உலகின் மிகப்பெரிய இரும்பு கட்டமைப்பு


உலகின் மிகப்பெரிய இரும்பு கட்டமைப்பு
x
தினத்தந்தி 29 April 2017 3:00 AM IST (Updated: 28 April 2017 8:00 PM IST)
t-max-icont-min-icon

பறவையின் கூடு என்ற செல்லப்பெயர் கொண்ட சீனாவின் பீஜிங் நே‌ஷனல் ஸ்டேடியம் என்ற கட்டமைப்பு இரும்பால் வடிவமைக்கப்பட்ட உலகின் பெரிய கட்டிடமாகும்.

றவையின் கூடு என்ற செல்லப்பெயர் கொண்ட சீனாவின் பீஜிங் நே‌ஷனல் ஸ்டேடியம் என்ற கட்டமைப்பு இரும்பால் வடிவமைக்கப்பட்ட உலகின் பெரிய கட்டிடமாகும். 2008–ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த ஸ்டேடியம் கிட்டத்தட்ட 80,000 பேர் அமரக்கூடிய வகையில் அமைந்ததாகும்.

ஒலிம்பிக் போட்டிகள்

பிரபலமான இரண்டு சுவிட்சர்லாந்து நாட்டு கட்டிட வடிவமைப்பாளர்களால் 2008 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்காக டிசைன் செய்து கட்டப்பட்டது. சீனாவின் பாரம்பரிய அமைப்பின்படி அமைக்கப்பட்ட இந்த ஸ்டேடியம் ஏறக்குறைய 41 கிலோமீட்டர் நீளமும், 42,000 டன் எடையும் கொண்ட கனமான இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அதன் உட்புறத்தில் 50 அடி உயரமுள்ள இரண்டு சிவப்பு நிற கான்கிரீட் கிண்ண வடிவத்தினாலான பிரேம்களை அடித்தளமாக கொண்டு, இரும்பு வடிவ மேற்பாகம் பொருத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் சிக்கனம்

மேற்கூரையானது தானியங்கி முறையில் திறந்து மூடும் அமைப்பில் இருப்பதுபோலத்தான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமான செலவு சிக்கனம் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது. அதன் காரணமாக 3500 கோடி என்ற பட்ஜெட் தொகையானது பாதியாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீன் பில்டிங்

இவ்வளவு பெரிய அமைப்பு கிரீன் பில்டிங் முறைப்படி, சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு அமைக்கப்பட்டுள்ள விதம் கவனிக்கத்தக்கதாகும். அதாவது குளிர் காலங்களில் வெதுவெதுப்பான உட்புற சூழ்நிலை இருக்கும்படி தரைத்தளத்தின் அடிப்பகுதியில் தானியங்கி ஜியோ தெர்மல் முறையில் செயல்படும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இயற்கை வழிகள்

ஸ்டேடியத்தின் கீழ்த்தளத்தில் மழை நீர் தக்க முறையில் சேமிக்கப்பட்டு கழிவறை உள்ளிட்ட பராமரிப்பு வி‌ஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. மின் விளக்குகளின் மின்சார செலவுக்கும் இயற்கை வழி காணப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தின் வடிவமைப்பு வல்லுனர்கள் சீனாவின் செராமிக் பயன்பாடுகளை அடிப்படையாக கொண்டு முட்டை வடிவத்தில் அமைக்க முடிவு செய்தனர். அது வெளிப்புற பார்வைக்கு பறவையின் கூடு போல தெரிவதால் பறவைக்கூடு என்ற பெயர் நிலைத்துவிட்டது.  

சாதனை

வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவம் என்ற அமைப்புகள் வலுவானவை என்ற அடிப்படையில் வட்டத்தின் மேலாக பொருந்துமாறு இரும்பால் மொத்த கட்டமைப்பும் நிமிர்த்தி அமைக்கப்பட்டது. 1000 டன் எடை கொண்ட 24 இரும்பினாலான டிரெஸ் அமைப்பு ஒட்டு மொத்த இரும்பு கட்டுமானத்தையும் தாங்கி நிற்கிறது. இந்த ஸ்டேடியத்தின் தரையில் உள்ள புல்வெளி கிட்டத்தட்ட 7800 சதுர மீட்டர் பரப்பளவு உடையது. அதை 24 மணி நேரத்தில் அமைத்து சாதனை செய்திருக்கின்றனர். 

Next Story