கட்டுமானத்துறைக்கு கைகொடுக்கும் மறுசுழற்சி பிளாஸ்டிக்


கட்டுமானத்துறைக்கு கைகொடுக்கும் மறுசுழற்சி பிளாஸ்டிக்
x
தினத்தந்தி 20 May 2017 12:07 PM IST (Updated: 20 May 2017 12:07 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை சூழலால் பாதிக்கப்படாமல் நீடித்து உழைப்பதால், கட்டுமானத்துறை வல்லுனர்களது வரவேற்பை யு.பி.வி.சி பெற்றுள்ளது.

ட்டுமான மூலப்பொருட்களில் முக்கியமான இடத்தில் யு.பி.வி.சி எனப்படும் பிளாஸ்டிக் கலப்பு இல்லாத பாலிவினைல் குளோரைடு என்ற பொருள் உள்ளது. விலை, பராமரிப்பு, எடை, உறுதி, மற்றும் மறுசுழற்சி ஆகிய தன்மைகளில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருப்பதால், தவிர்க்க இயலாத கட்டுமான மூலப்பொருளாக இன்றைய தேதியில் மாறியிருக்கிறது. வழக்கம்போல சாதகம் மற்றும் பாதகம் ஆகிய இரு நிலைகளுக்குள் யு.பி.வி.சி பயன்பாடு இருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக வேறு கச்சிதமான பொருள் இல்லை என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பயன்கள்

யு.பி.வி.சி என்பது ஒரு வகை ‘தெர்மோ பிளாஸ்டிக்’ என்ற பெட்ரோலியம் சார்ந்த வேதிப்பொருள் ஆகும். கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவை தயாரிப்பில் மரத்துக்கு மாற்றாக இருப்பதோடு, குடிநீர் உள்ளிட்ட வீட்டின் தண்ணீர் தேவைகளுக்கான குழாய்கள் தயாரிப்பிலும் முக்கியமான இடத்தை பெற்றிருக்கின்றன. எத்திலின் என்ற இயற்கை வாயு மற்றும் உப்பு கலந்த நீரில் உள்ள குளோரின் ஆகியவற்றை பயன்படுத்தி யு.பி.வி.சி தயாரிக்கப்படுகிறது. அப்போது அதில் கலக்கப்படும் கால்சியமானது அதிக வெப்பம் மற்றும் குளிர்ச்சி ஆகியவற்றை தாங்கும் திறனை தரும் ‘ஸ்டெபிலைசராக’ செயல்படுகிறது.

பாதிப்புகள் இல்லை

இயற்கை சூழலால் பாதிக்கப்படாமல் நீடித்து உழைப்பதால், கட்டுமானத்துறை வல்லுனர்களது வரவேற்பை யு.பி.வி.சி பெற்றுள்ளது. தண்ணீருக்கான குழாய் வகைகளில் குறைவான உராய்வு தன்மை கொண்டதாக இருப்பதோடு, பிறவகை கட்டுமான பொருட்களோடு இணைத்து பொருத்தப்படும்போது அவ்வளவாக பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும், கால மாற்றத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதோடு நெருப்பு மற்றும் வெளிப்புற சத்தம் ஆகியவற்றையும் தாக்குப்பிடிக்கக் கூடியது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

யு.பி.வி.சி பொருட்களின் முக்கியமான தன்மை அவற்றை முழுமையாக மறு சுழற்சி செய்து, மற்ற பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தலாம் என்பதுதான். அதாவது, மறுசுழற்சி செய்தவற்றை அதிக வெப்ப நிலையில் உருக்கி வேண்டிய பொருட்களை வார்த்தெடுத்துக்கொள்ளலாம். மேலும், மறு தயாரிப்பில் உருவாகும் கழிவு பொருட்களை மீண்டும் உபயோகிக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

மின்சார செலவு

மின் சேமிப்பு அத்தியாவசியம் என்ற இன்றைய சூழலில் வெப்பம் மற்றும் குளிர் ஆகியவற்றை மிகக்குறைந்த அளவில் கடத்தும் யு.பி.வி.சி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவை மறைமுகமாக மின் சேமிப்பையும் சாத்தியமாக்குகின்றன. அதாவது, வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டும் அல்லது வெப்பமூட்டும் வசதிகள் கொண்ட கருவிகளின் மின் உபயோகத்தை யு.பி.வி.சி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவை சுமார் 15 சதவிகித அளவுக்கு குறைக்கும் தன்மை பெற்றதாக கட்டுமான வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சில குறைகள்

யு.பி.வி.சி பொருட்கள் நமது உடல் நலனுக்கு சிறிய அளவில் பாதிப்பை உண்டாக்கும் தன்மை கொண்டதாக அறியப்பட்டிருக்கிறது. மேலும், மற்ற பொருட்களான அலுமினியம் மற்றும் இரும்புடன் ஒப்பிடும்போது சற்று குறைவான உழைப்பை கொண்டதாக இருக்கும். சூரிய வெப்பத்தால் சுலபமாக நிறம் மங்கிவிடும் தன்மை கொண்டதாக இருப்பதால் பெரும்பாலும், வெளிர் நிறத்தில் இவை தயாரிக்கப்படுகின்றன. 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கி நிற்பதாக இருப்பினும், அதைவிட குறைவான அளவுக்கு பயன்படுத்துவதுதான் நல்லது.

மாற்று பொருட்கள்

‘ஜி.எப்.ஆர்.சி’ என்ற ‘கிளாஸ் பைபர் ரீ-இன்போர்ஸ்டு கான்கிரீட்’, ‘எப்.ஆர்.பி’ என்ற ‘பைபர் ரீ-இன்போர்ஸ்டு பிளாஸ்டிக்’ போன்றவை யு.பி.வி.சி-க்கு மாற்றாக இருக்கின்றன. மேலும், ‘எச்.டி.பி.இ’ என்ற ‘ஹை டென்சிட்டி பாலி எத்திலீன்’ குழாய்கள், அலுமினியம் பேனல்கள், கால்சியம் சிலிகேட் போர்டுகள், ஜிப்சம், ‘பைபர் பிளாஸ்டிக்’ போன்ற பொருட்களும் யு.பி.வி.சி-க்கு மாற்றாக பயன்பட்டு வருகின்றன.

Next Story