுவர் அலமாரிகள் ‘ஸ்லைடிங்’ கதவுகள் கொண்டதாக இருப்பது வழக்கம். வீட்டில் குறைவான உபயோகம் கொண்ட பொருட்களை சுவர் அலமாரிகள் அல்லது மர கதவு பொருத்தப்பட்ட ‘லாப்ட்’ அமைப்புகளில் வைத்து பராமரிப்பது வழக்கம். பொதுவாக கான்கிரீட் பரண்கள் அதிகமாக அமைப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. ‘வார்ட்ரோப்’ அமைக்கும்போது மேற்கூரையை தொடும் வகையில் உயரமாக அமைத்துவிட்டால், சூட்கேஸ்கள் உள்ளிட்ட ‘டிராவல் பேக்’ போன்றவற்றை அவற்றில் வைப்பது சுலபமாக இருக்கும்.

சுவர் அலமாரிகள்

‘வால்க் இன் க்ளோசட்’ என்ற அலமாரிகளை உள்ளே அமைத்து ஒற்றை கதவு பொருத்தப்படும் முறையானது இப்போது மெதுவாக பல இடங்களில் பரவி வருகிறது. இந்த முறையில் அதிக செலவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒற்றைக் கதவு என்பதால் பொருட்கள் வைக்க நிறைய இடம் கிடைக்கும். நமது செலவுகளை பொறுத்து இரண்டு அறைகளுக்கு இடைவெளிகளில் இதை அமைத்துக்கொள்ளலாம். வீட்டு கட்டுமான பணிகளின்போதே இந்த முறைக்கான இடத்தை கச்சிதமாக தேர்வு செய்து கொள்வது சிறப்பு.

‘ஸ்கர்டிங்’ பலகைகள்

நவீன சமையலறை அமைப்பில் கவனிக்க வேண்டிய வி‌ஷயம், கேபினட்டுகளை தாங்கக்கூடிய ‘புஷ்’ அமைப்பை மறைக்கும் ‘ஸ்கர்டிங்’ என்ற சிறிய பலகைகள் ஆகும். மேலும், அங்கே குப்பைகள் சேராமல் தடுக்கவும் இந்த அமைப்பு பயன்படும். அந்த ‘ஸ்கர்டிங்’ அமைப்பை மரத்தால் செய்யப்பட்டதாக இல்லாமல் ‘பி.வி.சி’ தயாரிப்புகளான ‘பிளாஸ்டிக்’ பொருள்கள் மூலம் அமைத்து, தண்ணீர் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.  

அழகிய படுக்கையறை

பொதுவாக, படுக்கையறை கதவு திறந்தவுடன் கண்ணில் படுக்கை படாதவாறு அமைக்கவேண்டும். படுக்கையறைக்கு போதுமான வெளிச்சம் இருக்குமாறு ஜன்னல்களை கச்சிதமாக அமைக்கவேண்டும். அறை நடுவில் கட்டில் போடும்போது ‘சைடு டேபிள்’ இருப்பின் அவற்றின் மீது புத்தகங்களை வைத்து உபயோகப்படுத்தலாம். சிறிய அறையாக இருந்தாலும் முக்கியமாக கருதப்படுவது படுக்கை அறையாகும்.

படிக்கும் இடம்

அலுவலக பணிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடம் போன்றவற்றை செய்வதற்காக பல வீடுகளில் ‘லேப்டாப்’ பயன்படுத்தப்படுவது வழக்கம். அதை பயன்படுத்தும்போதும், ‘சார்ஜ்’ செய்யும்போதும் தனியாக வைத்து பராமரிப்பதற்காக தனியிடம் தேவைப்படும். முக்கியமாக பசங்கள் படிக்கும் போது அமைதியாக இருப்பது அவசியம். அந்த அறைகளில் ‘டிரெஸ்ஸிங் டேபிள்’ வைக்கப்படும் சூழலில் அலமாரிகளில் கண்ணாடியை பதித்துக் கொள்ளலாம்.

Next Story