கட்டிடங்களின் வலிமைக்கு மறு சீரமைப்பு முறைகள் அவசியம்


கட்டிடங்களின்  வலிமைக்கு  மறு  சீரமைப்பு  முறைகள்  அவசியம்
x
தினத்தந்தி 12 Aug 2017 3:30 AM IST (Updated: 11 Aug 2017 4:36 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக, கட்டமைப்புகள் 20 வருடங்களை கடந்த நிலையில் அவற்றின் வலிமை மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றை உறுதி செய்து கொள்வதற்கு அவற்றை மறுசீரமைப்பு செய்வது அவசியமானதாகும்.

பொதுவாக, கட்டமைப்புகள் 20 வருடங்களை கடந்த நிலையில் அவற்றின் வலிமை மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றை உறுதி செய்து கொள்வதற்கு அவற்றை மறுசீரமைப்பு செய்வது அவசியமானதாகும். அவ்வாறு சீரமைப்பு பணிகளை செய்யும்போது வெளிப்புறம் மற்றும் உட்புறம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளில் கவனம் செலுத்தி, அவற்றை மேலும் அழகாக மாற்றிக்கொள்ளலாம்.

சுவர்கள் கவனம்

கட்டுமான தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக, அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை வீடுகளின் மறுசீரமைப்பின்போது செய்துகொள்வது பலருக்கும் வழக்கம். அதனால், பழைய வீடுகள் புதிய வீடுகளாக ஜொலிப்பது கவனிக்கத்தக்கது. மறு சீரமைப்பு பணிகளின்போது அனைத்து சுவர்களின் தரத்தையும் தக்க பரிசோதனைகள் மூலம் அறியவேண்டியது அவசியம். சுவர்களின் தன்மை, அவற்றின் ‘பெயிண்டிங்’ மற்றும் விரிசல்கள் ஆகியவற்றால் பாதிப்புகள் இருக்கிறதா..? என்பதை கச்சிதமாக உறுதி செய்து கொண்ட பிறகு இதர பணிகளை தொடங்கவேண்டும்.

சுவர்களின் பெயிண்டிங்

பழைய வர்ணப் பூச்சுகளை சுவரிலிருந்து முற்றிலும் அகற்றிய பிறகே, புதிய பெயிண்டிங் வேலையை தொடங்கவேண்டும். அதன் மூலம் சுவர்களின் பழைய தோற்றம் மறைந்து, சுவர்கள் புதியதாக மாறுவதோடு, பளபளப்பாகவும் இருக்கும். மேலும், வர்ணங்கள் பார்ப்பதற்கு மட்டும் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல், சுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாகவும் அமைய வேண்டும். குறிப்பாக, சுவர் விரிசல், ஈரம் மற்றும் நீர்க்கசிவு போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் நவீன பெயிண்டு வகைகள் சந்தையில் கிடைப்பதை மனதில் கொள்ளவேண்டும்.

வண்ணங்களின் உளவியல்

அறைகளின் சுவர்களுக்கு ‘பெயிண்டிங்’ செய்யும்போது வண்ணங்களுக்கான உளவியலை கவனத்தில் கொள்வது அவசியம். காரணம், நிறங்கள் நேரடியாக மனதில் தமது சாதகமான அல்லது பாதகமான பாதிப்புகளை உண்டாக்குவதாக அறியப்பட்டுள்ளது. அதனால், இனிமையான மற்றும் மென்மையான உணர்வுகளை உண்டாக்கும் வண்ணங்களை கச்சிதமாக அறிந்து பயன்படுத்தவேண்டும்.

அழகிய புகைப்படங்கள்

படிக்கும் அறை, உணவு அறை, படிக்கும் அறை உள்ளிட்ட மற்ற அறைகளின் சுவர்களில் இயற்கை காட்சிகள், அழகிய வன விலங்குகள், ஓவியங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படங்கள் போன்றவற்றை மாட்டி வைத்து சம்பந்தப்பட்ட இடத்தின் அமைப்பை வித்தியாசமாக மாற்றி அமைக்க முடியும்.

வால்பேப்பர்கள்

சுவர் அலங்காரங்களுக்கு அழகு சேர்க்கும் வகையில் விதவிதமான அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட ‘வால்பேப்பர்கள்’ பலவித டிசைன்களில் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. கண்களையும், மனதையும் ஒருங்கே கவரும் ‘வால்பேப்பர்களை’ வரவேற்பறைகளில் பயன்படுத்தி அழகாக காட்டலாம்.

‘ரூம் பார்ட்டி‌ஷன்கள்’

அறைகள் சற்று பெரியதாக இருக்கும் பட்சத்தில் வசதிகளுக்கு ஏற்ப ‘ரெடிமேடு ரூம் பார்ட்டி‌ஷன்’ அமைப்புகள் கொண்டு தடுப்புகளை அமைக்கலாம். அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பல்வேறு ‘ரெடிமேடு ரூம் பார்ட்டி‌ஷன்கள்’ இப்போது நிறைய இருக்கின்றன. அத்தகைய அறை தடுப்புகள் கண்ணாடிகளில் அழகிய டிசைன்கள் செய்யப்பட்டும் கிடைக்கின்றன. மரத்தில் கண்கவரும் வேலைப்பாடுகள் கொண்ட ‘வுட்டன் பார்ட்டி‌ஷன்களும்’ இருக்கின்றன. மரச்சாமான்களை பொதுவாக ‘வார்னிஷ்’ பூசி பொலிவை ஏற்படுத்துவது வழக்கம். மேலும், ‘டச் வுட் பெயிண்ட்’ முறைப்படியும் பராமரிப்புகள் செய்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

கண் கவரும் தரைத்தளம்

பழைய தரைக்கு மாற்றாக, புதிய தரையை அமைப்பது வீட்டின் அழகை பல மடங்காக மாற்றும் என்று வல்லுனர்கள் சொல்வதை கவனத்தில் கொள்ளலாம். காரணம் வீட்டுக்கு வருபவர்கள் கவனத்தை முதலில் தரைத்தளம்தான் கவர்கிறது என்று அறியப்பட்டுள்ளது. மேலும், பெரிய அறைகளின் தரைத்தள மாற்றத்துக்கு அதிகமாக செலவு ஆகக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில், கச்சிதமான தரை விரிப்புகளை கொண்டு தரையை அழகுபடுத்தலாம். அதற்கேற்ப விதவிதமான வண்ணங்களில் பல்வேறு தரை விரிப்புகள் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.

Next Story