மாற்று மணல் பயன்பாடு.. சுற்றுசூழல் பாதுகாப்பு..


மாற்று மணல் பயன்பாடு..  சுற்றுசூழல் பாதுகாப்பு..
x
தினத்தந்தி 5 May 2017 9:00 PM GMT (Updated: 5 May 2017 11:01 AM GMT)

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் மக்கள் தொகைக்கும், குடியிருப்புகள் அமைக்கப்படும் வேகத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கும்

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் மக்கள் தொகைக்கும், குடியிருப்புகள் அமைக்கப்படும் வேகத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கும் சூழலில் சுற்றுப்புறம் பற்றிய கவனத்தை மனதில் கொண்டு செயல்படவேண்டியது அனைவரது பொறுப்பாக உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவின் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை அறிவித்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

எம்.சாண்ட்

சமீபத்திய சிக்கல்களிலிருந்து கட்டுமானத்துறை மெதுவாக மீண்டு வரும் தருணத்தில் புதிய கட்டுமான பணிகளுக்கான மூலப்பொருட்களின் தேவையானது குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகிக்கொண்டிருக்கிறது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டுமான பணிகள் விரைவாக செய்யப்பட்டாலும் சில அடிப்படையான பொருட்கள் பற்றாகுறையாக இருந்து வருகின்றன. குறிப்பாக மணல் உபயோகத்துக்கு மாற்றாக வேறொரு பொருளை கண்டுபிடிப்பது சவாலாக இருந்த சூழலில் ஒரு புதிய அறிமுகமாக எம்–சாண்ட் என்ற மாற்று மணல் அறிமுகப்படுத்தப்பட்டது.

மணல் தேவை


சமீபத்திய தகவல்களின்படி சென்னை நகரில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு மட்டும் ஒரு நாளைய மணல் தேவையானது 2.5 லட்சம் கன அடியாக அறியப்பட்டுள்ளது. அனைவருக்கும் உள்ள தேவைக்கேற்ப மணல் கிடைப்பதில் பலவிதமான சிக்கல்கள் உள்ள சூழ்நிலையில், எம்–சாண்ட் என்பது காலத்திற்கேற்ற மாற்றமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவும் அமையும் என்பது  நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.        

சுற்று சூழல் பாதுகாப்பு

அதாவது, கருங்கற்கள் வெட்டப்படுவதன் மூலம் கிடைக்கும் துகள்களை மாற்று மணலாக பயன்படுத்தினால், இயற்கை சூழலுக்கு பாதுகாப்பாகவும், இப்போது இருக்கும் மணல் தட்டுப்பாட்டுக்கு நல்ல தீர்வாகவும் ஆகிறது. இவ்வகை செயற்கை மணலை பயன்படுத்தினால் கட்டமைப்புகளின் உறுதிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து பலருக்கும் இருக்கிறது. ஆனால், அந்த மணலை பயன்படுத்தி அமைக்கப்பட்ட கட்டிடங்கள் உறுதியாக இருக்கும் என்பது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக, மாற்று மணல் எனப்படும் செயற்கை மணலின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வருகிறது.

அரசின் கட்டுமானங்கள்

குறிப்பாக அரசின் பல்வேறு கட்டுமான பணிகள் மற்றும் விரிவாக்க பணிகளில் இந்த வகை மணலை பயன்படுத்தி அதன் செயல்திறன் நேரடியாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய அறிவியல் கழகம் இதை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்திருக்கிறது. மேலும், இதில் உள்ள நன்மை என்னவென்றால் இதில் உருவாகும் கழிவுகள் ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருக்கிறது. எம்–சாண்ட் மணல் துகள்கள் அனைத்தும் சரியான அளவுகளில் ஒரே சீராக இருக்கும் தன்மை பெற்றவை. அதன் காரணமாக, வலிமையான கான்கிரீட் அமைப்பில் இந்த மண் பெரிதும் பயன்படுகின்றது. பல்வேறு அரசு சார்ந்த கட்டுமான பணிகளில் பயன்படுவதோடு, பல தனியார் கட்டுமான நிறுவனங்களும் மாற்று மணலின் தன்மைகளை அறிந்து பயன்படுத்த தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story