முன்னோர்கள் கடைப்பிடித்த மண் பரிசோதனை முறைகள்


முன்னோர்கள் கடைப்பிடித்த மண்  பரிசோதனை முறைகள்
x
தினத்தந்தி 10 Jun 2017 1:15 AM GMT (Updated: 9 Jun 2017 12:19 PM GMT)

தற்போதைய நவீன கட்டிடவியல் முறைப்படி கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட இடத்தில் மண் பரிசோதனை செய்வது வழக்கம்.

ற்போதைய நவீன கட்டிடவியல் முறைப்படி கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட இடத்தில் மண் பரிசோதனை செய்வது வழக்கம். இப்போது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி உயரமான கட்டிடங்கள் அமைக்கப்படுவதுபோல முற்காலங்களிலும் கட்டமைப்புகளுக்கான இடத்தை தேர்ந்தெடுத்து உயரமான கட்டுமானங்களை அமைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

மண் பரிசோதனை


அதாவது, மன்னர்கள் காலத்திலும் இன்றைய மண் பரிசோதனை போன்றே பூமி சோதனை முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், அன்றைய காலகட்டத்தில் நிலங்கள் ஏராளமான இருந்ததால் சரியான நிலத்தை தேர்ந்தெடுப்பதும் ஒரு வகை சிக்கலாக இருந்தது. அதற்காக அனுபவம் மிக்க நிபுணர்களைக்கொண்டு நில வகைகள் பரிசோதிக்கப்பட்டு, குடியிருப்புகள் அல்லது அரண்மனைகள் கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஐந்து வகைகள்

அவ்வாறு முற்காலங்களில் நிலங்களின் அமைப்புகளையும், அதன் பளு தாங்கும் திறன் மற்றும் மண்ணின் தன்மை ஆகியவற்றை கண்டறிய கடைப்பிடிக்கப்பட்டு வந்த முறைகளில் ஒன்றை கீழே காணலாம். அதில் நிலத்தின் தன்மைகளை ஐந்து கூறுகளாக பிரித்து துல்லியமாக பரிசோதித்து அறிந்திருக்கின்றனர். அவை நிறம், மணம், ஓசை, தொடு உணர்வு மற்றும் மண்ணின் தூசி ஆகியனவாகும்.  

நிறம்

பூமியின் நிறத்தை முதலாவதாக கவனிப்பது அன்றைய காலகட்டத்தில் பொதுவான முறையாக இருந்தது. வெள்ளை, பொன் நிறம், சிவந்த நிறம், கருப்பு நிறம் என்று நான்கு நிறங்களை அடிப்படையாக கொண்டு நிலங்களை வகைப்படுத்தி இருந்தார்கள். அந்த நிறங்களை மையப்படுத்தி பூமியின் தன்மையை அவர்கள் எளிதாக கண்டறிந்திருக்கின்றனர். பொதுவாக கருப்பு நிறத்தில் உள்ள நிலப்பகுதியானது குடியிருப்புகளுக்கு கச்சிதமாக பொருந்தாது என்று கருதப்பட்டது. (இன்றைய அஸ்திவார தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக எவ்வகை மண்ணிலும் விண்ணைத்தொடும் கட்டிடங்கள் அமைக்க இயலும்)

மணம்

சம்பந்தப்பட்ட நிலத்தில் வீசும் மணத்தை முகர்ந்து அறிவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. அதாவது, பாலின் மணம், பூக்கள் வாசனை, கிழங்கு வாசம் மற்றும் தண்ணீரின் மணம் ஆகியவை கொண்ட நிலங்கள் பெரிய கட்டமைப்புகளை அமைக்க பயன்படுத்தப்பட்டது. புன்னை மலர், ஜாதி முல்லை, தாமரை, தானியங்கள், பாதிரிப்பூ மற்றும் பசுவின் மணம் போன்ற வாசனை கொண்ட நிலங்கள் குடியிருப்புகள் அமைக்க உகந்தது என்று சொல்லப்பட்டது தயிர், நெய், தேன், எண்ணெய், இரத்தம் மற்றும் மீன் ஆகியவற்றின் மணம் கொண்ட நிலங்கள் பயன்படுத்த உகந்தது அல்ல என்று விலக்கப்பட்டது.

ஓசை

நிலத்தின் ஓசையையும் கணக்கில் கொண்டு அதன் பயனை அறிந்துள்ளார்கள். அதாவது, நிலத்தை கொத்தும் போது கேட்கும் சப்தங்களை குதிரை கனைப்பது, யானையின் பிளிறல், மூங்கில் உராய்தல், வீணை நாதம், கடல் அலையின் ஓசை ஆகிய சப்தங்கள் நிலத்தை கொத்தும்போது எழுமானால் அந்த நிலம் கட்டிடங்கள் அமைக்க சிறப்பானது என்று கருதினார்கள்.

தொடு உணர்வு

குறிப்பிட்ட நிலத்தில் முதன்முதலாக காலடி வைக்கும்போதும், அதன் மையப்பகுதியை சுத்தப்படுத்தி அதனை கைகளால் தொட்டு பார்த்தும் நிலத்தின் இயல்பான தன்மைகளை கண்டறிய முடியும் என்று நம்பப்பட்டது. அதாவது, நுட்பமான தொடு உணர்வு கொண்டவர்கள் நிலத்தின் பசைத்தன்மை, சொர சொரப்பு, ஈரப்பதம் மற்றும் வறண்ட தன்மை ஆகியவற்றை உணர்ந்து அறிய முடியும் என்றும் நம்பினார்கள்.

மண்ணின் தூசி

ஒரு அதிகாலை நேரத்தில், குறிப்பிட்ட நிலத்தின் ஒரு பகுதி மண்ணை எடுத்து உலர்த்திவிட்டு, அதை வலது உள்ளங்கையில் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு, கிழக்கு திசை பார்த்து நின்று கொண்டு மண்ணை வாயால் ஊத வேண்டும். அவ்வாறு ஊதும்போது அதிலிருந்து வெளிப்பட்டு பறக்கும் தூசிகள் மற்றும் கீழே விழக்கூடிய மண்ணின் அளவு ஆகியவற்றைக்கொண்டு அந்த பூமியின் தன்மையை கணிப்பதும் ஒரு முறையாக இருந்து வந்திருக்கிறது.

Next Story
  • chat