சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் சேமிப்பு திட்டம்


சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் சேமிப்பு திட்டம்
x
தினத்தந்தி 26 May 2017 11:00 PM GMT (Updated: 26 May 2017 10:08 AM GMT)

சொந்த வீடு என்ற கனவுகளோடு உள்ள மத்திய தர உழைக்கும் மக் களுக்கு உதவும் விதமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு திட்டத்தை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

சொந்த வீடு என்ற கனவுகளோடு உள்ள மத்திய தர உழைக்கும் மக்
களுக்கு உதவும் விதமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு திட்டத்தை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னதாக மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின்கீழ் இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகள் அமைக்கும் திட்டம் நடைமுறையில் செயல்பட்டுவரும் நிலையில், சொந்த வீடு வாங்குவதற்கு இ.பி.எப் சேமிப்பை பயன்படுத்தும் திட்டம் அறிமுகமாகியிருக்கிறது.

தொழிலாளர் நலத்துறை

மேற்கண்ட திட்டத்தின் அடிப்படையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவியாக இருக்கும் வகையில் பல்வேறு சலுகைகளும் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. வங்கி கடன்கள் எளிமையாக்கப்பட்டு, வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, மாத சம்பளம் பெறுபவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய தொழிலாளர் நலத்துறை புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள் இ.பி.எப். பணம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் 36 மாத சம்பளத்துக்கு இணையாக (பேசிக் மற்றும் டி.ஏ சேர்ந்த தொகை) இ.பி.எப் சேமிப்பிலிருந்து தொகையை, வீடு வாங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் வசதி இருந்து வந்தது. வீடு கட்டுவதற்கான நிலம் வாங்குவதற்காக 24 மாதங்களுக்கான இ.பி.எப் சேமிப்பு தொகையை பெற்றுகொள்ளும் வசதியும் இருந்து வந்தது.

விதிமுறைகள்

இந்த நிலையில், வீடு வாங்குவதற்காக இ.பி.எப் சேமிப்பு தொகையிலிருந்து 90 சதவிகிதம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளையும் இ.பி.எப் அலுவலகம் விதித்திருக்கிறது. அதன்படி பயனாளர்கள் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டுறவு சங்கத்தை அமைத்து, அதை முறைப்படி பதிவு செய்து கொள்ளவேண்டும். அவர்களின் இ.பி.எப் கணக்கில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த திட்டத்தின் அடிப்படையில் இ.பி.எப் நிறுவனம் மனை வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கான தொகையை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்திடமோ, ஹவுசிங் ஏஜென்சியிடமோ, பில்டர்களிடமோ கொடுக்கும். இ.பி.எப் உறுப்பினர்கள் கையில் தொகை கொடுக்கப்படமாட்டாது.  

அடுக்குமாடி வீடுகள்

கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முதல் இந்த சலுகை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 10 பேர் கூட்டாக இணைந்து அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சில காரணங்களால் வீடு அல்லது பிளாட் வாங்க முடியாமல்போகும் பட்சத்தில் 15 நாள்களுக்குள் தரப்பட்ட தொகையானது இ.பி.எப் நிறுவனத்துக்கு திருப்பி செலுத்திவிட வேண்டும் என்ற விதிமுறையும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ செலுத்துவதற்காக தங்கள் மாதாந்திர இ.பி.எப் தொகையை பயன்படுத்தும் விருப்பத்தேர்வு அனுமதியும் உள்ளது.

கூட்டுறவு சங்கம்

ஒரு பயனாளர் தனது வாழ்நாளில் இந்த திட்டத்தின் மூலம் ஒரு முறைதான் பயன்பெற இயலும். இந்த திட்டத்தின்கீழ் நான்கு கோடி பேர் பயனடையும் வாய்ப்பு உள்ளது. மேலும், ஊழியர்கள் ஒன்றாக இணைந்து தொழிலாளர்கள் கூட்டுறவு சொசைட்டியை உருவாக்கி வீடு, மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிக்கொள்ளும் சூழலும் அமைந்திருக்கிறது. 

Next Story