கட்டிடங்களை விரைவாக அமைக்க உதவும் கட்டுமான நுட்பம்


கட்டிடங்களை  விரைவாக  அமைக்க  உதவும்   கட்டுமான நுட்பம்
x
தினத்தந்தி 1 July 2017 3:30 AM IST (Updated: 30 Jun 2017 4:42 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக இப்போதைய கட்டுமான பணிகளை தேவைக்கேற்ப விரைவாக செய்ய முடிகிறது.

ல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக இப்போதைய கட்டுமான பணிகளை தேவைக்கேற்ப விரைவாக செய்ய முடிகிறது. வாழ்க்கையின் வேகம் செல்லும் அளவுக்கு இதர வசதிகளும் கிடைக்கவேண்டும் என்பது பொதுவான மனநிலையாக மாறி இருக்கிறது. அதற்கேற்ப கட்டுமான அமைப்புகள் ‘பிரேம்டு ஸ்ட்ரக்சர்’ என்ற முறையில் பல அடுக்கு மாடிகளாக விரைவாக அமைக்கும் முறை பரவலாக இருக்கிறது. அதன் மூலம் காலமும், இதர செலவுகளும் குறிப்பிடத்தக்க அளவு மீதமாகிறது.

‘பார்ம் ஒர்க்’

பொதுவாக, கான்கிரீட் அமைக்கும் பணிகளை செய்வதற்கு முன்னர், அதற்கேற்ப ‘பார்ம் ஒர்க்’ எனப்படும் பலகைகள் அமைத்து முட்டு கொடுக்கும் பணிகள் தேவைக்கேற்ப செய்யப்படும். முன்பு கான்கிரீட்டுக்கான முட்டு அமைக்க மரப்பலகைகள் பயன்படுத்தப்பட்டன. தேவைகளுக்கேற்ப மரப்பலகைகள் கிடைக்காததால், அவை பிளைவுட் பலகைகளாக மாறிவிட்டன. இப்போது அந்த இடத்தை இரும்பு பிளேட்கள் பிடித்துக்கொண்டுவிட்டன. மேலும், பிளாஸ்டிக் மற்றும் பைபர் கிளாஸ் போன்ற பொருட்களும் அந்த வரிசையில் இருக்கின்றன.

‘மிவன் டெக்னாலஜி’

மேற்கண்ட வரிசையில் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றால் 1990–ம் ஆண்டில் வடிவமைப்பு செய்து பயன்படுத்தப்பட்ட ‘அலுமினியம் பார்ம் ஒர்க்’ முறையானது புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மலேசிய நாட்டில், மேற்கண்ட நிறுவனத்தால் ‘மிவன் டெக்னாலஜி’ என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறையானது, பலமாடி கட்டிடங்களை எளிதாக கட்டி முடிக்க வழி காட்டியது. குறிப்பாக மனித வளம், பட்ஜெட் மற்றும் காலம் ஆகிய மூன்று நிலைகளிலும் இந்த முறை சிக்கனமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் உலக அளவில் கிட்டத்தட்ட 50,000 சதுர மீட்டர்களுக்கும் மேலான பரப்பளவில் இந்த முறையில் பலமாடி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரே கான்கிரீட்


‘மிவன் டெக்னாலஜி’ முறைப்படி கட்டிடத்தின் சுவர்கள், காலம்கள், பீம்கள் மற்றும் தளங்கள் ஆகிய அனைத்து விதமான கட்டிட பாகங்களும், ‘அலுமினிய பார்ம் ஒர்க்’ அமைப்புகள் தகுந்த அளவில் கச்சிதமாக பணியிடத்தில் பொருத்தப்படும். அந்த அமைப்புகளுக்குள் ஒரே நேரத்தில் ஆர்.எம்.சி கான்கிரீட் உட்செலுத்தப்படும். அதன் பிறகு குறிப்பிட்ட காலத்துக்கு தக்க முறையில் கியூரிங் செய்யப்பட்டு, ‘கான்கிரீட் செட்டிங்’ காலம் முடிந்த பிறகு, முட்டுகள் பிரிக்கப்பட்டு, ஒட்டு மொத்த வீடும் உருவாக்கப்படுகிறது. வழக்கமாக கான்கிரீட் தளங்கள் கிடைமட்ட அளவில் மட்டும் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், மேற்கண்ட முறைப்படி செங்குத்தான சுவர்கள் மற்றும் பில்லர்கள், கிடைமட்ட தளங்கள் மற்றும் பீம்கள் ஆகிய அனைத்தும், ‘அலுமினிய பார்ம்’ முறையில் அமைத்து, அவற்றில் கான்கிரீட் வார்க்கப்பட்டு ஒரே தடவையில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.  

அடுக்குமாடிகளுக்கு பொருத்தம்

அறைகளின் அளவு, சீலிங் உயரம், தரைத்தளம், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை தக்க முறையில் திட்டமிட்டு அதற்கேற்ப பார்ம் ஒர்க் பணிகளை முடித்து கான்கிரீட் கலவையை அதற்குள் செலுத்தினால் போதுமானது. அதற்கு முன்னர், படிக்கட்டுகள் அமைப்பையும் முடிவு செய்து கொள்வது முக்கியம். பிறகு, கான்கிரீட் செட் ஆகும் காலத்தை கணக்கிட்டு, முட்டுக்களை அகற்றிவிட்டால் வீடு தயாராக இருக்கும். பிறகு சிறுசிறு மராமத்து வேலைகள் மட்டும் செய்துவிட்டு, தக்க பெயிண்டிங் செய்தால் போதுமானது. பொதுவாக
இவ்வகை கட்டுமான யுக்தியானது, அதன் எளிதான பணிகள் மற்றும் பட்ஜெட் ஆகிய காரணங்களால் இந்திய நகர்ப்புற அடுக்குமாடி வீடுகளுக்கு மிகவும் பொருத்தமான தொழில்நுட்பமாக சொல்லப்படுகிறது.

சாதகமான அம்சங்கள்

குறைவான வேலையாட்கள், நில அதிர்வுகளை தாங்குவது, கட்டமைப்பின் தரம், குறைவான கட்டுமான இணைப்புகள், அதிகமான கார்ப்பெட் ஏரியா, வளவளப்பான சுவர்ப்பரப்பு மற்றும் வேகமான கட்டமைப்பு ஆகிய சிறப்பம்சங்களை கொண்டதாக இந்த முறை உள்ளது. அதே சமயம், சுவர்கள், தரைத்தளம் மற்றும் சீலிங்–உடன் இணையும் பகுதிகளில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியதாகவும், அவற்றில் குறைகள் இருந்தால் மழைக்காலங்களில் நீர்க்கசிவுகள் ஏற்படுவதோடு, சுவர் அமைப்புகளை நமது விருப்பப்படி மாற்றி அமைக்கும் வாய்ப்புகளும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.   

குறைவான பட்ஜெட்

ஐரோப்பிய, ஆசிய நாடுகள் மற்றும் அரபு நாடுகள் பலவற்றிலும் மேற்கண்ட ‘மிவன் டெக்னாலஜி’ பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக, மும்பை போன்ற நெருக்கடியான நகரில் வேகமான கட்டமைப்புகளை அமைக்க இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு விரைவான பணி மற்றும் குறைவான பட்ஜெட் ஆகிய காரணங்களால் இதுபோன்ற கட்டுமான நுட்பங்கள் வெகுவாக கவனிக்கப்படுகின்றன.

Next Story