கட்டுமானத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் புதிய அணுகுமுறை


கட்டுமானத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் புதிய அணுகுமுறை
x
தினத்தந்தி 26 May 2017 11:30 PM GMT (Updated: 26 May 2017 10:21 AM GMT)

வர்த்தக ரீதியாக புதிய அணுகுமுறைகள், மாற்று யுக்திகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் குறைவான பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் ரீதியாக, புதிய திட்டங்கள் கட்டுமானத்துறையில் வேகமெடுத்து வருகின்றன.

ர்த்தக ரீதியாக புதிய அணுகுமுறைகள், மாற்று யுக்திகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் குறைவான பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் ரீதியாக, புதிய திட்டங்கள் கட்டுமானத்துறையில் வேகமெடுத்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு உலக நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் ‘ஸ்டூடண்ட் ஹவுஸிங்’ அதாவது மாணவர் குடியிருப்பு என்ற புதிய வடிவத்தை ரியல் எஸ்டேட் வல்லுனர்களும், நிதி ஆலோசகர்களும் பரிந்துரை செய்வது கவனிக்கத்தக்கது.

‘ஸ்டூடண்ட் ஹவுசிங்’

அதாவது, ஒவ்வொரு வருடமும் கல்வி பெறும் வாய்ப்புகளுக்காக இந்தியாவின் வெவ்வேறு பகுதியிலிருந்தும், உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் இந்தியாவின் பல முக்கியமான நகரங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் பல இடங்களில் தங்கி கல்வி கற்க வேண்டியதாக இருக்கிறது.

ஏற்கெனவே, ஹாஸ்டலில் தங்கி படிப்பது என்ற வழக்கமான முறை இருந்துவரும் சூழ்நிலையில், ‘ஸ்டூடண்ட் ஹவுஸிங்’ என்ற புதிய முறையில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் பட்சத்தில், அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களின் கவனத்தையும் அது கவருவதாக இருக்கும் என்று வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலை நாடுகளில் பிரபலம்

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் ‘ஸ்டூடண்ட் ஹவுஸிங்’ முறையில் அதன் உள்கட்டமைப்பு உள்ளிட்ட கச்சிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் போன்றவை அங்கு உள்ள மாணவர்களை கவர்ந்திருக்கிறது. மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு, பல இடங்களிலிருந்து வருங்காலங்களில் உயர்கல்வி பெறும் நோக்கத்துடன் மாணவர்கள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு தேவைப்படும் சகல வசதிகளோடு அமைக்கப்படும் ‘ஸ்டூடண்ட் ஹவுசிங்’ என்ற மாணவர் குடியிருப்பு அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இருக்கும் பட்சத்தில் நல்ல வரவேற்பை பெறும்.

‘சர்வீஸ் அபார்ட்மெண்ட்’

தொழில் அல்லது வியாபார ரீதியாக சென்னையில் சில மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் என்ற சூழலில் இருக்கும் வர்த்தகர்கள் உள்ளிட்ட இதர தொழில் முனைவோர்களுக்கு தற்போது ‘சர்வீஸ் அபார்ட்மெண்ட்’ என்ற குடியிருப்புகள் பல இடங்களிலும் இருந்து வருவது கவனிக்கத்தக்கது. அவர்களுக்கு அங்கு உணவு மற்றும் தங்கும் இடம் போன்ற வசதிகள் மாதாந்திர கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

வருட ஒப்பந்தம்

மாணவர் குடியிருப்புகளை வருடாந்திர ஒப்பந்த முறையில் மாணவர்கள் அல்லது மாணவியர்களிடம் அவர்களது பெற்றோர்கள் அல்லது நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் அளிப்பதோடு, இரு தரப்புக்கும் நன்மைகளை தரும் விதத்தில் ஒப்பந்தத்தை அமைத்துக்கொள்வதும் முக்கியமானது என்பதை வல்லுனர்கள் வலியுறுத்துகிறார்கள். மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியான குடியிருப்புகள் இருக்கவேண்டும் என்ற கருத்தும் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய யுக்திகள் அவசியம்

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும் அளவில், மேற்கண்ட திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. மேலை நாட்டின் வியாபாரம் மற்றும் வர்த்தக வடிவங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தாது என்ற வணிக அடிப்படைகளையும் நிபுணர்கள் கவனத்தில் கொண்டுள்ளார்கள். மேற்கண்ட முறை புதியதாக இருந்தாலும், அவற்றின் தேவைகள் உலகமெங்கும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

Next Story