தெரிந்துகொள்வோம் : ‘டோர்மர்’
‘ஆர்க்கிடெக்சுரல் டிசைனிங்’ முறையில் வெவ்வேறு வடிவங்களில் ‘டோர்மர்’ அமைப்பை காணலாம்.
சென்னையில் உள்ள பழைய கட்டிடங்கள் பலவற்றிலும், மேற்கூரையில் சிறிய வீடு போன்ற அமைப்பில், கூரையின் அளவிலிருந்து சற்று முன்புறம் தள்ளப்பட்ட ஜன்னல் அமைப்பு இருப்பதை பலரும் கவனித்திருக்கலாம். ‘டோர்மர்’ என்று சொல்லப்படும் அந்த அமைப்பு, கட்டிடத்துக்குள் கூடுதலான வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துக்கு வழி செய்வதாக இருக்கும். இந்த முறையானது மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கட்டுமான யுக்தியாகும். சென்னை போன்ற நகரங்களில் இப்போது அவ்வளவாக நடைமுறையில் இல்லாவிட்டாலும், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ‘ஆர்க்கிடெக்சுரல் டிசைனிங்’ முறையில் வெவ்வேறு வடிவங்களில் ‘டோர்மர்’ அமைப்பை காணலாம்.
நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் பலவற்றிலும் தென்னிந்திய கட்டிடக்கலை வடிவத்தில் ‘டோர்மர்’ அமைப்பை அடையாளம் கண்டுகொள்ள இயலும். பிளாட் டோர்மர், ஆர்ச்டு ரூப் டோர்மர், ஷெட் டோர்மர், ஐபுரோ டோர்மர், கேபிள்டு டோர்மர், ஹிப்டு டோர்மர், ஓவல் டோர்மர், செக்மெண்டல் டோர்மர் மற்றும் இன்செட் டோர்மர் என்று பல்வேறு வகைகளில் டோர்மர்கள் கட்டமைக்கப்படுகின்றன.
பொதுவாக, பனி பொழியும் மேலை நாட்டு கட்டிடங்களில் ‘சீலிங்’ அமைப்பு தரைமட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 14 அடி அல்லது அதற்கும் மேற்பட்ட உயரத்திலும் இருப்பது வழக்கம். அந்த நிலையில் பக்கச்சுவர்களில் ஓரளவுக்கு மேலாக பெரிய ஜன்னல்கள் பொருத்துவது இயலாது. சூரிய வெப்பம் அதிகமாக வீடுகளுக்குள் வர வேண்டும் என்ற காரணத்துக்காக கூரையில் அழகிய கூம்பு வடிவம் போன்ற கட்டுமான அமைப்பில் ‘டோர்மர்’ அமைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story