உலக நாடுகளின் கட்டுமான அதிசயங்கள்


உலக நாடுகளின் கட்டுமான அதிசயங்கள்
x
தினத்தந்தி 10 Jun 2017 6:00 AM IST (Updated: 9 Jun 2017 5:38 PM IST)
t-max-icont-min-icon

நாகரிகம் தோன்றிய நாள் முதலாக இயற்கையில் உள்ள அதிசயங்களின் மீது மனிதனுக்கு தீராத ஆர்வம் இருந்து வந்திருக்கிறது.

நாகரிகம் தோன்றிய நாள் முதலாக இயற்கையில் உள்ள அதிசயங்களின் மீது மனிதனுக்கு தீராத ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. அதை பல்வேறு விதமாக கலைகளின் வெளிப்பாடாக அவன் வெளிப்படுத்தி வந்திருக்கிறான். பல அகழ்வாராய்ச்சிகள் இந்த உண்மையை வெளிப்படுத்தி இருக்கின்றன. உலகம் முழுவதுமே வெவ்வேறு காலகட்டங்களில் விதவிதமாக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் கட்டுமான அதிசயங்களாக இருந்து வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக இன்றைய நாகரிக வளர்ச்சிகள் கட்டுமான தொழில்நுட்பத்தை ஆச்சரியமூட்டும் விதத்தில் அரங்கேற்றி இருக்கின்றன. அவ்வகையில் மனதை கவரும் விதத்தில் அமைக்கப்பட்ட சில கட்டிடங்களை இங்கே காணலாம்.

ரிப்ளி’ஸ் பில்டிங், ஓன்டாரியோ, கனடா

டிப்ளியின், நம்பினால் நம்புங்கள் என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப்போம். அந்த நிகழ்ச்சியில் உலகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த நம்ப முடியாத செய்திகள், வினோதமான நிகழ்ச்சிகள், புதிரான இடங்கள் மற்றும் ஆச்சரியமான மனிதர்கள் ஆகிய செய்திகள் இடம்பெறுவது வழக்கம். அதன் காரணமாக அந்த தொடரானது உலகப்புகழ் பெற்றிருக்கிறது. 1812–ம் ஆண்டில் கனடாவில் ஏற்பட்ட பூகம்பமானது ரிக்டர் அளவில் 8.0 என்ற எண்ணிக்கையில் இருந்தது. அதாவது 6.0 என்ற அளவிலான பூகம்பம் கட்டிடங்களை தரைமட்டமாக்க போதுமானது என்ற நிலையில் 8.0 என்ற அளவானது பெரும் சேதம் ஏற்படுத்தியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. மேற்கண்ட கட்டிடமானது அந்த பூகம்பத்தை நினைவு கூர்வதுபோல வடிமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் ஏடாகூடமான வடிவமைப்பாக வெளிப்புறத்தில் தோற்றம் தந்தாலும் உள்ளே அனைத்துவிதமான அமைப்புகளும் கச்சிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

நாகாஜின் கேப்சூல் டவர், டோக்கியோ, ஜப்பான்

டோக்கியோவின் ஷிம்பாஷி பகுதியில் இந்த கேப்சூல் டவர் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை 1972–ம் ஆண்டில் வடிவமைத்தவர் ஜப்பானிய ஆர்க்கிடெக்ட் கிஷோ குரொகாவா. இக்கட்டிடமானது மிக்ஸ்டு–யூஸ் எனப்படும் குடியிருப்பு மற்றும் அலுவலக பயன்பாடு ஆகிய இரு விதங்களில் பயன்படுகிறது. உலகப் போரின் நினைவாக அமைந்த ஜப்பானிய கட்டிட கலை சின்னமாக பார்க்கப்படுகிறது. இக்கட்டமைப்பு நீள் உருண்டை வடிவத்தில் அதாவது டியூப் மாத்திரை வடிவம் கொண்டதாக அதன் உட்புறம் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளை கடந்த நிலையிலும் பெரிதாக மராமத்து பணிகள் எதுவும் செய்யப்படாமல் இன்றைய தேதி வரையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மொத்தம் 140 கேப்சூல் வீடுகளை கொண்ட இக்கட்டிடத்தில் தற்போது 30–க்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருப்பாகவும், மீதம் உள்ளவை அலுவலகமாகவும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கேப்சூல் வடிவ வீடும் 12 அடி நீளமும், 7 அடி அகலமும், 8 அடி உயரமும் கொண்டதாக இருக்கின்றன.

ஹாங் நா கெஸ்ட் ஹவுஸ், வியட்நாம்

இந்த வித்தியாசமான கட்டமைப்பு நெ–3, ஹூயின் தக் தெரு, தலத் சிட்டி, வியட்நாம் என்ர முகவரியில் உள்ளது. ஆர்க்கிடெக்ட் நா (பெண்மணி) 1990–ம் ஆண்டில் தனக்கு விருப்பமான முறையில் கட்டிடத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக வங்கியில் விண்ணப்பித்தபோது வங்கிகள் அதற்கு கடன் தர இசையவில்லை. எப்படியோ 18 ஆண்டுகளாக முயற்சித்து கட்டிடத்தை மேலும் பல புதிரான வடிவமைப்புகள் கொண்டதாக மாற்றிவிட்டார். இதற்கிடையில் எகிறிய பட்ஜெட் காரணமாக கட்டிடத்தை பல முறைகள் விற்பனை செய்ய முயற்சித்து, அதுவும் பலிக்கவில்லை. கடைசியாக, ‘வித்தியாச கட்டிடம்’ என்ற பெயரில் டூரிஸ்ட் ஸ்பாட்–ஆக மாற்ற முயற்சித்து அதில் ஓரளவு வெற்றி கிடைத்தது.

கட்டிடத்தை சுற்றிலும் உள்ள பலவகை மரங்கள் விதவிதமான வடிவங்களில் வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. கட்டிடத்துக்குள் செல்ல படிக்கட்டுகள் கொண்ட சுரங்கப்பாதை, ஏடாகூடமான ஜன்னல் வடிவமைப்புகள், புதிரான நடை பாதைகள் என்று மிரட்சியை உண்டாக்கும் பல வி‌ஷயங்கள் உண்டு. ஆங்காங்கே வித்தியாசமான காளான்கள், அதிர்ச்சி தரும் சிலந்தி வலைகள், புதிரான குட்டை வடிவத்தில் மரங்கள் என்று குழப்பமான வி‌ஷயங்கள் நிறைய உண்டு. கூடுதலாக இக்கட்டிட அமைப்புக்குள் 10 விதமான விருந்தினர் அறைகள் இருக்கின்றன. அவற்றின் பெயர்கள் இன்னும் ஆச்சரியமானவை. சீன நாட்டு புலி அறை, அமெரிக்க நாட்டு கழுகு அறை, வியட்நாம் நாட்டு எறும்பு அறை மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் கங்காரு அறை என்று அவற்றின் பெயர்கள் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கின்றன. அனைத்து அறைகளிலும் அவற்றின் பெயர்களுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட நாட்டின் பாரம்பரிய பர்னிச்சர் வகைகள் மற்றும் அறைகளின் அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சின்ன குழந்தைகளின் கனவுகளில் வரும் உருவங்களை பிரதிபலிக்கும் விதமாக மேற்கண்ட அமைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக ஆர்க்கிடெக்ட் நா குறிப்பிட்டிருக்கிறார்.     

கான்சாஸ் சிட்டி பப்ளிக் லைப்ரரி, மிசெளரி மாகாணம்


புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வடிவத்தில் இருக்கும் இந்த கட்டிடம் லைப்ரரியாக உபயோகத்தில் இருந்து வருகிறது. 1873–ம் ஆண்டில் தொடங்கிய இதன் கட்டுமான பணிகள் 1889–ம் ஆண்டுதான் முடிவடைந்தது. இந்த கட்டமைப்புக்குள் அடுக்கி வைக்கப்பட்ட முதல் புத்தக தொகுப்பானது அமெரிக்கன் என்சைக்ளோபீடியா ஆகும். கான்சாஸ் நகரத்தில் எளிமையாக தொடங்கப்பட்ட இந்த லைப்ரரி காலப்போக்கில் பிரம்மாண்டமாக மாறிவிட்டது. நகர மக்களின் அறிவுப்பூர்வமான பொழுதுபோக்குக்கு இந்த கட்டிடம் சிறப்பான இடமாக உள்ளது. இந்த லைப்ரரியில் புத்தகங்களை படிப்பதோடு மட்டுமல்லாமல், படித்த புத்தகங்களில் உள்ள குறிப்புகளை எடுத்துக்கொள்வதற்காக தனியாக இயற்கை முறையில் பல்வேறு ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகளும் உள்ளன. ஆர்க்கிடெக்சர் அற்புதமாக பார்க்கப்படும் இந்த கட்டமைப்பானது கலை அழகுக்கும் உதாரணமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. நமது ஊர் கணக்குப்படி ரூபாய் 320 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

துபாயில் அமைக்கப்பட்ட சுழலும் டவர் அமைப்பு

இத்தாலி நாட்டை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் டேவிட் பி‌ஷர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த உயரமான டவர் ‘டைனமிக் டவர்’ என்றும் அழைக்கப்படுகிறது.  80 மாடிகள் கொண்ட கட்டிடம் காற்று மற்றும் சூரிய வெளிச்சம் ஆகிய தன்மைகளுக்கேற்றவாறு நகரக்கூடியது. அதனால் இக்கட்டிடமானது தொலைவிலிருந்து பார்க்கும்போது வெவ்வேறு வடிவங்களில் தோற்றம் தருவது ஆர்க்கிடெக்சர் அதிசயமாக கருதப்படுகிறது.

ஒரு அறையில் சூரிய உதயத்தை பார்த்தவாறு காலையில் கண் விழிப்பவர்கள் அதே அறையில் சூரியன் மறைவதையும் காணும் வகையில் கட்டிடம் வித்தியாசமான தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய 79 காற்றில் இயங்கி மின்சாரம் தயாரிக்கும் டர்பைன்கள் அனைத்து தளங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. டவரின் அனைத்து பாகங்களும் ‘பிரி பேப்ரிகேட்டடு’ முறையில் 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நதியின் நீரோட்டத்தை வெளிப்படுத்துவது போன்று, முப்பரிமாண அளவுகளை கடந்த நான்காம் பரிணாமத்தில் கட்டிடத்தின் தோற்றம் அமையுமாறு கச்சிதமாக பிளான் செய்து கட்டப்பட்டதாக டேவிட் பி‌ஷர் தெரிவித்திருக்கிறார்.

Next Story