கைகளை கழுவ உதவும் விதவிதமான வாஷ்பேசின்கள்


கைகளை கழுவ உதவும் விதவிதமான வாஷ்பேசின்கள்
x
தினத்தந்தி 28 April 2017 9:30 PM GMT (Updated: 28 April 2017 2:33 PM GMT)

நாகரிக வளர்ச்சிகள் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன. கட்டுமான தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால் அதன் வளர்ச்சியானது விண்ணையும் தொடும் கட்டிடங்களாக மாறியிருக்கின்றன.

நாகரிக வளர்ச்சிகள் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன. கட்டுமான தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால் அதன் வளர்ச்சியானது விண்ணையும் தொடும் கட்டிடங்களாக மாறியிருக்கின்றன. தினசரி வாழ்வை எளிமையாக ஆக்கக்கூடிய பல வசதி வாய்ப்புகள் கட்டுமானத்துறையில் நிறைய இருக்கின்றன. சமையலறை, உணவு அறை, படுக்கையறை மற்றும் பூஜையறை ஆகியவை இப்போது நவீன வசதிகள் கொண்டதாக மாறியிருக்கின்றன. அத்தகைய வசதிகளில் உணவு உண்ணும் அறை உட்பட பல்வேறு அறைகளில் அமைக்கப்படும் ‘வாஷ்பேசின்’ பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

பல வகைகள்

‘ரெக்டாங்குலர்’, ரெக்டாங்குலர் ஓவல்’, ‘ரெக்டாங்குலர் ஸ்கொயர்’, ‘ரவுண்டு’ மற்றும் ‘ஸ்கொயர்’ ஆகிய பல வடிவங்களில் கைகழுவ உதவும் வாஷ் பேசின்கள் கிடைக்கின்றன. சுவர்களின் கார்னர் பகுதிகளில் மட்டும் பொருத்தப்படுவது போல் அல்லாமல், சுவரிலேயே பொருத்திக்கொள்ளும் வகையிலும் அவை கிடைக்கின்றன.

‘வால் மவுண்டடு பேசின்’

‘வால் ஹங்க் பேசின்’ என்றும் சொல்லப்படும் இவ்வகைகள் தக்க ‘பிராக்கெட்டுகள்’ கொண்டு சுவரில் பொருத்தப்படும் விதமாக தயாரிக்கப்பட்டவை. கைகளை கழுவ தக்க உயரத்தில் அமைக்கப்படும் இவற்றின் குழாய் அமைப்புகளை மறைப்பதுபோல ‘புல் பெடஸ்டல்’, ‘ஸ்டுடியோ பெடஸ்டல்’ மற்றும் ‘செமி பெடஸ்டல்’ வகைகளும் சந்தையில் கிடைக்கிறது.

‘புல் பெடஸ்டல் பேசின்’

சுவரின் எந்த பகுதியிலும் பொருத்தப்படும் அமைப்பாக உள்ள இவ்வகை பேசின்களில் இரண்டு வகைகள் இருக்கின்றன. தரையை தொடுவது போன்ற அமைப்பானது புல் பெடஸ்டல் என்றும் வாஷ் பேசினுக்கு கீழ்ப்புறம் பாதியளவு உயரத்தில் சுவருக்குள் பதிந்துகொள்வதுபோன்ற அமைப்பானது ‘செமி பெடஸ்டல்’ என்று சொல்லப்படும். இவை பொதுவாக 16 அங்குல முதல் 30 அங்குலம் வரையிலான உயரம் கொண்டவையாக இருக்கும்.

‘அண்டர் கவுன்டர்டாப் பேசின்’

கிரானைட், மார்பிள் அல்லது பிற வகையிலான பிளாட்பார்ம் அமைப்பில் பேசின் குறுக்களவுக்கு தக்கவாறு வட்டம் அல்லது சதுர வடிவ அமைப்பில் துளையிட்டு அதில் கச்சிதமான ரப்பர் ‘புஷ்கள்’ மூலம் பொருத்தப்படும் அமைப்பு இதுவாகும். அதாவது ஒரு டேபிள் அல்லது பிளார்பார்ம் மேற்புறம் குழிந்த வடிவத்தில் இருப்பதால் தூரத்தில் இருந்து பார்க்கும்போது வாஷ்பேசின் தெரியாது. டாப் பட்ஜெட் கொண்ட வீடுகளின் பாத்ரூம்களில் இவ்வகை ‘அண்டர் கவுன்டர்டாப் பேசின்கள்’ அமைப்பது வழக்கம்.

டேபிள்டாப் பேசின்கள்

இவ்வகை ‘வாஷ்பேசின்கள்’ பிளாட்பார்ம் அமைப்புக்கு மேற்புறம் வெளியில் தெரிவதுபோல அமைக்கப்படுகின்றன. அதாவது தேவைப்படும் சமயங்களில் அறைகளின் வெவ்வேறு இடங்களில் பொருத்திக்கொள்ளலாம். பாத்ரூம்களிலும் இவற்றை அமைக்க இயலும். அதன் காரணமாக வித்தியாசமான அழகை கொண்டதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகை அமைப்புகளில் ‘கவுன்டர் டாப் பேஸின்’ வகைகளும் உள்ளன. அவை பாதி உட்புறமாகவும், பாதி வெளிப்புறமாகவும் காட்சி தரும். அந்த அமைப்புக்கான ‘பைப் பிட்டிங்குகள்’ வெளியில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story