குறைந்த பட்ஜெட்டில் பளபளப்பான தரைத்தளம் அமைக்கலாம்


குறைந்த பட்ஜெட்டில் பளபளப்பான  தரைத்தளம் அமைக்கலாம்
x
தினத்தந்தி 19 Aug 2017 5:00 AM IST (Updated: 18 Aug 2017 7:29 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளின் தரைத்தளங்கள் இப்போது மார்பிள் உள்ளிட்ட பல்வேறு டைல்ஸ் வகைகளால் அட்டகாசமாக அமைக்கப்படுகிறது.

வீடுகளின் தரைத்தளங்கள் இப்போது மார்பிள் உள்ளிட்ட பல்வேறு டைல்ஸ் வகைகளால் அட்டகாசமாக அமைக்கப்படுகிறது. செராமிக், மார்பிள், கிரானைட் மற்றும் எளிமையான ‘பாலிஷ்டு கான்கிரீட் தளம்’ என்று தரைத்தளங்கள் வடிவமைக்கப்படுகின்றன. எல்லா இடங்களிலும் அவ்வாறு ‘காஸ்ட்லியான’ தரைகளை அமைப்பது இயலாது என்ற நிலையில் குறைவான பட்ஜெட் கொண்ட ஆக்ஸைடு வகை ரசாயன பூச்சு மூலமும் தரைத்தளம் அமைக்கப்படுகிறது.

‘கான்கிரீட் ஸ்டாம்பிங்’

இன்றைய காலத்திலும்கூட பழைய வீடுகளில் குளிர்ச்சியாக இருக்கும் தரைப்பரப்பை பலரும் கவனித்திருக்கலாம். மேலும் அவை, சிவப்பு அல்லது பச்சை ஆகிய வண்ணங்களில் இருக்கும். சாதாரன கான்கிரீட் தளத்தில் தக்க அளவில் வர்ணமாக பூசப்பட்டு, அதன் ஓரங்களில் ‘பார்டர்கள்’ அல்லது ‘கான்கிரீட் ஸ்டாம்பிங்’ எனப்படும் பல்வேறு பூக்கள் அல்லது உருவ அமைப்புகள் ஆகியவை ‘டிசைன்களாக’ பதிக்கப்பட்டிருக்கும்.  

பல வண்ணங்கள்

ஒட்டு மொத்த செலவுகள், அதன் உத்தரவாதம் ஆகிய நிலைகளில் ஆக்சைடு தரைத்தளங்கள் சிறப்பானதாக கருதப்படுகின்றன. பச்சை, நீலம், கறுப்பு எனப் பல வண்ணங்களில் ஆக்ஸைடு தரைகள் அமைக்கும் வாய்ப்பு இருப்பினும், பச்சை மற்றும் சிவப்பு ஆக்ஸைடு ஆகிய வண்ணங்களே பரவலாக உபயோகத்தில் உள்ளது. வீடுகளை விடவும் ‘கார் ஷெட்’, உட்புற நடைபாதைகள், தொழிற்சாலை தரைகள் அல்லது வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் பெரும்பாலும் இவ்வகை தரைகளே பயன்பாட்டுக்காக அமைக்கப்படுகிறது.

* ரெட் ஆக்சைடு மற்றும் கிரீன் ஆக்ஸைடு தரைகளை பொறுத்தவரையில் காலப்போக்கில்தான் அவற்றின் பளபளப்பு அதிகரிக்கும். இதர தரைகளுக்கான பராமரிப்புகள் இவற்றிற்கு தேவைப்படுவதில்லை. செலவும் குறைவு.

* இவ்வகை தரைகளை ‘பாலீஷ்’ செய்வதற்கு அதிகபட்சமாக 12 மணி நேரம் பிடிக்கலாம். அதற்கான வேலைகளை அறிந்த பணியாளர்கள் கச்சிதமாக தரைத்தள வேலைகளை செய்வது நல்லது.

* ஒரு பங்கு ரெட் ஆக்சைடு, ஒரு பங்கு சிமெண்டு மற்றும் சலிக்கப்பட்ட ஆற்றுமணல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து குழம்பு போல கலக்கி தரையில் சிமெண்டு தரையில் கச்சிதமாக பூசிய பிறகு, பாலீஷ் செய்வேண்டும்.

* தரைத்தளம் அமைக்கப்பட்ட அடுத்த நாளிலிருந்து மூன்று மணி நேரங்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதோடு, உப்புகள் அதிகமாக கலந்திருக்கும் போர்வெல் நீராக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.    

* ஒரு பங்கு ஆக்சைடுக்கு மூன்று பங்கு சிமெண்டு பயன்படுத்தினால் கலவை தயார் செய்தால், கருஞ்சிவப்பு நிற தரைத்தளம் கிடைக்கும். சிமெண்டு அளவை அதிகமாக்கினால் அது வெளிர் சிவப்பாக தோன்றும். வெள்ளை சிமெண்ட் வகை பயன்படுத்தும்போது கலவையில் கவனம் தேவை.

* கச்சிதமாக அமைக்கப்படும் ரெட் ஆக்சைடு தரையானது நீண்ட காலம் உழைப்பதோடு, நல்ல பளபளப்பாகவும் இருக்கும். ரெட் ஆக்சைடு தரைகள் கொண்ட பழைய கட்டிடங்கள் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் உழைப்பது அறியப்பட்டுள்ளது.

* இத்தகைய தரைகளை அமைக்க மூலப்பொருட்கள் விலை மலிவாகவே கிடைப்பதோடு, சதுர அடி கணக்கில் நமது பட்ஜெட்டுக்கு பாதுகாப்பாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

Next Story