முப்பரிமாண தொழில் நுட்பத்தில் கண்கவர் கட்டமைப்புகள்


முப்பரிமாண தொழில் நுட்பத்தில்  கண்கவர் கட்டமைப்புகள்
x
தினத்தந்தி 12 May 2017 11:00 PM GMT (Updated: 12 May 2017 10:52 AM GMT)

சாதாரணமாக, ஒரு தனி வீடு கட்டுவதற்கு சுமார் 6 மாத கால அவகாசம் தேவைப்படலாம்.

 ஆனால், முப்பரிமாண தொழில் நுட்பம் மூலம் 10 நாட்களில் வீட்டை கட்டி முடிப்பது சாத்தியம் என்று வெளிநாட்டு கட்டுமான பொறியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதாவது, முப்பரிமாண பிரிண்டிங் தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இந்த முறை சாத்தியம்தான் என்று, பல நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.

முதல் கட்டமைப்பு

சீனாவின் கட்டுமான பொறியாளர்களால், ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் 2014-ம் ஆண்டில் உலக அளவிலான முதல் முப்பரிமாண பிரிண்டிங் தொழில் நுட்பம் மூலமாக வீடு அச்சிடப்பட்டது. அதாவது, அந்த பிரிண்டிங் என்பது தரையில் ஒரு வீடாகவே உருவாக்கப்பட்டது. தகுந்த கருவிகள் மூலம் கான்கிரீட் கலவையானது, கம்ப்யூட்டர் டிசைன் மூலம் கச்சிதமாக வார்க்கப்பட்டு வீடு உருவாக்கப்பட்டது. வீடுகள் உள்ளிட்ட இதர கட்டமைப்புகள் அமைப்பதற்கு மட்டுமல்லாமல் பாலங்கள், கால்வாய்கள் போன்ற பொது பயன்பாடுகளுக்கான கட்டமைப்புகளை உருவாகவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த இயலும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆசிய நாடுகள்

மேற்கண்ட முறையில் ஐக்கிய அரபு நாடுகளில் வீடுகளும், அலுவலகங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வளர்ந்து வரக்கூடிய பெரும்பாலான ஆசிய நாடுகளில் கட்டுமான செலவு அதிகம் என்ற சூழலில், முப்பரிமாண பிரிண்டிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, குறைவான கால அவகாசத்தில், சரியான விதத்தில் மலிவு விலையில் வீடுகள் அமைப்பது சாத்தியம் என்று பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த கட்டுமான பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் கட்டுமானம்

முப்பரிமாண பிரிண்டிங் தொழில் நுட்ப கட்டுமானத்துக்கான, ஆரம்ப கட்ட சோதனையாக, பிலிப்பைன்ஸ் நாட்டு கட்டுமான வல்லுனர்கள், கலிபோர்னியாவில் பல்வேறு அறிவியலாளர்கள் முன்னிலையில் லூயிஸ் கிராண்ட் என்ற ஹோட்டலை உருவாக்கி உள்ளனர். மேலும், 130 சதுர மீட்டர் அளவில் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டையும் வடிவமைத்துள்ளனர்.

மவிவு விலை வீடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் முப்பரிமான பிரிண்டிங் முறையில் 200 வீடுகள் கட்டப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் 2000 வீடுகளை கட்டி, வீட்டு வசதி வாரியம் மூலம் மக்களுக்கு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. முப்பரிமாண கட்டமைப்பு தொழில்நுட்பம் மூலம் ஒட்டுமொத்த கட்டுமான செலவில் சுமார் 60 சதவிகிதம் செலவுகளை குறைக்க முடியும் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பாதிப்புகள் இல்லை

மேலும், இவ்வகை தொழில்நுட்பம் வாயிலாக அமைக்கப்படும் வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்கள், இயற்கை பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய வகையில் இருக்கும் என்று தொழில் நுட்ப பொறியாளர் டைபூன் ஹையன் என்பவர் தெரிவித்திருக்கிறார். எளிமையான கட்டமைப்பாக இருந்தாலும் இவ்வகை வீடுகள் இயற்கை சீற்றங்களால் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் தாக்குப்பிடித்து நிற்பதாகவும் ஆய்வுகளில் காணப்பட்டுள்ளது.

குறைந்த கால அவகாசம்

மேற்கண்ட முறையில் வீடுகள் கட்டுவதற்கு கிட்டத்தட்ட 60 நாட்கள் கால அவகாசம் தேவைப்பட்ட நிலையில், மேலும் பல்வேறு புதிய அணுகுமுறைகள் காரணமாக 20 நாட்களுக்குள் கட்டுமான பணிகளை முடிக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டிடங்களுக்கான மூலப்பொருட்கள் பெரும்பாலும் உள்ளூரில் கிடைப்பதை பயன்படுத்தி தகுந்த முறையில் கான்கிரீட் கலவை தயார் செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்படுகின்றன.

அதன் மூலமாக செலவினங்கள் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவிலான கட்டுமான தொழில்நுட்பத்தில் இந்த முறையானது பெரும் நம்பிக்கையை தருவதாக உள்ளது. காலப்போக்கில் இன்னும் வெவ்வேறு அணுகுமுறைகள் காரணமாக  கட்டுமான பணிகள் இன்னும் வெகு சுலபத்தில் முடிக்கப்படும் என்பது நிபுணர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 

Next Story
  • chat