பத்திர பதிவை எளிமையாக்கும் புதிய திட்டம்


பத்திர  பதிவை  எளிமையாக்கும்  புதிய  திட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2017 3:00 AM IST (Updated: 11 Aug 2017 4:24 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள், வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றை வாங்குவது மற்றும் விற்பது உள்ளிட்ட பரிமாற்றங்களை செய்யும்போது அவற்றை தக்க ஆவணங்களாக பதிவு செய்வது அவசியமானது.

வீடுகள், வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றை வாங்குவது மற்றும் விற்பது உள்ளிட்ட பரிமாற்றங்களை செய்யும்போது அவற்றை தக்க ஆவணங்களாக பதிவு செய்வது அவசியமானது. சொத்துக்களுக்கான ஆவணங்களை பதிவு செய்வதற்கு தமிழக அளவில் 570–க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அமைந்துள்ள குறிப்பிட்ட சார்பதிவு எல்லைகளுக்கு உட்பட்ட கிராமங்கள், ஊர்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றில் வசித்து வரும் மக்கள் தங்களது ஆவணங்களை அங்கே பதிவு செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

முன்னரே அறிமுகம்

பல்வேறு தரப்பினருக்கும் பயன்தரும் விதமாக, பத்திர பதிவை சுலபமாக்க வேண்டி, ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்து, பெரம்பலூர், நாகப்பட்டினம் உட்பட தமிழ்நாடு முழுவதும் 9 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் பத்திர பதிவு முறையை முன்னர் அறிமுகம் செய்திருந்தது.

இம்மாதத்தில் நடைமுறை

இந்நிலையில், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், கரூர் மாவட்டம், தஞ்சாவூர் பதிவு துறை மண்டலம் உட்பட தமிழ்நாடு முழுவதும், 41 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறையானது இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் பதிவு துறையின் 50 மாவட்டங்களிலும் தலா ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது. வீடு மற்றும் மனைகள் உள்ளிட்ட சொத்துக்களுக்கான பதிவுகள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான முறைகள்

தற்போது அறிமுகமாகியுள்ள ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டத்துடன், ஏற்கெனவே உள்ள வழக்கமான நடைமுறைகளின்படியும் பத்திரப்பதிவுகள் நடைபெறும். ஓரிரு மாதங்களுக்கு பிறகு முற்றிலும் ஆன்லைன் நடைமுறை மட்டும் பின்பற்றப்படும்படி மாற்றியமைக்கப்படும். இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு, ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தின் பதிவேடுகளை, இன்னொரு அலுவலகத்திலிருந்தும் சரிபார்க்க முடியும்.

அனைவருக்கும் பயன்

இந்த முறையின் காரணமாக, பத்திர பதிவுக்காக நீண்ட நேரம் காத்திருப்பது, அலுவலக நடைமுறைகளில் ஏற்படும் காலதாமதம், பத்திர பதிவு மற்றும் ஆவணங்களை பெறுவதில் உண்டாகும் தாமதம் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்படுவதோடு, போலி ஆவண பதிவுகள் உள்ளிட்ட முறைகேடுகள் தடுக்கப்படும் என்று பதிவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story