வெளிநாடு வாழ் இந்தியர்களும் வீட்டுக்கடன் பெறலாம்..


வெளிநாடு வாழ் இந்தியர்களும்  வீட்டுக்கடன் பெறலாம்..
x
தினத்தந்தி 29 April 2017 3:45 AM IST (Updated: 28 April 2017 8:11 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய நகர்ப்புற சூழலில், பல குடும்பங்களில் வெளிநாட்டு வேலை பார்க்கும் குடும்ப அங்கத்தினர்கள் இருப்பார்கள்.

ன்றைய நகர்ப்புற சூழலில், பல குடும்பங்களில் வெளிநாட்டு வேலை பார்க்கும் குடும்ப அங்கத்தினர்கள் இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவர்கள் தங்கள் தாய்நாட்டில் சொந்த வீடு அல்லது வீட்டு மனை வாங்க ஆர்வம் கொள்வது வழக்கம். பொதுவாக, வெளிநாடு வாழ் இந்தியர் என்பவர், 1973–ம் ஆண்டு அந்நிய செலாவணி கட்டுப்பாடு சட்டப்படி, வேலை, வணிகம் அல்லது பிற காரணங்களுக்காக நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கியிருப்பவர் ஆவார். என்.ஆர்.ஐ என்று பொதுவாக அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இந்தியாவில் வீடு, அடுக்குமாடி மற்றும் வீட்டு மனை ஆகியவற்றை, வங்கி கடன் பெற்று வாங்க அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர் வங்கி கடன் பெற என்ன வகையான நடைமுறைகள் இருக்கின்றன என்பது பற்றி பொதுவான குறிப்புகளை இங்கே காணலாம்.

என்னென்ன கடன்கள் கிடைக்கும்..?


வீட்டு மனைகள் வாங்கவும், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கவும், வீடு கட்டவும், கட்டப்பட்ட வீட்டை அழகுபடுத்தவும், விரிவாக்கம் செய்யவும், கூடுதல் தளம் கட்டவும் பல்வேறு வகைகளில் வங்கிகள் கடன் தருகின்றன. என்.ஆர்.ஐ–ன் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஆகியோர் இங்குள்ள வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பம் செய்யலாம்.

‘பவர் ஆப் அட்டர்னி’

வெளிநாட்டில் வசிப்பவர்கள் எல்லா வேலைகளையும் அவர்களே செய்வது எப்போதும் சாத்தியமில்லை என்ற நிலையில், பொது அதிகார ஆவணம் என்று சொல்லப்படும் ‘பவர் ஆப் அட்டர்னி’ தயார் செய்து வங்கிகளில் அளிக்கவேண்டும். தமது நெருங்கிய உறவினர் அல்லது நம்பிக்கைக்கு உரியவர் ஒருவர் பெயரில் அதிகார பத்திரம் வழங்கப்படுவது வழக்கம். இதற்கான படிவத்தை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் நிரப்பி, அவர் பணிபுரியும் நாட்டிலுள்ள தூதரகம் அல்லது துணை தூதரக அதிகாரியின் கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரையை பெற்று இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். ‘பவர்’ பெறும் நபர், கடன் வாங்குபவர் சார்பில் அனைத்து வி‌ஷயங்களையும் மேற்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்

வங்கிகள் கடன் தரும்போது கீழ்கண்ட சான்றுகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்கின்றன. வங்கிகளுக்கு தக்கபடி
இவற்றில் சில மாற்றங்கள் இருக்கலாம். அவை:

1. குறிப்பிட்ட நாட்டில் பணி புரிவதற்கான ஒப்பந்தம்

2. சம்பளம் பெற்ற ரசீது

3. குறிப்பிட்ட வெளிநாட்டில் பணிபுரிவதற்கான அனுமதி

4. பணி புரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை நகல்

5. விசா முத்திரை பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்

6. வாங்க விரும்பும் அல்லது கட்ட இருக்கும் வீட்டின் ‘பிளான் அப்ரூவல்’

7. மனையின் கிரய பத்திரத்தின் அசல் மற்றும் நகல்கள்

8. மனைக்கான தாய் பத்திரத்தின் நகல்

9. வில்லங்க சான்றிதழ் குறைந்த பட்சம் 13 ஆண்டுகளுக்கு தேவை

10. கட்டுமான பொறியாளரால் தரப்பட்ட   செலவு மதிப்பீட்டு அறிக்கை

11. வீட்டிற்கான ஒட்டு மொத்த மதிப்பீட்டு அறிக்கை

கடன் தொகை அளவு

வழக்கமாக, வீட்டு மனை என்றால் அதன் மதிப்பில் சுமார் 60 அல்லது 70 சதவிகிதமும், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு என்றால், அதன் மதிப்பில் 80 சதவிகித தொகையும் கடனாக கிடைக்கும். மீதி உள்ள தொகையை, கடன் பெறுபவர் ‘மார்ஜின்’ தொகையாக போட்டு குறிப்பிட்ட மனை அல்லது வீட்டை வாங்க வேண்டும்.

திருப்பி செலுத்துதல்

கடன் பெற்ற வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் நேரில் பணமாக அல்லது காசோலை மூலம் செலுத்தலாம். மேலும், என்.ஆர். இ, எப்.சி.என்.ஆர் மற்றும் என்.ஆர்.ஓ ஆகிய கணக்குகள் மூலமாகவும் கடனை திருப்பி செலுத்தலாம். என்.ஆர்.ஐ–க்கு பதிலாக இந்தியாவிலுள்ள அவரது, நெருங்கிய உறவினர்களை மட்டுமே கடனை திருப்பி செலுத்த சில நிதி நிறுவனங்கள் அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story