வீட்டு பராமரிப்புக்கு அவசியமான ஐந்து குறிப்புகள்


வீட்டு  பராமரிப்புக்கு  அவசியமான  ஐந்து  குறிப்புகள்
x
தினத்தந்தி 15 July 2017 2:30 AM IST (Updated: 14 July 2017 4:10 PM IST)
t-max-icont-min-icon

கட்டிடங்கள் செங்கல் மற்றும் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் உயிர்த்தன்மை இருப்பதாக வாஸ்து குறிப்பிடுகிறது.

ட்டிடங்கள் செங்கல் மற்றும் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் உயிர்த்தன்மை இருப்பதாக வாஸ்து குறிப்பிடுகிறது. அந்த சக்தியை சாதகமான அலை வீச்சு என்றும் சொல்லலாம். அதாவது, நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளுக்குள் ஒரு கட்டிடத்தை அமைக்க இயலாதது மற்றும் அவசியமான பராமரிப்புகள் செய்யாதது ஆகிய காரணங்களால் சம்பந்தப்பட்ட இடத்தில் எதிர்மறை சக்திகள் உருவாவதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அத்தகைய இடங்களில் நல்ல அலை

வீச்சுக்களை பரவச்செய்யும் எளிதான வழிகளையும் வாஸ்து சொல்கிறது. அவற்றை இங்கே காணலாம்.

1. ஜன்னல் திறப்பு அவசியம்


இப்போதைய கட்டிடங்கள் நகர்ப்புற வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடிகள் பலவற்றிலும் ‘குளுகுளு’ வசதி செய்யப்பட்டிருப்பது வழக்கம். அதன் காரணமாக, அவற்றில் அமைக்கப்பட்ட ஜன்னல்களை திறக்கும் வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. முக்கியமாக சமையலறை தவிர மற்ற அறைகளின் ஜன்னல்கள் பெரும்பாலான வீடுகளில் காட்சி பொருளாக உள்ளது. அடைக்கப்பட்ட ஜன்னல்கள் உணர்வு ரீதியான சிக்கல்களை மனதில் உண்டாக்குவதாக வாஸ்து சாஸ்திரம் விளக்கியிருக்கிறது. அதாவது வெளிப்புற காற்று வீட்டின் உட்புறமாகவும், வீட்டுக்கு உட்புற காற்று வெளிப்புறமாகவும் செல்வதற்கு தக்க வழி அமைத்து, காற்றோட்டத்திற்கான வழியை அமைக்கவேண்டும். அதனால், ‘எமோ‌ஷனல் பேலன்ஸ்’ என்று சொல்லப்படும் உணர்வுகளின் சமநிலை ஏற்படும்.

2. குளியலறையில் ஈரம் கூடாது

தண்ணீரின் பயன்பாடு காரணமாக, பல வீடுகளில் எல்லா நேரங்களிலும் குளியலறையில் ஈரப்பதம் இருந்துகொண்டிருக்கும். தண்ணீர் வழிந்து செல்வதற்கான வழிகள் செய்யப்பட்டிருந்தாலும், ஈரம் காய்வதற்கான வழிகள் பல வீடுகளில் இருக்காது. மேலும், மேல்மாடிகளில் அமைக்கப்பட்ட குளியலறை கழிவு நீர் குழாய்களில் நீர்க்கசிவுகளும் பல இடங்களில் இருக்கும். இந்த இரண்டு வி‌ஷயங்களும் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை பெற்றவை என்று வாஸ்து குறிப்பிடுகிறது. அதனால், குளியலறையின் தரைத்தளத்தை மிகவும் தாழ்வாக அமைக்கக்கூடாது. வடிகால் குழாய்களின் நீர்க்கசிவை தக்க முறையில் தடுப்பதோடு, ஈரப்பதம் எளிதில் உலரும் வாய்ப்புகள் இல்லாத இடங்களில் ‘எக்ஸ்ஹாஸ்ட் பேன்’ பொருத்தியும் குளியலறையை உலர்வாக வைக்கலாம்.  

3. சுத்தமான கண்ணாடிகள்

வீடுகளில் உள்ள பல்வேறு அறைகளில் அழகான கண்ணாடிகள் வைக்கப்பட்டிருக்கும். வீட்டின் நுழைவாசலில் வைக்கப்படும் கண் திருஷ்டிக்கான கண்ணாடி, அலங்காரம் செய்ய பயன்படும் ‘டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி’, குளியலறையில் உள்ள கண்ணாடி மற்றும் ஹால் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி என்று பல விதங்களில் அவை பயன்படுகின்றன. எந்த பகுதியில் வைக்கப்பட்ட கண்ணாடியாக இருந்தாலும் அவை சுத்தமாக பராமரிக்கப்படவேண்டியது மிகவும் அவசியம் என்ற குறிப்பை வாஸ்து தருகிறது. தூசிகள் படிந்த கண்ணாடி வீடுகளில் இருக்கும்பட்சத்தில், பிற குடும்பத்தார்களோடு கடைப்பிடிக்கும் சுமுகமான உறவுகளுக்குள் விரிசல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக வாஸ்து குறிப்பிடுகிறது.

4. வெளிச்சம் வேண்டும்

பல வீடுகளில் பகல் பொழுதிலும் மின்சார விளக்குகள் பயன்படுத்தப்படும் வழக்கம் உள்ளது. ஜன்னல் திரைகள் மற்றும் கதவுகளை அடைத்து வைத்துவிட்டு அறைகளுக்குள் தங்களது வேலைகளை பார்ப்பது இன்றைய நாகரிக வழக்கமாக இருக்கிறது. சூரிய வெளிச்சம் அறைகளுக்குள் வருவதற்கான வாய்ப்பு அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பதில்லை. இதன் காரணமாக உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திரம் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது. வெளிப்புற சத்தங்கள் அறைகளுக்குள் நுழையாமல் தடுக்க ஜன்னல், கதவுகள் அடைக்கப்படுவதும் உண்டு. இந்த முறையும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

5. சுத்தம் தேவையானது  

வீட்டில் உள்ள அறைகளில் உபயோகமில்லாத பொருட்களை போட்டு வைத்திருப்பதன் காரணமாக உணர்வு ரீதியான பாதிப்புகளால், சண்டை சச்சரவுகள் வரும் வாய்ப்புகள் இருப்பதாக வாஸ்து குறிப்பிடுகிறது. அதாவது, பல வருடங்களாக உபயோகமில்லாமல் வைக்கப்பட்டுள்ள பொருட்களிலிருந்து எதிர்மறை சக்திகள் பரவுவதாக அறியப்பட்டுள்ளது. அத்தகைய பொருட்களை அறைகளிலிருந்து அகற்றி விடுவது அவசியமானது.

Next Story