நலிவடைந்த மக்களுக்கு அரசு குடியிருப்புகள்


நலிவடைந்த மக்களுக்கு அரசு  குடியிருப்புகள்
x
தினத்தந்தி 9 Jun 2017 10:45 PM GMT (Updated: 9 Jun 2017 11:06 AM GMT)

பெரும்பாக்கம் பகுதியில் ரூபாய். 1200 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பை அமைத்து அவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் வீடுகளின்றி அரசு புறம்போக்கு நிலங்கள், ஆற்றங்கரையோரங்களில் குடிசைகள் அமைத்து வசிப்பவர்கள், பெரு வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படுபவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினர் போன்றவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்றவை மூலம் பரிந்துரைக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குகின்ற வகையில் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதற்காக, பெரும்பாக்கம் பகுதியில் ரூபாய். 1200 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பை அமைத்து அவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த திட்டமானது, ஜூன் மாத இறுதிக்குள் முடிவடைந்து, ஜூலை மாதத்தில் பயனாளிகளை குடியமர்த்த, குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டமானது, 200 ஏக்கர் பரப்பளவில் அமைவதோடு, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த திட்டமானது, கடந்த 2009–ம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட, குடியிருப்பு பகுதியில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, சமுதாயக்கூடம், பேருந்து நிலையம், வணிக வளாகம் மற்றும் ரே‌ஷன் கடை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன், அடுக்குமாடி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளின் ஒட்டு மொத்த கட்டமைப்பும் 32 பிளாக்குகள் கொண்டதாக உள்ளது.

ஒவ்வொரு வீடும் கிட்டத்தட்ட ரூபாய். 6 லட்சம் மதிப்புள்ள தாகும். 400 சதுர அடி பரப்பளவு கொண்டதாக கட்டப்படும்  குடியிருப்புகளில், ஒரு படுக்கை அறை, சமையல் அறை, வரவேற்பு அறை மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் 6000 வீடுகள் கடந்த ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வீடுகளில், 2015–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அடையாறு ஆற்றங்கரை ஓரமாக குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் வீட்டை இழந்தவர்கள் ஆகியோர் மீண்டும் குடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற பத்துக்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் பங்கு கொண்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 95 சதவிகித பணிகள் நிறைவேற்றியுள்ளன.

அடுத்த மாத இறுதிக்குள், அனைத்து பணிகளையும் முடிக்க, குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் மாத இறுதியில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, பயோமெட்ரிக் முறைப்படி கணக்கெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story