கட்டிடத்தை பாதுகாக்கும் அடிப்படை அமைப்பு


கட்டிடத்தை  பாதுகாக்கும்  அடிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 6 May 2017 2:30 AM IST (Updated: 5 May 2017 4:18 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக நமது பகுதிகளில் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு ‘ஷாலோ’ எனப்படும் வழக்கமான அஸ்திவாரம், அதாவது நில மட்டத்திலிருந்து கீழ்ப்புறமாக நீளம், அகலம், ஆழம் என மூன்று அளவுகளில் அமைக்கப்படுகிறது.

பொதுவாக நமது பகுதிகளில் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு ‘ஷாலோ’ எனப்படும் வழக்கமான அஸ்திவாரம், அதாவது நில மட்டத்திலிருந்து கீழ்ப்புறமாக நீளம், அகலம், ஆழம் என மூன்று அளவுகளில் அமைக்கப்படுகிறது. அஸ்திவாரங்கள் என்பவை எல்லா வகையான கட்டமைப்புகளுக்கும் ஒரே விதத்தில் அமைவதில்லை. குறிப்பிட்ட இடத்தில் பரவியுள்ள மண்ணின் தன்மை, மனையின் நிலத்தடி நீர்மட்டம், கட்டிடத்தின் வகை, கட்டமைப்பின் ஒட்டு மொத்த சுமை ஆகியவற்றை பொறுத்து அஸ்திவாரத்தின் அளவு மற்றும் அமைப்பு ஆகியவை மாறுபடும்.

ஆரம்ப சோதனை

கட்டமைப்பு அமையும் மனையில் பல இடங்களிலிருந்து மண்ணை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். காரணம், மனைக்கு மேல் மட்டத்தில் ஒருவகை மண்ணும், கீழ்ப்பகுதியில் வேறு வகை மண்ணும் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்த நிலையில் மண் பரிசோதனை என்பது அஸ்திவாரத்திற்கான முதற்கட்ட சோதனையாக அமைகிறது. அந்த வி‌ஷயத்தில் பொறியாளர்களது ஆலோசனை அவசியம். ஒவ்வொரு மண்ணின் தன்மையும் ஒவ்வொரு விதமாக கட்டிடத்தை தாங்கும் தன்மை கொண்டது. எனவே மண்ணின் தாங்கு திறனை சார்ந்துதான் கட்டிடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இயற்கை சீற்றம்

மழை, வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் ஆகிய இயற்கை பாதிப்புகளை தாங்கக்கூடிய வகையில் அஸ்திவாரத்தின் வடிவமும், அமைப்பும் இருப்பது அவசியம். அதற்கு மண்ணின் தன்மையை தகுந்த முறையில் ஆராய வேண்டும். கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள மண்ணின் தன்மை எந்த வகை..? அது அஸ்திவாரத்துக்கு உறுதுணையாக இருக்குமா..? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். அதற்கு ஏற்ற வகையில் வலுவான தாங்கும் தூண்களையும், அஸ்திவாரத்தையும் அமைப்பதுதான் பாதுகாப்பு.

நீர் நிலைகள் கவனம்

பொதுவாக, நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும் கட்டிடங்கள் நீரால் பாதிக்கப்படுகின்றன. சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களில் மண்ணின் தன்மையானது களிமண் தன்மை கொண்டதாக இருக்கும். அதனால், நீர் நிலைகளுக்கு அருகில் கட்டமைப்பு அமையும் நிலையில் மண்ணின் தாங்கு திறனை மதிப்பிட வேண்டும். அந்த பகுதிகளில் ஆழமான அஸ்திவாரம் என்பது அவசியமானது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் வீடு கட்டுபவர்கள் கட்டாயம் மண் பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தனி வீட்டை விடவும், அடுக்குமாடி குடியிருப்பில் அதிக வீடுகள் அமையும் என்பதால் மண்ணின் தாங்கும் திறன் பற்றிய தெளிவு வேண்டும்.

நிலங்களின் வகைகள்

கட்டுமான அமையும் இடமானது முன்னர் ஏதாவது ஒரு வகையில் விளை நிலமாக இருந்துள்ளது என்ற நிலையில், அங்கே கட்டிடம் கட்டும் அளவுக்கு மண்ணின் தன்மை உள்ளதா..? என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து பார்க்க வேண்டும். அத்தகைய நிலங்களில் உள்ள மண்ணானது ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையை கொண்டதாக இருக்கும் என்பதால், மழை அல்லது வெள்ள பாதிப்புகள் ஏற்படும் காலத்தில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்புகள் உண்டாகலாம். அதனால், அத்தகைய மண்ணில் தாங்கு திறனைவிடவும், வலுவான அஸ்திவார அமைப்புகள்தான் முக்கியமானது. ஏற்கெனவே வீடு கட்டப்படிருந்தால், அஸ்திவாரத்தை வலுப்படுத்துவது முக்கியம்.

Next Story