கட்டுமானத்துறையை வலுப்படுத்தும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம்


கட்டுமானத்துறையை வலுப்படுத்தும்  ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம்
x
தினத்தந்தி 12 May 2017 11:45 PM GMT (Updated: 12 May 2017 10:44 AM GMT)

நாடு முழுதும் வீடு வாங்குபவர்களின் நலனை காக்கவும், கட்டுமானத்துறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும்

 கொண்டு வரப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம் இந்த மாத தொடக்கத்தில் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் அனைவருக்கும் 2022-ம் ஆண்டுக்குள் வீடு என்ற திட்டம் தற்போது செயல்பட்டு வரும் நிலையில், கட்டுமானத்துறையில் நுகர்வோர் நலன்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்தில் ரியல் எஸ்டேட் (ரெகுலேஷன் அண்ட் டெவலப்மெண்ட்) மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிற மாநிலங்கள்

அரியானா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், மேற்கண்ட சட்ட விதிகள், மாநில அளவில் நடைமுறையில் உள்ளன. இம்மாத தொடக்கத்தில் நமது மாநிலத்திலும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இச்சட்டத்தின் கீழ், உரிய வழிமுறைகளை 13 மாநிலங்கள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும் ஏற்கனவே அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளன. இச்சட்டத்தின் கீழ், 92 மொத்த அம்சங்களில், 59 அம்சங்கள் மட்டுமே செயல் வடிவம் பெற்றிருந்த நிலையில், மீதமுள்ள அம்சங்கள் இந்த மாதம் முதல் அமலுக்கு வருகின்றன. அதுதவிர, அந்தந்த மாநில அரசுகள் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விதிகளை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. தமிழக அரசு, விதிகளை சென்ற ஜனவரி மாதம் இறுதி செய்து அறிவித்தது.

நிவாரணம்

ரியல் எஸ்டேட் ஒழுங்காற்றல் மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ், வீடு வாங்குபவர் அல்லது விற்பவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு இத்துறை ஒழுங்காற்று அமைப்புகளை அணுகி தக்க வழிகாட்டுதல் மற்றும் நிவாரணங்கள் பெறலாம். ஒழுங்காற்று அமைப்புக்கள் இரண்டு மாதங்களுக்குள் சிக்கலுக்கான தீர்வு அல்லது நிவாரணம் தரும்.

நிபுணர்கள் கருத்து

'ரெரா சட்டம்' எனப்படும் இந்த சட்டம் அமலுக்கு வருகின்ற சூழலில், ரியல் எஸ்டேட் தொழிலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். குறிப்பாக, கட்டுமான தொழிலில் வெளிப்படையான தன்மைகள் உருவாகும் வாய்ப்புகள் அமையும். அதனால் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கட்டுமான நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதால், அரசுத்துறை அனுமதிகளும் உடனுக்குடன் கிடைத்து பணிகள் விரைவாக முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மேலும் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் முறையான அனுமதி, உரிமம் போன்ற அனைத்து ஆவணங்களையும் பெறுவது அவசியம். இதற்காக பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டியதன் காரணமாக, வீடுகளின் விலை சிறிது அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதே சமயத்தில் நம்பகத்தன்மை, வெளிப்படை தன்மை போன்ற பல நன்மைகளை தருவதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

• வீடு வாங்கும் நுகர்வோருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கும் இம்மசோதாவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கட்டுமானத் திட்டங்கள் அனைத்தும் அந்தந்த மாநில ரியல் எஸ்டேட் ஆணையங்களிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என இம்மசோதா கூறுகிறது.

• கட்டுமான திட்டம் குறித்த அனைத்து தகவல்களும் இந்த ஆணையத்திடம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது வீட்டுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கும் பணத்தில் 70 சதவிகிதத்தை தனி கணக்கில் பராமரிக்க வேண்டும் என்றும் மசோதா கூறுகிறது.

• இதன் மூலம் பணம் வேறு திட்டங்களுக்கு செலவழிக்காமல் தடுக்கப்படுவதுடன், கட்டி முடித்த வீடுகளை ஒப்படைப்பதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும். கட்டுமான திட்டங்களுக்கு தேவைப்படும் அனுமதிகளை பெற்ற பின்னர் அவை விற்பனைக்கு கொண்டுவரப்படுவதை இம்மசோதா உறுதி செய்கிறது.

• மேற்கண்ட உறுதி மொழிகளுக்கு ஏற்ப கட்டமைப்பு இல்லாத பட்சத்தில், அதற்கு செலுத்திய தொகையை வட்டியுடன் நுகர்வோருக்கு கட்டுமான நிறுவனம் திரும்பத் தர வேண்டும் என்றும் மசோதா கூறுகிறது. தீர்ப்பாய விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் கட்டுமான நிறுவனம் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படும் என்றும் மசோதா தெரிவிக்கிறது.

• கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு ஒப்படைப்பு செய்யப்பட்ட கட்டமைப்புகளில் ஏதாவது கட்டுமான குறைபாடுகள் இருக்குமானால், வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வருட காலத்துக்குள் அந்த குறைகள் கட்டுனரால் சரி செய்யப்பட வேண்டும்.

• மாநில அளவிலான ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்களை உருவாக்குவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.

 • கட்டமைப்புகளின் காரணமாக எழக்கூடிய அனைத்து விதமான சிக்கல்களையும் கட்டுமான ஒழுங்குமுறை தீர்ப்பாயம் விசாரித்து தக்க வழிகாட்டுதல்களையும், தீர்வையும் வழங்கும். 

Next Story