கட்டுமானத்துறையில் அறிமுகமாகும் நவீன தொழில் நுட்பங்கள்


கட்டுமானத்துறையில் அறிமுகமாகும் நவீன தொழில் நுட்பங்கள்
x
தினத்தந்தி 20 May 2017 12:30 PM IST (Updated: 20 May 2017 12:30 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமானத்துறையில் அறிமுகமாகியுள்ள புதிய விஷயங்கள் பணிகளை எளிதாக செய்யும் வகையில் இருப்பதோடு, குறைந்த மனித உழைப்பிலும், குறுகிய காலத்திலும் வேலைகளை சுலபமாக முடிக்க வழி காட்டுகின்றன.

நாளுக்கு நாள் தொழில் நுட்ப வளர்ச்சிகள் அனைத்து துறைகளிலும் புதுமைகளை படைத்து வருகின்றன. குறிப்பாக சொல்வதென்றால், கட்டுமானத்துறையில் அறிமுகமாகியுள்ள புதிய விஷயங்கள் பணிகளை எளிதாக செய்யும் வகையில் இருப்பதோடு, குறைந்த மனித உழைப்பிலும், குறுகிய காலத்திலும் வேலைகளை சுலபமாக முடிக்க வழி காட்டுகின்றன. விரிசல்களை தாமாகவே சரி செய்துகொள்ளும் கான்கிரீட் முதல் வீடு கட்டும் ரோபோ வரையில் பல்வேறு விதங்களில் தொழில் நுட்பங்கள் நடப்பில் இருக்கின்றன. அவ்வகையில், எதிர்காலத்தில் அறிமுகமாக உள்ள, சில ஆச்சரியமான தொழில் நுட்பங்களை இங்கே காணலாம்.

சாவி இல்லாத கதவு

இனிமேல் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, சாவியை எங்கே வைத்தோம்..? என்று தேட வேண்டியதில்லை. நமது முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் ‘பேஸ் ஐடென்டிபையிங் டிவைஸ்’ மூலம் வீட்டின் கதவுகள் தாமாகவே திறந்து கொள்ளும். மேலும், நமது வருகையை உணர்ந்து அறைகளுக்குள் ஏ.சி-கள் தாமாக செயல்படுவதோடு, நாம் இல்லாத சமயங்களில் வீட்டை சுற்றிலும் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நமக்கு தெரிவிக்கும் கணினி நெட்வொர்க் அமைப்புகள் என்று அசத்தலான நுட்பங்கள் அரங்கேற உள்ளன. குறிப்பாக, பணி புரியும் இடத்திலிருந்து கொண்டு நமது வீட்டில் உள்ள அறைகளில் நடக்கும் சகல நிகழ்வுகளையும் கவனிக்க ‘ஸ்மார்ட் கணினி நெட்நொர்க்’ உதவி செய்கிறது.

ரோபோக்கள் வருகை

அழகான பெயர்கள் கொண்ட வேலைக்கார ரோபோக்கள் வீட்டின் தரைகளை நன்றாக சுத்தம் செய்வதோடு, ‘மாப்’ கொண்டு பளபளப்பாக துடைத்தும் விடுகின்றன. அவர்களுக்கான சம்பளம் என்பது பேட்டரி ரீ-சார்ஜ் மட்டுமே. குறிப்பாக எஸ்.ஏ.எம் எனப்படும் ‘செமி ஆட்டோமேட்டடு மேசன்’ என்ற கட்டுமான ரோபோ ஒரு நாளில் 3000 செங்கல் கொண்ட சுவரை அமைக்கும் தொழில்நுட்பம் கொண்டதாக, நியூயார்க்கை சேர்ந்த கட்டுமான நிறுவனம் வடிவமைத்துள்ளது. பல நாடுகளில் வாடகைக்கும்கூட கட்டுமான ரோபோக்கள் கிடைக்கின்றன. அமெரிக்க நாட்டு ரோபோக்களைபோல, வட இந்திய நிறுவனம் தயாரிக்கும் ரோபோவும் வீட்டு வேலைகளை எளிதாக செய்கிறது.

ஸ்மார்ட் கழிவறைகள்

நமது உடல் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ள தினமும் நாம் பயன்படுத்தும் டாய்லெட் சீட்டை பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நாம் பயன்படுத்தும் சமயத்தில் சிறு அளவில் மருத்துவ பரிசோதனையை செய்து முடித்து நமக்கு தேவையான ஆலோசனைகளை தருகிறது. கூடுதலாக, தானியங்கி முறையில் மியூசிக் சிஸ்டத்தை இயங்க செய்து, நமக்கு பிடித்தமான பாடல்களையும் ஒலிக்கச்செய்கிறது. தேவைக்கேற்ப வாசனை பரப்பும் தொழில்நுட்பம், கைகள் மற்றும் கால்களை உலர்த்தும் டிரையர்கள், கச்சிதமான லைட் செட்டிங் போன்ற ரிமோட் கண்ட்ரோல் முறையில் செயல்படும் அமைப்புகளும் இந்த ஸ்மார்ட் கழிவறைகளில் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

ஸ்மார்ட் கண்ணாடிகள்

அறைகளின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ‘கிளேஸிங்’ எனப்படும் கண்ணாடிகள் வெப்பத்தை தடுக்கும் அமைப்பாக செயல்படுகின்றன. தற்போது அவற்றை விடவும் ஸ்மார்ட்டாக செயல்படும் புதுமையான வெளிப்புற கண்ணாடிகள் புழக்கத்திற்கு வர இருக்கின்றன. இவை ஜன்னல் திரைகளுக்கு மாற்றாக இருக்கும். அதாவது, சுற்றுப்புறத்தில் நிலவும் அதிகப்படியான வெளிச்சம் அல்லது வெப்பநிலை ஆகியவற்றை அறைகளுக்குள் நேரடியாக பரவ விடாமல், அவற்றை ‘பில்டர்’ செய்து வேண்டிய அளவுக்கு மட்டும் அறைகளுக்குள் பரவ அனுமதிக்கிறது. உட்கார்ந்த இடத்திலிருந்தே அறைகளுக்குள் நிலவும் வெளிச்சத்தை குறைக்கவோ, அதிகரிக்கவோ இயலும். இந்த தொழில்நுட்பமானது, ஸ்விட்ச் மூலமாக செயல்படுவதோடு, குரல் வழியாகவும் இயங்கும் தன்மை பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

Next Story