வீட்டுக்கடன் பெறுபவர்கள் கவனிக்க வேண்டிய ‘கிரெடிட் ஸ்கோர்’


வீட்டுக்கடன் பெறுபவர்கள் கவனிக்க வேண்டிய ‘கிரெடிட் ஸ்கோர்’
x
தினத்தந்தி 10 Jun 2017 5:15 AM IST (Updated: 9 Jun 2017 5:17 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்கடன் மற்றும் இதர கடன்களை வழங்கும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது வழக்கம்.

வீட்டுக்கடன் மற்றும் இதர கடன்களை வழங்கும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது வழக்கம். கடன் பெற விரும்பும் ஒருவர் விண்ணப்பிக்கும்போது, அவரது திருப்பி செலுத்தும் தகுதி எவ்வாறு உள்ளது..? என்று வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் உன்னிப்பாக கவனிக்கின்றன.  

60 சதவிகிதம்

கடன் பெற விண்ணப்பித்தவரின் கல்வி, வயது, தொழில் அல்லது பணி, மாத வருமானம், முன்னர் பெறப்பட்ட கடன்கள் ஆகிய சகல தகவல்களையும் வங்கிகள் கவனமாக பரிசீலிக்கின்றன. அதன் மூலம் கடன் பெற விண்ணப்பித்தவர், அவரது மற்ற செலவுகள் போக கடன் தொகையை திருப்பி செலுத்த எந்த அளவு சாத்தியம் உள்ளது..? என்று கணக்கிடுகின்றனர். கடன் பெற விண்ணப்பிக்கும்போது வாடிக்கையாளரது ‘கிரெடிட் ஸ்கோர்’ என்று சொல்லப்படும் ‘சிபில் ஸ்கோர்’ பற்றியும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கவனத்தில் கொள்கின்றன. கடன் தொகையானது விண்ணப்பதாரரின் சம்பள தொகையில், அதிகபட்சம் 60 சதவிகித அளவுக்கே இருக்கவேண்டும். அதற்கு மேல் கடன் தொகை அதிகரிக்கும்போது, அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.

சிபில் வழங்கும் ஸ்கோர்

‘கிரெடிட் இன்பர்மே‌ஷன் பீரோ லிமிடெட்’ என்பதன் சுருக்கமே சிபில் என்று வழங்கப்படுகிறது. இந்த அமைப்பானது இந்திய அளவில் கடன் பெறுபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களை பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை, கடன் வழங்கிய வங்கிகள் மேற்கண்ட சிபில் அமைப்புக்கு தெரிவிக்கும். இந்த தகவல்களை சிபில் அமைப்பு தனது தகவல் களத்தில் சேமிப்பாக வைத்திருக்கும்.   

ரிஸ்க் அளவு


பொதுவாக, சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையில் குறிப்பிடப்படுகிறது. இதில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்கள், குறைவான ரிஸ்க் உடையவர்கள் என்பதாக கருதப்படும். பொதுவாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 750 மதிப்பெண்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிப்பது குறிப்பிடத்தக்கது.

•தனிநபர்கள் தங்களது கடன் அறிக்கைகளை அவ்வப்போது பரிசோதிப்பது முக்கியமானது. அத்தகைய கிரெடிட் அறிக்கைகளை பரிசோதிப்பது ‘சாப்ட் இன்கொயரி’ என்று சொல்லப்படும். ஒவ்வொருவரும் தமது கிரெடிட் ஸ்கோர் பற்றி ஆண்டுக்கு ஒரு முறையாவது பரிசோதித்துக்கொள்வது அவசியம்.

•வங்கிகள் அல்லது இதர நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளருடைய ‘கிரெடிட்’ அறிக்கைகளை பரிசோதிப்பது ‘ஹார்டு இன்கொயரி’ என்று சொல்லப்படும். நிதி, அரசுப்பணி மற்றும் வங்கி நிறுவனங்கள் போன்றவை ஒருவரை வேலைக்கு சேர்க்கும் முன்னர், அவரது ‘கிரெடிட்’ அறிக்கைகளை கவனித்து, அவரது நிதி தொடர்பான வி‌ஷயங்களை கவனத்தில் கொள்கிறார்கள்.

•‘கிரெடிட்’ ஸ்கோரை நல்ல விதமாக உயர்த்தி கொண்டு வீட்டுக்கடன் உள்ளிட்ட இதர கடன்களை பெற விரும்பனால், கடன்களை கச்சிதமான கால அளவுகளில் செலுத்தப்பட்டிருப்பது முக்கியம். அதன் மூலமாக, வங்கிகளால் தரப்படும் மற்ற இதர சேவைகளையும் பெற முடியும்.  

•வங்கி கடன் தொடர்பான சகல தகவல்கள், கிரெடிட் கார்டுகள், செலவுகளை திரும்ப செலுத்திய தகவல்கள், வரிகள் மீதான உரிமை, வருமானம், முதலீடு, பங்குகள், சேமிப்பு கணக்கு போன்றவையும் கிரெடிட் அறிக்கைகளில் சேர்க்கப்பட்டிருக்கும்.

•வீட்டுக்கடன் பெற விரும்புபவர்கள் ஒரு வங்கியில் விண்ணப்பித்து அங்கு கிடைக்கவில்லை எனும்பட்சத்தில், உடனடியாக அடுத்த வங்கியில் கடனுக்காக விண்ணப்பம் செய்யக்கூடாது. மேலும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பம் செய்வதும் தவறு. அதன் காரணமாக, கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்பு உள்ளது. அதனால், வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்து கிடைக்காத பட்சத்தில், ஆறு மாதம் கழித்து வேறொரு வங்கியில் விண்ணப்பம் செய்வதே நல்லது. 

Next Story