கட்டிட பராமரிப்பை எளிதாக்கும் ‘பெயிண்டிங்’ முறைகள்


கட்டிட பராமரிப்பை எளிதாக்கும் ‘பெயிண்டிங்’ முறைகள்
x
தினத்தந்தி 4 Aug 2017 10:45 PM GMT (Updated: 4 Aug 2017 12:08 PM GMT)

சின்ன பட்ஜெட் வீடுகள் அல்லது பெரிய பட்ஜெட் வீடுகள் ஆகிய எவ்வகை வீடாக இருந்தாலும் கச்சிதமாக வெள்ளை அடிக்கப்படும்போது பார்க்க நன்றாக இருக்கும்.

சின்ன பட்ஜெட் வீடுகள் அல்லது பெரிய பட்ஜெட் வீடுகள் ஆகிய எவ்வகை வீடாக இருந்தாலும் கச்சிதமாக வெள்ளை அடிக்கப்படும்போது பார்க்க நன்றாக இருக்கும். வழக்கமான சுண்ணாம்பு ‘கோட்டிங்’ தரப்பட்டாலும் சந்தையில் கிடைக்கக்கூடிய தரமான வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் ஒட்டு மொத்த வீடும் கண்ணை கவருவதாக இருக்கும். பொதுவாக, சுவர்களுக்கு பெயிண்டு பயன்படுத்துவதால் அவற்றின் ஆயுட்காலம் அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது. சுவருக்கான வண்ண பூச்சுகள் பற்றி நிபுணர்கள் தரக்கூடிய சில முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.

முதலில் சீலிங்

சுவர்களுக்கான பெயிண்டு பூசப்படுவதில் கச்சிதமான முறையை பின்பற்றுவதன் மூலம் பல குறைபாடுகளை தொடக்கத்திலேயே தவிர்த்துவிட முடியும். முதலில் ‘சீலிங்’ பகுதிகளுக்கு பெயிண்டு அடித்து முடித்த பிறகே, இதர சுவர்களுக்கான பூச்சு வேலையை தொடங்க வேண்டும். பிறகு, கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கும் பெயிண்டு பூசுவது என்பதுதான் சரியான முறையாகும்.

பெயிண்டு வகைகள்

சுவர்கள் மற்றும் சீலிங் பகுதிகளில் ‘வாட்டர் பேஸ்டு’ பெயிண்டு வகைகள் அல்லது ‘எமல்‌ஷன்’ பெயிண்டு வகைகளை தேர்வு செய்யலாம். அல்லது ஆலோசகர்கள் தெரிவிக்கும் ‘லேட்டக்ஸ்’ அல்லது ‘பிளாஸ்டிக்’ அடிப்படை கொண்ட பெயிண்டுகளையும் தேர்வு செய்யலாம். சுவர்கள் பளபளப்பாக இருக்க ‘ஷைன்’ வகையும், சற்று கடினமான மேற்பரப்பு கொண்டதாக இருக்க ‘மேட்’ வகையும், நல்ல பாலிஷாக இருக்க ‘ஹைஷைன்’ வகையும் சந்தையில் கிடைக்கின்றன. நமது தேவைகளுக்கு ஏற்ப அவற்றில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம். எளிதாக சுவர்களை கழுவக்கூடிய வகையில் இருக்கும், பூஞ்சைகளால் தாக்கப்படாத பெயிண்டு வகையும் இப்போது கிடைப்பது கவனிக்கத்தக்கது.

உலோக பரப்புகள்

அலுமினியம், செம்பு மற்றும் எவர்சில்வர் போன்ற உலோகத்தால் அமைக்கப்பட்ட பரப்புகளுக்கு கரையும் தன்மை கொண்ட எனாமல் பெயிண்டு வகைகள் கச்சிதமாக இருக்கும். அவற்றில் பளபளப்பு மற்றும் துருப்பிடிப்பதை தடுக்கும் தன்மை கொண்ட வகைகளும் கிடைப்பதால் அவற்றையும் பயன்படுத்தி உலோக பரப்புகளை பாதுகாக்க இயலும்.

மரப்பொருட்கள்

மரத்தால் செய்யப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் அவற்றின் தன்மைகள் மற்றும் நிறம் ஆகியவை பாதிக்கப்படாமல் பளபளப்பாக வைக்கும் பல்வேறு பெயிண்டு வகைகள் இப்போது கிடைக்கின்றன. நமக்கு தேவை என்றால் மரத்தின் அடையாளத்தையே முற்றிலும் மறைத்து பூசக்கூடிய பெயிண்டு வகைகளும் கிடைக்கின்றன.

‘பிரஷ்’ வகைகள்

பெயிண்டு வகைகள் பூசப்படுவதற்கு ‘பிரஷ்’ அல்லது ‘ரோலர்’ வகையை பயன்படுத்தலாம். பொதுவாக, பெயிண்டு தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரை செய்யும் பிரஷ் வகையை பயன்படுத்துவது சரியானதாக இருக்கும். மேலும், ‘சீலிங்’ மற்றும் சுவர் பகுதிகளுக்கு முதலில் ‘பிரஷ்’ பயன்படுத்தி வெள்ளை அடித்துவிட்டு, பிறகு ‘ரோலர்’ கொண்டு இரண்டாவது ‘கோட்டிங்’ பூசப்படும்போது சுவர்கள் நல்ல ‘பினிஷிங்’ ஆக இருக்கும் என்று பெயிண்டர்கள் கூறுவது கவனிக்கத்தக்கது.

சரியான தேர்வு

கரையக்கூடிய தன்மை கொண்ட பெயிண்டு வகைகளை உலோகம் மற்றும் மரப்பொருட்களில் அடிப்பதற்கு, அதன் தயாரிப்பாளர்கள் பரிந்துரை செய்யும் பிரஷ் வகைகளை தேர்வு செய்வதுதான் பாதுகாப்பானது. வீடுகள் அழகாக இருக்க எந்த வகை வண்ணம் கச்சிதமாக இருக்கும் என்பதில் பலருக்கும் குழப்பமாக இருக்கும். அறைகளுக்கான பெயிண்டு என்ன..? என்பதை முடிவு செய்யும் முன்னர் அவற்றின் உள் அலங்கார அமைப்புகளை மனதில் கொண்டு செயல்படுவது சரியாக இருக்கும். மேலும், புளோர் டைல்ஸ் நிறம், அறைகளில் இருக்கும் பர்னிச்சர்கள், ஜன்னல் திரைகளின் நிறம் ஆகியவற்றையும் மனதில் கொண்டு அதற்கு தகுந்த வண்ணங்களை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது.

கால நிலை முக்கியம்

கட்டிடங்களின் வெளிப்பக்கம் பெயிண்டிங் செய்யப்படும் சமயத்தில் வெயில் அதிகமாக இல்லாத காலமாகவும், மழையால் ஈரப்பதம் அதிகமாக இல்லாத காலமாகவும் இல்லாது கவனித்துக்கொள்ளவேண்டும். வீடுகளின் உட்புறத்தில் பெயிண்டு பூசுவதற்கு அவ்வளவு கவனம் தேவையிருக்காது. போதுமான வெளிச்சம் இருந்தால் மட்டும் போதுமானது. பெயிண்டிங் வாசனை விரைவாக வெளியேறவும், விரைவில் உலரவும் கதவு, ஜன்னல்களை நன்றாக திறந்து வைப்பது முக்கியம். புதிதாக சிமென்ட் பூச்சு செய்யப்பட்ட சுவருக்கு வெள்ளையடிக்க கால அவகாசம் வேண்டியதில்லை என்றாலும் தகுந்த ஆலோசனை பெற்று வேலையை செய்து முடிக்கலாம்.


Next Story